என் மலர்
குழந்தை பராமரிப்பு
குழந்தைகளுக்கு அறிவுரை வழங்குவதை தவிருங்கள்...
- குழந்தைகள் செல்போனில் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார்கள்.
- குழந்தைகளை பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமையுமாகும்.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மற்றும் பதின்வயதினர் படிப்புடன் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட கேட்ஜெட்களுடன் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார்கள். ஆன்லைன் கல்வி முறையும் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. மின்னணு சாதனங்களிலேயே மூழ்கி கிடப்பதால் பெற்றோருடன் செலவிடும் நேரம் குறைவாக உள்ளது. அதனால் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொண்டால் பெற்றோரிடமிருந்து போதிய ஆலோசனைகள் அல்லது வழிகாட்டுதல்களை பெற முடியாமல் தடுமாறும் நிலை நிலவுகிறது. பெற்றோர்-குழந்தைகள் இடையேயான பாசப்பிணைப்பும் பலவீனமடைந்துவிடுகிறது. சுயமாகவோ அல்லது தவறான நபர்களின் வழிகாட்டுதலின்படியோ செயல்பட்டு தவறான முடிவை எடுக்கிறார்கள்.
குழந்தைகளின் நடத்தையை புரிந்து கொள்வதற்கு அவர்களின் பழக்கவழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவர்களது விருப்பு, வெறுப்பு போன்றவற்றை புரிந்து கொள்வதற்கும் பெற்றோர் முயல வேண்டும். குழந்தைகளுடன் மனம் விட்டு பேசி, அவர்களின் விருப்பங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வது உறவை மேம்படுத்தும். இருவருக்குமிடையே வலுவான பாசப்பிணைப்பை உருவாக்கும். குழந்தைகளை பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமையுமாகும்.
இன்றைய காலகட்டத்தில் நீண்ட அறிவுரைகளை கேட்பதற்கு குழந்தைகள் விரும்புவதில்லை. அவர்கள் தவறு செய்யும்பட்சத்தில் தவறுக்கான காரணங்களை சுட்டிக்காட்ட வேண்டுமே தவிர பழைய சம்பவங்களை பேசி அவர்களின் மனதை நோகடிக்கக்கூடாது. 'இனி இப்படி நடந்து கொள்ளாதே' என்று கடுமையுடன் கண்டிக்காமல் மென்மையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு வழங்கும் அறிவுரைகள் அவர்களை செம்மைப்படுத்துவதாக இருக்க வேண்டும். சுருக்கமாகவும் அமைய வேண்டும். ஏதேனும் பிரச்சினையை எதிர்கொண்டால் அவர்களாகவே சுயமாக முடிவெடுப்பதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். தீர்வு காண முடியாத பட்சத்தில் அவர்களாகவே முன் வந்து ஆலோசனை கேட்கும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும். இத்தகைய அணுகுமுறை பெற்றோர்-குழந்தைகள் இடையேயான பிணைப்பை மேம்படுத்தும். மீண்டும் அந்த தவறை செய்வதற்கான வாய்ப்பும் குறையும்.
பதின்ம வயதை எட்டும் குழந்தைகள் மனதில் சந்தேகங்கள், கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும். பெற்றோரிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் அவர்களிடத்தில் இருக்கும். அதற்கான வாய்ப்பை பெற்றோர் வழங்கினால் மட்டுமே அவர்கள் மனம் திறந்து பேசுவார்கள்.