என் மலர்
வழிபாடு
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்
- நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி 12-ந்தேதி நடக்கிறது.
- தேரோட்டம் 17-ந்தேதி நடக்கிறது.
திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவ திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, அழகியநம்பிராயர் மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. ராமானுஜ ஜீயர் முன்னிலையில் கோவில் கொடி மரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக கொடி பட்டம் பல்லக்கில் வைக்கப்பட்டு ரதவீதிகளில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவை முன்னிட்டு தினமும் யாகசாலை பூஜைகள், சிறப்பு திருமஞ்சனம், காலை மற்றும் இரவில் அழகியநம்பிராயர் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி 5-ம் நாளான வருகிற 12-ந் தேதி நடக்கிறது. அன்று இரவில் 5 நம்பி சுவாமிகளும் கருட வாகனத்தில் எழுந்தருளுகின்றனர். மறுநாள் அதிகாலையில் நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு திருக்காட்சி கொடுக்கின்றனர். சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் திருநாளான வருகிற 17-ந் தேதி நடக்கிறது.
திருவிழா ஏற்பாடுகளை ஜீயர் மடத்தின் பவர் ஏஜெண்டு பரமசிவன் தலைமையில் கோவில் ஊழியர்கள், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.