search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    மூன்று பிணைக்கைதிகளை இன்று காலை விடுவித்தது ஹமாஸ்
    X

    மூன்று பிணைக்கைதிகளை இன்று காலை விடுவித்தது ஹமாஸ்

    • 6 வார கால போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
    • 33 பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புதல். இஸ்ரேல் சுமார் 2 ஆயிரம் பாலஸ்தீனர்களை விடுதலை செய்கிறது.

    இஸ்ரேல் நாட்டிற்குள் கடந்த 2023-ம் ஆண்டு நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

    இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது. இதனால் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர்.

    பின்னர் அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்காரணமாக 2023 நவம்பர் மாதம் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    அப்போது 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதற்குப்பதிலாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீன இளைஞர்கள், பெண்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

    இதற்கிடையே ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. அதில் இருந்து ஒன்றரை வருடங்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. இதில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மனிதாபிமான உதவி கிடைக்காமல் பாலஸ்தீன மக்கள் திண்டாடினர்.

    இந்த நிலையில்தான் டொனால்டு டிரம்ப் ஜனவரி 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்பதற்கு முன்னதாக போர் நிறுத்தம் ஏற்பட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தம் கடந்த மாதம் 19-ந்தேதி அமலுக்கு வந்தது. இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை நிறுத்தியது. உணவு உள்ளிட்ட பொருட்கள் காசா முனைக்கு எடுத்துச் செல்ல அனுமதித்தது.

    6 வார கால போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் பிணைக்கைதிகளை விடுவிப்பது, இஸ்ரேல் சிறையில் இருந்து பாலஸ்தீனர்களை விடுவிப்பது குறித்து ஒப்பந்தமும் ஏற்பட்டது. ஹமாஸ் அமைப்பினர் 33 பிணைக்கைதிகளை விடுவிக்க ஒப்புக் கொண்டனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் இருந்து 2 ஆயிரம் பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுக்க ஒப்புக்கொண்டது.

    அதன்படி ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவித்து வருகின்றனர். முதலில் 3 பிணைக்கைதிகளை விடுவித்தனர். அதன்பின் 4 பிணைக்கைதிகளை விடுவித்தனர். 3-வது கட்டமாக 8 பிணைக்கைதிகளை விடுவித்தனர்.

    இந்த நிலையில் இன்று மூன்று பிணைக்கைதிகளை செஞ்சிலுவை சங்கத்தினரிடம் (Red Cross) ஒப்படைந்தனர். அதில் யார்டன் பிபாஸ் (35), இஸ்ரேலில் வாழும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஓஃபர் கால்டெரான் (54) இஸ்ரேல் வந்தடைந்தனர்.

    இந்த நிலையில் 3-வது நபராக சீத் சீகல் (65) என்பவரை செஞ்சிலுவையிடம் ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைத்துள்ளனர். இவர் விரைவில் இஸ்ரேல் அழைத்து வரப்படுவார்.

    காயம் அடைந்த பாலஸ்தீனர்கள் ரஃபா எல்லை வழியாக காசாவில் இருந்து எகிப்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எகிப்திற்கு செல்லும் ஒரே பாதையான இதை, இஸ்ரேல் கடந்த மே மாதம் மூடியது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×