என் மலர்
பொது மருத்துவம்
தாம்பத்தியத்தின் போது விரைவில் விந்து வெளியேறுவதற்கான காரணமும், தீர்வுகளும்
- உடற்பயிற்சிகள் மற்றும் மருத்துவம் எடுப்பது சிறந்தது.
- வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் அவசியம்.
தாம்பத்தியத்தின் போது விரைவில் விந்து வெளியேறுதல் என்பது பரவலாக ஆண்களுக்கு காணப்படும் பிரச்சனையாகும். தாம்பத்தியத்தில் 1 முதல் 3 நிமிடங்களுக்குள் விந்து வெளியேறுவதை விரைவில் விந்து வெளியேறுதல் எனப்படுகிறது.
சராசரியாக ஒரு நாளின் முதல் தாம்பத்தியத்தின் போது 5 முதல் 7 நிமிட நேரம் என்று மருத்துவ ரீதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. 10 நிமிடத்திற்கு மேல் நீடித்தவை, 'மிக நீளமான நேரம்' என்று கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் இதில் ஒவ்வொரு நபரும் வெவ்வேறு நேரத்தில் உச்சத்தை அடைவதால் இந்த கால அளவு நபருக்கு நபர் வேறுபடுகிறது. மேற்குறிப்பிட்ட நேரம் தாம்பத்தியத்தின் முன் உள்ள, பேச்சு கொஞ்சுதல், முத்தம், இவைகளை தவிர்த்தது ஆகும்.
காரணங்கள்:
முன்கூட்டியே விந்து வெளியேறுவதற்கான காரணங்கள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. ஒரு காலத்தில் இது உளவியல் ரீதியானது என்று மட்டுமே கருதப்பட்டது. ஆனால் இது உளவியல் மற்றும் உடலியல் காரணிகளின் சிக்கலான தொடர்புகளை உள்ளடக்கியது என்று சுகாதார வல்லுநர்கள் இப்போது கூறுகிறார்கள்.
உளவியல் காரணங்கள்:
மனச்சோர்வு, பயம், பதற்றம், குற்ற உணர்வுகள், முன்கூட்டியே விந்து வெளியேறி விடுமோ என்று கவலைப்படுதல்.
உடல் ரீதியான காரணம்:
ஒழுங்கற்ற ஹார்மோன் அளவுகள், குறிப்பாக குறைந்த டெஸ்டோஸ்டிரோன் அளவு, டோபமைன், செரட்டோனின் போன்ற மூளை ரசாயனங்களின் குறைந்த அளவுகள், புரோஸ்டேட் அல்லது சிறுநீர்க்குழாய் வீக்கம் மற்றும் தொற்றுகள், நீரிழிவு, ரத்த அழுத்த நோய்கள், மற்றும் உடல் பருமன்.
உணவுகள், உடற்பயிற்சிகள்:
இந்த பிரச்சினை உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மனச் சோர்வை ஏற்படுத்துகிறது. ஆகவே இதற்கான உடற்பயிற்சிகள் மற்றும் மருத்துவம் எடுப்பது சிறந்தது. இடுப்பு தசைகளை பலப்படுத்த 'கெகல்' பயிற்சிகளை செய்யலாம். உடல் வெப்பத்தை தணிப்பதற்கு வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் அவசியம்.
தினசரி இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். மாதுளம் பழம், வாழைப்பழம், தர்பூசணி பழம், திராட்சைப் பழம் இவைகளில் ஒன்றை தினசரி சாப்பிட வேண்டும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மலச்சிக்கல் இருந்தால் நிலவாகைச் சூரணம் 1 கிராம் வீதம் இரவு தூங்குவதற்கு முன்பு வெந்நீரில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பயம், பதற்றம், கவலை, மனச்சோர்வு நீக்குவதற்கு தியானம், பிரார்த்தனை செய்ய வேண்டும். தேவைப்பட்டால் உளவியல் ஆலோசனைகள் பெற வேண்டும். இரவு குறைந்தது ஆறு மணி நேரம் தூங்க வேண்டும். தினசரி நடைப்பயிற்சி, சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
உணவில் முருங்கைப்பூ, முருங்கைக்கீரை, முருங்கைக்காய், பசலைக்கீரை, அரைக்கீரை, தூதுவளை, பாதாம், பிஸ்தா, வால்நட், பூசணி விதை, முருங்கை விதை, அத்திப்பழம், பேரீட்சை பழம், சுரைக்காய், பூசணிக்காய், புடலங்காய், முட்டை, பால், தயிர், மோர், நெய் இவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.