search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    பிள்ளைகளின் கோடை கால விடுமுறையை பயனுள்ள வகையில் மாற்றுவது எப்படி?
    X

    பிள்ளைகளின் கோடை கால விடுமுறையை பயனுள்ள வகையில் மாற்றுவது எப்படி?

    • பெரும்பாலான குழந்தைகள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி உள்ளனர்.
    • பெற்றோர்களும் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பவே அச்சப்படுகின்றனர்.

    வெயிலோடு விளையாடி.... வெயிலோடு உறவாடி... என்ற பாடலை அனைவரும் கேட்டிருப்போம்.

    அந்த பாடலின் வரிகள் மாணவர்களின் வாழ்வியலோடு தொடர்பானது. வெயிலையும் பொருட்படுத்தாது நண்பர்களுடன் இணைந்து விளையாடிய அனுபவம் நம்மில் பலருக்கு உண்டு.

    வீடுகளுக்குள் முடங்கினர்

    ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் கோடை கால விடுமுறையை ஆரோக்கியமான முறையில் மாணவர்கள் கழிக்கின்றனரா? என்ற கேள்வி பேசும் பொருளாக எழுந்துள்ளது. பெரும்பாலான குழந்தைகள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி உள்ளனர். கம்ப்யூட்டர், டி.வி., செல்போன் என வீட்டுக்குள்ளேயே தங்களது கோடை கால விடுமுறையை கழித்து விடுகின்றனர் என்ற கருத்து நிலவுகிறது. பெற்றோர்களும் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பவே அச்சப்படுகின்றனர். இதற்கு சுற்றுப்புற சூழ்நிலைகள், அடுத்த கல்வியாண்டுக்கு தற்போதே தயார்படுத்துவது உள்ளிட்ட காரணங்கள் முன் வைக்கப்படுகிறது.

    குழந்தைகள் ஓடியாடி விளையாடுவது குறைந்து விட்டது. உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவதும் குறைந்துள்ளது. தற்போது கோடை கால விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுகிறது.இந்த கோடை கால விடுமுறையை மாணவர்கள் எவ்வாறு கழிக்கின்றனர்? எவ்வாறு பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்று ஆசிரியர்கள், பெற்றோர் கூறும் கருத்துகளை காண்போம்:-

    வாசிப்பு பழக்கம்

    ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்மின்னல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ரா.சி.வாசவி:- விடுமுறை என்பது அனைவருக்கும் உடல் மற்றும் மனம் ஓய்வெடுக்கவும் அடுத்த கல்வி ஆண்டிற்கு தன்னை தயார் செய்து கொள்ளவும் விடப்படுகிறது. இந்த கோடை விடுமுறையில் உடலும் மனமும் உறுதி பெற நீச்சல் பழகலாம். கேரம், செஸ், போன்ற சிந்தனையை தூண்டும் விளையாட்டுகளிலும், கபடி, கிரிக்கெட் போன்ற உடலுக்கு நன்மை பயக்கும் போட்டிகளில் பங்கெடுத்து கொள்ளலாம். ஓவியத்தில் ஆர்வம் இருப்பவர்கள் ஓவியப் பயிற்சியை கற்று கொள்ளலாம். யோகாவில் விருப்பம் உள்ளவர்கள் யோகா பயிற்சியை மேற்கொள்ளலாம்.

    இதுதவிர படங்கள் வரைதல், வண்ணம் தீட்டுதல், களிமண்ணால் ஆன பொருட்கள் செய்தல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடலாம். முக்கியமாக பெற்றோர் குழந்தைகளை அருகில் உள்ள நூலகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு கதை புத்தகங்களையும் சிறு, சிறு கட்டுரைகளையும் படித்து வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். கைவினை பொருட்கள் செய்வதற்கான வகுப்புகளில் சேர்ந்து கைவினைப் பொருட்களை செய்யவும் வடிவமைக்கவும் கற்றுக் கொள்ளலாம்.

    தற்காப்பு கலைகள்

    வேலூரை சேர்ந்த சிலம்ப பயிற்சியாளர் ஜெயந்தி:- நான் வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறேன். சிலம்பத்தின் மீதான ஆர்வத்தின் காரணமாக சிலம்பம் கற்றுக்கொண்டேன். தற்போது ஏராளமான பெண்களுக்கு சிலம்பம் கற்றுக் கொடுக்கிறேன். சிலம்பம் கற்றுக்கொள்வதால் மனஅழுத்தம் குறைகிறது. தற்போது கோடை கால விடுமுறை என்பதால் ஏராளமான மாணவிகள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருப்பார்கள். அவர்களுக்கு சிலம்பம், களரி உள்ளிட்ட தற்காப்பு கலைகள் கற்றுக்கொள்ள வேண்டும்.

    அது அவர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலுவை சேர்க்கும். இந்த கலைகளை கற்பதன் மூலம் ஞாபக சக்தி அதிகரிக்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்காது. சோர்வு ஏற்படாது. மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்கலாம்.

    பிறருடன் பேசும் போது துணிவுடன் பேசலாம். தலைமை பண்பு வளர்க்க இதுபோன்ற கலைகள் மாணவிகளுக்கு உதவும். மாணவர்களும் இதுபோன்ற கலைகளை கற்கலாம். இந்த கலைகள் எதிர்கால அரசு வேலைகளுக்கு ஒரு தொடக்கப்புள்ளியாக அமையும். கோடை கால விடுமுறையை பயனுள்ளவாறு மாற்ற வேண்டும். அதற்கு பெற்றோரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    கல்வி சுற்றுலா

    வேலூரை சேர்ந்த பெற்றோர் ரவி:- குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெற்றோர் சுற்றுலா செல்ல வேண்டும். அந்த சுற்றுலா கல்வி சுற்றுலாவாக இருத்தல் வேண்டும். அதாவது பெற்றோர் உள்ளூரில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் சென்று, அந்த இடத்தின் வரலாறு குறித்து எடுத்துக் கூறலாம். குறிப்பாக வேலூர் கோட்டைக்கு அழைத்துச் சென்று வேலூர் கோட்டையின் பெருமை, வேலூர் வரலாறு குறித்து எடுத்துக் கூறலாம். நேரடியாக பார்க்கும்போது குழந்தைகள் ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்வார்கள். மரக்கன்றுகள் நட்டு வளர்க்க கூறலாம். அப்போது இயற்கை மீது அவர்களுக்கு ஆர்வம் ஏற்படும். காலை அல்லது மாலையில் நடைபயிற்சி செல்லும்போது குழந்தைகளையும் அழைத்துச் சென்று நடைபயிற்சிக்கு பழக்கலாம். அப்போது உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கலாம்.

    சிறப்பு பயிற்சி முகாம்

    வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சோமலிங்கம்:- தற்போது பள்ளிகளுக்கு கோடை கால விடுமுறை தொடங்கி உள்ளது. மாணவர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் நடத்துகின்றனர். அங்கு கைப்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் குறித்து இலவசமாக பயிற்சி வழங்குகின்றனர். பங்கு பெறும் மாணவர்களை ஊக்குவிக்க சான்றிதழ்கள், உணவுகள், சீருடைகள் வழங்கப்படுகிறது. அங்கு மாணவர்களை அனுப்பி பயிற்சி பெற வைக்கலாம். செல்போனிலேயே மூழ்கிகிடக்கும் மாணவர்களுக்குள் ஏதேனும் ஒரு விளையாட்டில் ஆர்வம் இருக்கும். அந்த விளையாட்டினை பெற்றோர் கண்டுபிடித்து அதில் பயிற்சி வழங்கலாம். ஆறு, குளங்களில் பல குழந்தைகள் மூழ்கி உயிரிழக்கின்றனர். எனவே குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி வழங்க வேண்டும். அடுத்த கல்வியாண்டுக்குள் மாணவர்கள் நுழையும் போது புத்துணர்ச்சியுடன் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

    தனித்திறன்

    வாணியம்பாடியை சேர்ந்த பிரியா சக்தி:-

    பள்ளி விடுமுறையில் மாணவர்கள் தங்களின் தனித்திறனை வளர்த்துக் கொள்வதற்காக விளையாட்டு போட்டி, விளையாட்டு பயிற்சி, இசைப்பயிற்சி, தற்காப்பு கலை பயிற்சிகள், நூலகங்களில் வாசிக்கும் திறன் வளர்ப்பது போன்றவற்றில் சேர்ந்து பயனடைய வேண்டும். சிறுவர்களுக்கு ஓவிய போட்டிகள், இசை போட்டிகள் ஆகியவற்றில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கான வழி வகைகளை பெற்றோர்கள் செய்ய வேண்டும். பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளை பாதுகாப்பாக இந்த விடுமுறை நாட்களில் ஓரிரு நாட்கள் மட்டும் உடன் அழைத்துச் சென்று சுற்றுலா தலங்களை காண்பிப்பதோடு நிறுத்திவிட்டு மாணவர்களுக்கு தனித்திறனை வளர்ப்பதற்கு வேண்டிய வழி செய்ய வேண்டும்.

    யோகா பயிற்சி

    திருவண்ணாமலையை சேர்ந்த யோகா பயிற்சியாளர் கல்பனா:- கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பள்ளி குழந்தைகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த கோடை விடுமுறையை யோகா பயிற்சி மேற்கொள்வதன் மூலம் பயனுள்ளதாக கழிக்கலாம். இதனால் நமது பிள்ளைகளின் உடல் வலிமையும், மன உறுதியும் பெருகும். இந்த விடுமுறை நாட்களில் பிள்ளைகள் வீட்டில் செல்போன், டி.வி. போன்றவற்றை கண்டு களிக்கின்றனர். அவ்வாறு இல்லாமல் யோகா பயிற்சி மேற்கொள்வதால் உடல் ஆரோக்கியம் பெறும். அதனால் விடுமுறை நாட்களில் தினமும் நான்கு சின்ன, சின்ன யோகாசனங்கள் செய்து வந்தாலே உடல் ஆரோக்கியம் பெறும். மேலும் தொடர்ந்து மூச்சுப் பயிற்சி வழங்கி வந்தாலும் பிள்ளைகளின் உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

    பொது அறிவு

    அரக்கோணம் தனியார் நர்சரி பள்ளி முதல்வர் கவுரி:- தற்போது கோடை விடுமுறை பற்றிய சிந்தனைதான் குழந்தைகள் உள்ள எல்லா குடும்பத்துக்கும் அதிகமாக உள்ளது. வாசிப்பு என்பது குழந்தைகளின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். எனவே, கோடைகாலத்தில் தினசரி நாளிதழ்கள், சிறிய சிறிய கதை புத்தகங்களை படிக்க சொல்லலாம். இதனால் வாசிப்பு திறன் மேம்படும். மேலும், பொது அறிவுக்கும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது மறந்து வரும் விளையாட்டுகளான பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம், ஸ்கிப்பிங், உள்ளே வெளியே போன்ற விளையாட்டுகள் விளையாடுவதால் உடல், மன ஆரோக்கியம் பெறமுடியும், பெற்றோர்களும், குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும் போது விட்டு கொடுக்கும் மனப்பான்மையை அறிந்து கொள்ள முடியும். இது போன்ற பழமையான நம் கலாசார தொடர்புடைய விளையாட்டுகளும் மறந்து போகாமல் இருக்கும். தோட்டக் கலையைக் கற்றுக்கொடுப்பது அவர்களுக்கு விவசாயத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க உதவும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×