என் மலர்
செய்திகள்
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் மகளிர் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் உன்னத நோக்கத்துடன் தொடங்கப்பட்ட கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகம் ஊழல்கள் மற்றும் முறைகேடுகளில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது.
அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர் வள்ளியும், பதிவாளர் சுகந்தியும் அப்பதவிகளுக்கு தகுதியற்றவர்கள். ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் தான் இவர்களுக்கு இந்த பதவிகள் கிடைத்தன. இவர்களின் ஊழல்களுக்கு துணையாக இருக்கும் பொருளாதாரத்துறை பேராசிரியர்கள் கலைமதி, சுந்தரி ஆகிய இருவரும் ஓய்வு பெற்ற பின்னரும் தேவையின்றி இரு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
துணைவேந்தர், பதிவாளர் ஆகிய இருவரையும் பொம்மையாக வைத்துக் கொண்டு இவர்கள் இருவரும் தான் சென்னையிலும், கொடைக்கானலிலும் இருந்தவாறு பல்கலைக்கழக நிர்வாகத்தை ஆட்டிப் படைக்கின்றனர்.
பதவி உயர்வு முதல் பணியிட மாற்றம் வரை இவர்கள் இருவருக்கும் பணம் கொடுத்தால் மட்டுமே நடக்கும். துணைவேந்தர் மற்றும் அவரது ஆலோசகர் கையூட்டு வாங்கிக் கொண்டு தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சென்னை, மதுரை, கோவை ஆகிய ஊர்களில் உள்ள விரிவாக்க மையங்களுக்கு பணியிட மாற்றம் வழங்குவதுடன், அவர்களுக்கு விதிகளை மீறி மலைப் பணி படி, குளிர்காலப்படி ஆகியவற்றையும் வழங்கி பல்கலைக்கழகத்துக்கு இழப்பை ஏற்படுத்துகின்றனர்.
பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்திலும் ஊழல்கள் நடந்துள்ளன. ரூசா எனப்படும் தேசிய உயர்கல்வி திட்டப்படி பல்கலைக்கழக வளர்ச்சிக்கு வழங்கப்பட்ட நிதியிலும் முறைகேடுகள் நடந்துள்ளன. இவை குறித்து அரசிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.
ஆளுனர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட புகார் மனுக்களும் குப்பையில் வீசப்பட்டுவிட்டன. பல மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தி வரும் ஆளுனர், அதற்கு பதிலாக பல்கலைக்கழகங்களுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும்.
முதல்கட்டமாக அன்னை தெரசா பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்து, அங்கு நடந்துள்ள ஊழல்கள் குறித்து கையூட்டுத் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். #AnbumaniRamadoss #PMK
சென்னை:
சென்னை விருகம்பாக்கத்தில் திமு.க.வினர் சிலர் பிரியாணி கடைக்குள் புகுந்து பிரியாணி கேட்டு நடத்திய தாக்குதல் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி அறிந்ததும் மு.க.ஸ்டாலின் கட்சியினர் மீது நடவடிக்கை எடுத்ததோடு கடைக்கும் நேரில் சென்று காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இதுபற்றி மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
விருகம்பாக்கத்தில் தாக்குதல் சம்பவம் நடைபெற்ற கடைக்குச் சென்று ஓட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். இது போன்ற கண்டிக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவோருக்கு கழகத்தில் எக்காரணம் கொண்டும் இடமில்லை என்பதை தெளிவுபடுத்தினேன்.
தி.மு.க.விற்கு அவப்பெயரை உருவாக்கும் விதத்திலும், லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பை வீணாக்கும் வகையிலும் செயல்படும் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதைப் போல மேட்டூர் அணை நிரம்பி வழிந்தும் கூட காவிரி கடைமடை பாசனப் பகுதிகளுக்கு காவிரி நீர் சென்றடையாததால் குறுவை நெல் பயிர்களுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை. அதேநேரத்தில் மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீரில் பெரும் பகுதி விவசாயத்துக்குப் பயன்படாமல் வங்கக் கடலில் கலந்து வீணாகியிருக்கிறது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீர் அடுத்த 3 நாட்களில் கல்லணைக்கும், அடுத்த ஒரு வாரத்தில் அனைத்து கடைமடை பகுதிகளையும் சென்றடைவது வழக்கமாகும்.
ஆனால், இம்முறை மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்றுடன் 13 நாட்களாகியும் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலுள்ள கடைமடை பாசனப் பகுதிகளை சென்றடையவில்லை. காவிரி ஆறு பூம்புகார் கடலில் கலப்பதற்கு முந்தைய இடமான நாகை மாவட்டம் மேலையூர் கடைமடைத் தேக்கத்திற்கு கடந்த ஜூலை 29-ந் தேதியே தண்ணீர் வந்து விட்ட போதிலும், அதற்கு முன்பாக உள்ள கடைமடைப் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் இன்னும் சென்றடையவில்லை.
அதேநேரத்தில் கடந்த சில நாட்களில் மட்டும் காவிரி மற்றும் கொள்ளிடம் வழியாக கிட்டத்தட்ட 16 டி.எம்.சி. வீணாக கடலில் கலந்துள்ளது. இதை விட மிகக்கேவலமான நீர் மேலாண்மை வேறு எங்கும் கடைபிடிக்கப்படாது.
தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறவில்லை. நடப்பாண்டிலாவது மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்பட்டால் கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடைய வசதியாக காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளிலும், பாசனக் கால்வாய்களை தூர்வார வேண்டும் என பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
கடந்த மாதம் 19-ந் தேதி மேட்டூர் அணை திறப்பு விழாவில் தடுப்பணைகள் கட்டுவது குறித்த முதல்வரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பா.ம.க. சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் தடுப்பணைகளை கட்டவும், கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், மக்கள் நலனில் அக்கறையற்ற அரசு அதை செய்யாததன் விளைவு தான் உழவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மேட்டூர் அணையிலிருந்து கடந்த வாரம் வினாடிக்கு 76,611 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போதே காவிரிப் பாசன மாவட்டங்களுக்கு தண்ணீர் சென்றடையாத நிலையில், நேற்று முதல் வெறும் 19,000 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் நிலையில் நிச்சயமாக கடைமடைக்கு தண்ணீர் சென்றடையாது. இதனால் மிகவும் மோசமான பாதிப்புகள் ஏற்படும்.
இதைத் தடுக்க காவிரி கிளை ஆறுகள் மற்றும் பாசனக் கால்வாய்களை தூர்வாரி சீரமைப்பதுடன், அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் மேலாக காவிரி படுகைகளில் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்க வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் தடுப்பணைகளை கட்ட அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Ramadoss #Cauvery
கோர்ட்டு உத்தரவு காரணமாக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறி உள்ளார்.
இது குறித்து அவர் ‘மாலைமலர்’ நிருபரிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2016-ம் அண்டு அக்டோபர் மாதம் முறையாக தேர்தல் நடத்தி இருக்க வேண்டும். ஆனால் மாநில தேர்தல் ஆணையம் எஸ்.டி.பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீட்டை ஒதுக்காமல் தேர்தல் நடத்த முற்பட்டதால் அதை சரி செய்து தேர்தலை நடத்துமாறு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம்.
பின்னர் இதை ஒழுங்குப்படுத்திய தேர்தல் ஆணையம் வார்டு மறுவரையறை செய்து தேர்தல் நடத்துவதாக கூறியது. அதன் பிறகு வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி முடிவடையவில்லை என்று தேர்தல் ஆணையம் காரணம் கூறியது.
இதனால்தான் தி.மு.க. சார்பில் நாங்கள் மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோம். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது ஐகோர்ட்டு நீதிபதிகள் கடும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.
தேர்தல் அட்டவணையை 6-ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும், இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
எனவே இந்த சூழ்நிலையில் அக்டோபர் மாதத்திற்குள் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்யும் என்று நம்புகிறேன்.
கோர்ட்டில் தேர்தல் ஆணையம் மேலும் கால அவகாசம் கேட்டால் அதை கோர்ட்டு ஏற்றுக்கொள்ளாது. எனவே தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்திதான் ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #HighCourt #CivicPolls #RSBharathi
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம் என்றால் அது தேசிய ஊரக சுகாதார இயக்கம் தான். இந்த திட்டத்தை 2005-ம் ஆண்டில் நான் தான் தொடங்கினேன். இந்தத் திட்டத்தின்படி தான், தமிழகத்தில் சீரழிந்து காணப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களும், அரசு மருத்துவமனைகளும் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றன.
கருவுற்ற தாய்மார்களுக்கு மகப்பேறு பார்க்க உதவுவதில் தொடங்கி முதல்-அமைச்சரின் உயிரைக் காப்பது வரை அனைத்துக்கும் உதவுவது நான் தொடங்கி வைத்த 108 அவசர ஊர்தித் திட்டம் தான்.
மக்களுக்கு பெருந்தீமையை ஏற்படுத்தும் குட்காவை தடை செய்தது நான் தான். மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக அமைச்சராக நான் படைத்த சாதனைகள் இத்துடன் முடிந்து விடவில்லை. அவற்றை முழுமையாக பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது என்பது தான் உண்மை.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது மக்களுக்காக நான் செய்த பணிகள் என்ன? முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்த பணிகள் என்ன? என்பது குறித்தும் விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன்.
முதல்-அமைச்சர் குறிப்பிடும் நாளில், குறிப்பிடும் இடத்தில் விவாதத்தை நடத்திக் கொள்ளலாம். இதற்கு தயாரா? என்பதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #AnbumaniRamadoss #EdappadiPalaniswami
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, மேட்டூர் அணையிலிருந்து, புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் நடப்பாண்டு பாசனத்திற்காக 1.8.2018 முதல் தண்ணீரை திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதன் மூலம், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 42,736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாயின் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய்களில் இரட்டைப்படை மதகுகள் ஆகியவற்றின் கீழ் பாசனம் பெறும் நிலங்களுக்கு 1.8.2018 முதல் 28.11.2018 முடிய 120 நாட்களுக்கு தண்ணீரை திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால், ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி, பெருந்துறை, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி, திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் வட்டம் மற்றும் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி வட்டம் ஆகியவற்றில் உள்ள 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNCM #EdappadiPalaniswamy
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்னும் பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
கேள்வி:- “இந்தியன்-2க்கு அப்புறம் நடிக்க மாட்டீர்கள் என்று சொல்கிறார்களே?”
பதில்:- “அவர்கள் தான் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதை காலம்தான் அதை முடிவு செய்யும். அப்ப முழு நேர அரசியல்வாதியாக ஆக மாட்டீங்களா என்று கேட்கிறார்கள்.
கே:- இங்கு முழு நேர அரசியல்வாதி யார்?.
ப:- ஒருத்தரை சொல்லுங்கள் பார்க்கலாம். நான் முதலில் மனிதன் பிறகு கலைஞன். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை வேண்டும். வெள்ளைக்காரன் காலத்துல தியாகம் செஞ்சு அரசியல் செஞ்சது வேற. இப்போது அப்படி நடிக்க அவசியமில்லை. இது துறவு அல்ல.. எனக்கும் கொஞ்சம் மிஞ்சணும்’
கே:- ‘‘பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் சமூகத்துக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?”
ப:- “நம் பழைய சடங்குகளின் ஒவ்வொன்றுக்கு பின்னாலும் நிறைய காரணங்களும் நோக்கங்களும் இருந்தன. ஒவ்வொரு சடங்கிலும் ஒரு செய்தி இருக்கிறது. நேரடியாக சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று மதம் வழியாக சொல்லியிருக்கிறார்கள்..
‘மன்னர் சொல் கேளா மக்களை வழிதிருப்ப மதம் வழி சொல்லி வைத்த மார்க்கம்தானே’ன்னு நானே சின்ன வயசுல எழுதியிருக்கேன். எனவே நிச்சயம் சம்பந்தம் இருக்கு. அதனால்தான் நீங்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்றார்.
கே:- “பிடித்த போட்டியாளர் யார்?”
ப:- ‘உங்களுக்கு பிடிச்சவங்க ஒவ்வொரு வாரமும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள் இல்லையா? எப்படி சொல்ல முடியும்? இரண்டு வருடங்களாக தாங்கிக் கொண்டிருக்கும் மக்கள் தான் எனக்குப் பிடித்தவர்கள்”
‘எந்தவொரு விளையாட்டிலும் தன்னுடைய எதிரியார் என்பதை தேர்வு செய்தாக வேண்டும். இன்னமும் கொஞ்ச நாள்ல நானும் அதை செய்தாக வேண்டும்’ (கமல் இப்படி சொல்லிவிட்டு கேமராவைப் பார்க்க புரிந்து கொண்டு கைத்தட்டினார்கள் பார்வையாளர்கள்.) #KamalHaasan #MakkalNeethiMaiyam
தஞ்சாவூர்:
தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகமும், அனைத்திந்திய தமிழ்ச் சங்க பேரவையும் இணைந்து நடத்திய ‘‘தமிழ் சங்கமம்’’ (இந்திய தமிழ்ச் சங்கங்களின் மாநாடு) தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் இன்று காலை நடைபெற்றது.
இதில் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா.பா.பாண்டிய ராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் அவர் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகத் தமிழ்ச் சங்க கூட்டமைப்பு மாநாடு தஞ்சையில் இன்று நடந்தது. இந்தியாவில் இருக்கும் 50 சங்கங்களின் நிகழ்வாக 3 நாட்கள் மாநாடு நடை பெறுகிறது.
உலக தமிழ் சங்கங்களின் உறுப்பினர் சார்ந்த அமைப்பாக இது உருமாற்றப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் உள்ள 150-க்கும் மேற்பட்ட நல்ல தமிழ் சங்கங்கள், இந்தியாவில் உள்ள 200 தமிழ் சங்கங்கள், உலகம் முழுவதும் உள்ள 100 சங்கங்கள் ஆகியவை ஒருங்கிணைந்து நிறுவன ரீதியாக உறுப்பினர்களை மதுரையில் உள்ள தமிழ் சங்கத்துக்கு தர இருக்கிறோம்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உலக தமிழ் சங்கங்களை உருமாற்றம் தற்போது நடந்து வருகிறது. இதற்கு செயற்குழு, பொதுக் குழு உருவாக்கம் செய்து உருமாற்றப்படுகிறது. இதற்கென ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘தெற்குவை’ திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்பெயர்ப்பில் தவறு என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளாரே? என்று நிரூபர்கள் கேட்டனர்.
அதற்கு பதில் அளத்த அமைச்சர் பாண்டியராஜன் ‘‘நீட் தேர்வு தமிழில் வினாத்தாள் மொழி பெயர்ப்பு சரியாக உள்ளது. சி.பி.எஸ்.இ. மீது தான் தவறு உள்ளது’ என்றார்.
பேட்டியின் போது தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் உடன் இருந்தார்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நாடு தழுவிய அளவில் பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வு நடத்தும் திட்டம் கைவிடப்படவில்லை என்றும், இதுதொடர்பாக மாநில அரசுகளை வலியுறுத்தப் போவதாகவும் அனைத்திந்திய தொழில் நுட்பக் கல்விக்குழுவின் தலைவர் அனில் சகஸ்ர புத்தே கூறியிருக்கிறார். பொறியியல் படிப்புக்கான நீட் தேர்வு குறித்து மாநில அரசுகளை கட்டாயப்படுத்தப் போவதில்லை என தொழில் நுட்பக் கல்விக்குழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இப்போது நீட் தேர்வை மீண்டும் வலியுறுத்துவது கண்டிக்கத்தக்கதாகும்.
பொறியியல் படிப்புகளுக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதன் மூலம் மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகளை எழுதுவது தவிர்க்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதை ஏற்க முடியாது.
பொறியியல் படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டால், அது மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்தின்படிதான் நடத்தப்படும். இது மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவ, மாணவிகளின் பொறியியல் கல்வி வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கும். மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், தமிழகத்திலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்து விட்டது. ஊரக, ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி என்பது கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டால் அது சமூக நீதிக்கு சாவுமணி அடிக்கும் செயலாக அமையும். இதைக் கருத்தில் கொண்டு பொறியியல் நீட் தேர்வை திணிக்கக் கூடாது என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். மாநில உரிமைகளைப் பறிக்கும் பொறியியல் நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சேலம்:
சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு கட்சி அலுவலகத்தில் வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கழக வளர்ச்சி பணிகள் குறித்து நேற்று ஆலோசனை வழங்கினார். சேலம் மாநகர், மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-
எப்போதும் நான் சாதாரண பழனிசாமி தான். இதே நிலையில் தான் இருப்பேன். குழந்தைகளுக்கு ஊட்ட சத்து கொடுப்பது போல நலிவுற்ற தொகுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
8 வழி பசுமை சாலையை பொதுமக்கள் எதிர்க்கவில்லை. நான் விவசாயி என்பதால் எந்தவிதத்திலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன்.
ஆனால் இந்த திட்டத்தை தி.மு.க., பா.ம.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சி மற்றும் அமைப்புகளை சார்ந்தவர்கள் மட்டுமே அரசியல் ஆதாயத்திற்காக எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
போக்குவரத்து துறையில் முந்தைய தி.மு.க.அரசு ரூ.6 ஆயிரம் கோடி கடனில் விட்டு விட்டு சென்றது. டெப்போக்களையும் அடமானம் வைத்துவிட்டு சென்றுவிட்டனர். எதற்கு எடுத்தாலும் இப்படி செய்யலாம், அப்படி செய்யலாம் என்று அறிவுரை கூறும் மு.க.ஸ்டாலின் அவர் இருக்கும் போதே செய்ய வேண்டியது தானே?.
ஜெயலலிதா மறைவிற்கு பின் கட்சியை உடைக்க ஆட்சியை கலைக்க எத்தனையோ? போராட்டங்களை நடத்தினர். இனி இந்த ஆட்சியை கவிழ்க்க முடியாது என்று தி.மு.க.வினரே பேச தொடங்கி விட்டனர்.
நான் மட்டுமென்ன நிம்மதியாகவா? இருக்கிறேன்.முதல்வர் பதவியை விட்டு எப்போது வேண்டுமானாலும் விலக தயார். முதல்வர் கனவு காண்பவர்கள் முறையாக மக்களை சந்தித்து தேர்தல் மூலம் ஜனநாயக முறையில் பதவிக்கு வரட்டும். அதிக இளைஞர்கள் கொண்ட அ.தி.மு.க. வலிமையாக உள்ளது.
வழக்கு முடிவு பெறும் நிலையில் உள்ளதால் உள்ளாட்சி தேர்தல் வர வாய்ப்பு உள்ளது. இதேபோல் பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளது. எனவே எந்த தேர்தல் வந்தாலும் சந்திக்க கட்சியினர் ஆயத்தமாக இருக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வார்டுக்கு 625 புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். 60 வார்டுகளிலும் கூட்டம் நடத்தி வளர்ச்சி பணிகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.
என் சம்பந்திக்கு ஒப்பந்தம் கொடுத்து நெடுஞ்சாலையில் முறைகேடு நடந்ததாக கூறுகின்றனர். தி.மு.க. ஆட்சியில் ராமலிங்கம் அண்ட் கோ நிறுவனத்திற்கு ஒரே நாளில் 8 ஒப்பந்தம் வழங்கப்பட்டது. துரைமுருகன், கருணாநிதி ஆகியோர் சேர்ந்து சிங்கிள் சிஸ்டம் முறையில் 294 ஒப்பந்தங்களை வழங்கினர். இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக உள்ளேன்.
மு.க.ஸ்டாலின் போராட்டம் செய்தால் உடனே ராஜினாமா செய் என்று கூறுகிறார். அந்த அளவிற்கு நாற்காலி ஆசை. நான் ஒன்றும் பிடித்து கொண்டு இல்லை, மக்களாலும், ஒவ்வொரு தொண்டர்களாலும் கிடைத்தது.
நிறைய விஷயம் தி.மு.க. பற்றி சொல்ல வேண்டியுள்ளது. சூழ்நிலை சரியில்லை என்பதால் தி.மு.க.வை விமர்சிக்க விரும்பவில்லை. அ.தி.மு.க.வினர் மனிதாபிமானம் கொண்டவர்கள்.
இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய மாநகராட்சியில் சென்னை மாநகராட்சி முதல் இடத்தில் உள்ளது. சட்டமன்றத்தில் மாற்றி, மாற்றி கேள்வி கேட்கிறார்கள். அதற்காகவே தினமும் 3 முதல் 4 மணி மணி நேரம் அனைத்து துறை தகவலையும் படித்து, அனைத்திற்கும் பதில் சொல்கிறேன்.
தமிழகம் முழுவதும் 40 சாலைகளை 4 வழிச்சாலைகளாக அமைக்க மத்திய அரசிடம் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இதில் 19 சாலைகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. 21 சாலைகள் பரிந்துரையில் உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலைகள் அமைத்தால் அமெரிக்காவிற்கு இணையாக தமிழகம் மாறிவிடும்.
சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து டெண்டர்களும் விடப்படுகிறது. திருப்பதி கோவிலில் அணைகள் எல்லாம் நிரம்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்ததற்கு கிண்டல் செய்தார்கள். ஆனால் இப்போது மேட்டூர் அணை ஒரே மாதத்தில் நிரம்பி உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி தொண்டர்களுக்கு நல உதவிகளை வழங்கினார்.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்த பின்னர் முதல் முறையாகவும், தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு 2-வது முறையாகவும் மாநகர் மாவட்ட அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி நேற்று வந்தார். அவருக்கு மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ., சக்திவேல் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சாலையில் இரு புறங்களிலும் நின்று நூற்றுக்கணக்கான பெண்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர். மேலும் தாரை தப்பட்டை, செண்டை மேளங்கள் முழங்க முதல்-அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது. #EdappadiPalaniswami
திமுக தலைவர் கருணாநிதி சிறுநீர் தொற்று காரணமாக கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதி இன்னும் 2 நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்திருந்தார்.
இன்றிரவு 8 மணியளவில் காவிரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘ திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு இம்மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர். இந்த மருத்துவ உதவிகளுடன் அவரது உடல்நிலை சீராக உள்ளது. #DMK #Karunanidhi #KauveryHospital #GetWellKarunanidhi
சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் வந்தார்.
பின்னர் ஓமலூரில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர் நங்கவள்ளியில் புதிய தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தை திறந்து வைத்தார். வனவாசியில் புதிய தொழில் நுட்ப கல்லூரி கொங்கணாபுரத்தில் புதிய போலீஸ் நிலையத்தையும் தொடங்கி வைத்தார்.
இன்று (28-ந்தேதி) காலை சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள சுற்றுலா மாளிகையில் சேலம் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். ஏற்கனவே செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிலை குறித்தும் விவரமாக கேட்டறிந்தார்.
சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் இன்று மாலை 4 மணியளவில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து கழக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஆலோசனை வழங்குகிறார். இதையொட்டி அந்த பகுதியில் கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் முதல்வரை வரவேற்று ஏராளமான பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
ஆடிப்பண்டிகையையொட்டி சேலம் போஸ் மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடக்கிறது. நாளை மாலை நடைபெறும் அதன் தொடக்க விழாவில் பங்கேற்று எடப்பாடி பழனிசாமி அதனை தொடங்கி வைக்கிறார்.
சேலம் மாநகரில் ரூ.4.16 கோடி செலவில் 9 இடங்களில் பசுமை வெளி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதில் அம்மாபேட்டை அய்யாசாமி பூங்காவில் நடைபெறும் விழாவில் பங்கேற்று அனைத்து பூங்காக்களையும் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சிகளில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்கிறார்கள். இதையொட்டி சேலம் மாநகர் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #TNCM #EdappadiPalanisamy