என் மலர்
கால்பந்து
உலகக் கோப்பையை வெல்லும் கனவு முடிவுக்கு வந்து விட்டது- கிறிஸ்டியானோ ரொனால்டோ
- போர்ச்சுகல் அணிக்கான எனது அர்ப்பணிப்பு ஒரு கணமும் மாறவில்லை.
- எனது அணியினரையோ, எனது நாட்டையோ ஒருபோதும் புறக்கணிக்க மாட்டேன்.
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மொராக்கோ அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்த போர்ச்சுகல் உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
இந்நிலையில் போர்ச்சுக்கல் உலக கோப்பையை வெல்லும் என்ற தன்னுடைய கனவு முடிவுக்கு வந்து விட்டதாக அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
போர்ச்சுக்கலுக்கு கோப்பையை வென்று கொடுப்பதே எனது வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியக் கனவாகும். கனவு இருக்கும் வரை அழகாக இருந்தது. இந்த கனவுக்காக நான் கடுமையாக போராடினேன். துரதிஷ்டவசமாக என்னுடைய கனவு நேற்று முடிவுக்கு வந்தது.
போர்ச்சுகல் மீதான எனது அர்ப்பணிப்பு ஒரு கணமும் மாறவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் எப்போதும் ஒரு (போர்த்துகீசியம்) இலக்கிற்காக போராடி வருகிறேன். எனது அணியினரையோ அல்லது எனது நாட்டையோ நான் ஒருபோதும் புறக்கணிக்க மாட்டேன். 16 ஆண்டுகளுக்கும் மேலாக நான் விளையாடிய 5 உலகக் கோப்பை ஆட்டங்களில், எப்போதும் மில்லியன் கணக்கான போர்ச்சுகீசியர்களின் ஆதரவிலும், நான் எனது முழுமையான பங்களிப்பை கொடுத்தேன்.
எப்போதும் அனைவரின் நோக்கத்திற்காக போராடும் ஒருவனாக இருக்கிறேன். இப்போதைக்கு அதிகம் பேச விரும்பவில்லை. ஒரு நல்ல ஆலோசகராக இருந்து ஒவ்வொருவரும் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க அனுமதிக்க வேண்டிய நேரம் இது. நன்றி போர்ச்சுகல், நன்றி, கத்தார். இவ்வாறு ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
போர்ச்சுக்கல் அணிக்காக 5 உலக கோப்பை தொடர்களில் ரொனால்டோ விளையாடி உள்ளார். இந்நிலையில் அடுத்த உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் 2026 ஆம் ஆண்டு நடைபெறுகிறது. அப்போது ரொனால்டோவுக்கு 41 வயது ஆகி விடும் என்பதால் அதில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.