என் மலர்
பொது மருத்துவம்
செல்லப்பிராணி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்...
- தனியாக இருப்பவர்கள் தனிமையை உணரத் தொடங்கி விட்டால் உடனடியாக செல்லப்பிராணி ஒன்றை வாங்குங்கள்.
- செல்லப்பிராணிகளை வளர்ப்பது நல்லது என்றாலும், அதில் நிறைய பொறுப்புகளும் இருக்கிறது.
செல்லப்பிராணி என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். பிடிக்காத சிலரும் கூட அவை பாசமாக வாலாட்டிக்கொண்டு வந்தால் அதை ரசிக்க தொடங்கி விடுவர். செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள் உண்டு. சிலர் காவலுக்காக வளர்ப்பார்கள், சிலர் பாசத்திற்காக வளர்ப்பார்கள். இப்படி பல காரணங்கள் இருந்தாலும் கூட வீட்டில் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளை வளர்ப்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல பலன்களையும், நன்மைகளையும் அளிக்கிறது. அதை பற்றி அறிந்து கொள்வோம்...
* மன அமைதி
ஒருவர் நம்மை அளவில்லாமல் நேசிக்கிறார் என நினைத்தாலே மனசு லேசாகிவிடும். கள்ளங்கபடமில்லாத அன்பை மட்டுமே அள்ளித்தரக் கூடிய செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிடுவது மன அழுத்தத்தை குறைத்து மன அமைதியையும், மகிழ்ச்சியையும் ஊக்குவிக்கிறது. அவை காட்டும் அளவில்லாத அன்பு நாம் இருக்கும் சுற்றுச்சூழலையும் அழகாக்கும்.
* சுறுசுறுப்பு
நாம் வாக்கிங் போக சில சமயங்களில் சோம்பேறித்தனம் கொண்டாலும் நாம் வளர்க்கும் நாயை 'வாக்கிங்' கூட்டிச் செல்ல வேண்டும் என்ற கட்டாயத்தினாலேயே வெளியே சென்று நடக்க ஆரம்பித்து விடுவீர்கள். 'வாக்கிங்' போகும்பொழுதும் கூட அவை போகும் போக்கில் செல்வதால் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
* உற்சாகம்
மோசமான நாளாக இருந்தாலும் கூட வீட்டிற்குள் நுழையும்பொழுது ஆசையாக வாலாட்டிக்கொண்டு வரும் ஜீவனைக் கண்டு மகிழாத மனித மனமே கிடையாது. செல்லப்பிராணியுடன் உரையாடுவது, விளையாடுவது போன்றவை மகிழ்ச்சி ஹார்மோன் உற்பத்தியை அதிகரித்து மனநிலையை மேம்படுத்துகிறது.
* தனிமை இனி இல்லை
தனியாக இருப்பவர்கள் தனிமையை உணரத் தொடங்கி விட்டால் உடனடியாக செல்லப்பிராணி ஒன்றை வாங்குங்கள். அதன் நிலையான அன்பும், துறுதுறு விளையாட்டும் தனிமையை முற்றிலுமாக போக்க பெரிய அளவில் உதவும்.
* ஆரோக்கியம்
செல்லப்பிராணிகளின் செயல்பாடுகள் 'ரிலாக்ஸ்சேஷனை' அதிகரிப்பதால் அவை ரத்த அழுத்தத்தை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
* சமூகம்
செல்லப்பிராணிகளை, பூங்கா, கடற்கரை போன்ற பொது இடங்களுக்கு வாக்கிங் அழைத்துச்செல்லும் பொழுது பிற செல்லப்பிராணி உரிமையாளர்களுடன் பேசும் வாய்ப்பும் கிடைக்கக்கூடும். அதன் மூலம் உங்களுக்கு நண்பர்கள் கூட கிடைப்பார்கள்.
* குழந்தை நலம்
செல்லப்பிராணியுடன் வளரும் குழந்தைகளுக்கு பொறுப்புணர்வு அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் குழந்தைகளை உற்சாகப்படுத்த, அவர்களுக்கு நல்ல நண்பர்களாக மாற செல்லப்பிராணிகளை வாங்கி பரிசளியுங்கள்.
* கவனம்
செல்லப்பிராணிகளை வளர்ப்பது நல்லது என்றாலும், அதில் நிறைய பொறுப்புகளும் இருக்கிறது. செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் செல்லப்பிராணிகளால் ஏற்படும் நோய்களை தவிர்த்திட கால்நடை மருத்துவரிடம் அதற்கு ஏற்ற தடுப்பூசிகளையும், சிகிச்சைகளையும் பெற வேண்டும். மேலும் அவ்வப்போது, செல்லப்பிராணிகளின் உடல் ஆரோக்கியத்தை பரிசோதிக்க வேண்டும். அவற்றிற்கு ஏற்ற உணவு, குளியல் பராமரிப்பு பொருட்களிலும் கவனம் தேவை.