என் மலர்
வழிபாடு
திருமலை வசந்த மண்டபத்தில் விஷ்ணு சாளக்கிராம பூஜை
- திருமலையில், வசந்த மண்டபத்தில் விஷ்ணு சாளக்கிராம பூஜை.
- வாசனை திரவியங்களால் சாளக்கிராம கற்களுக்கு சிறப்பு அபிஷேகம்.
திருமலை:
உலக மக்கள் நன்மைக்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் விஷ்ணு சாளக்கிராம பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சி ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் மாலை 3 மணியில் இருந்து 4.30 மணி வரை ஒளிப்பரப்பப்பட்டது.
முன்னதாக கோவிலில் இருந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமியை நான்கு மாடவீதிகள் வழியாக வசந்த மண்டபத்துக்கு கொண்டு வந்தனர்.
அங்கு உற்சவர்கள் முன்னிலையில் பிரதான அர்ச்சகர்கள் விஷ்ணு சாளக்கிராம பூஜை, பிரார்த்தனை சூக்தம், அஷ்டதிக் பாலக பிரார்த்தனை, நவக்கிரக பிரார்த்தனைகளுடன் பூஜையை தொடங்கினர். வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத அர்ச்சகர்கள் பால், தயிர், சந்தனம், மஞ்சள் மற்றும் பிற வாசனை திரவியங்களால் சாளக்கிராம கற்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
அதன்பின் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கும், சாளக்கிராமங்களுக்கும் ஆரத்தி காண்பித்தனர். இதையடுத்து பிரசாதம் வழங்கி வேத மந்திரம் மற்றும் மங்களத்துடன் பூஜை முடிந்தது.
சாளக்கிராமம் மகாவிஷ்ணுவின் உண்மையான அவதாரம். சாளக்கிராம பூஜையால் அனைத்து மக்களையும் காத்து, அவர்களின் துன்பங்கள் நீங்கும். சாளக்கிராமங்களில் செய்யப்படும் அபிஷேக தீர்த்தத்தை உட்கொண்டால், சகல பாவங்களும் நீங்கும், சகல நோய்களும் விலகும் என்பது ஐதீகம் என்று பண்டிதர் ராமகிருஷ்ண சேஷசாயி கூறினார்.
சாளக்கிராம பூஜையில் தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி தம்பதியர் மற்றும் தர்மகிரி வேத பள்ளியின் வேத பண்டிதர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.