என் மலர்
பொது மருத்துவம்
பசு நெய் - எருமை நெய்: எது ஆரோக்கியமானது?
- ஒரு தேக்கரண்டி தூய பசு நெய்யில் 7.9 கிராம் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது
- எருமை நெய்யில் 100 சதவீதம் கொழுப்பு கலந்திருக்கும்.
தினமும் நெய்யை சரியான அளவில் உட்கொண்டால், ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். அதனால் தான் நெய்யை உணவில் சேர்த்துக்கொள்ளவும், வெறும் வயிற்றில் சாப்பிடவும் மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். சந்தையில் பல வகையான நெய்கள் கிடைக்கும் நிலையில், பசு நெய்யும், எருமை மாட்டு நெய்யும்தான் அதிகம் புழக்கத்தில் இருக்கிறது.
இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்னென்ன?
நிறம்: பசுவின் நெய் மஞ்சள் நிறத்தில் காணப்படும். எருமை நெய் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும். பசு உட்கொள்ளும் உணவில் கலந்திருக்கும் பீட்டா கரோட்டின் காரணமாக பசுவின் நெய் மஞ்சள் நிறம் கொண்டிருக்கிறது.
ஊட்டச்சத்து உள்ளடக்கம்: பசு நெய் மற்றும் எருமை நெய் இரண்டின் ஊட்டச்சத்தும் வேறுபட்டது. பசு நெய்யில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிரம்பி இருக்கும். முக்கியமாக நிறைவுற்ற கொழுப்பு அதிக அளவு காணப்படும். அது உடலுக்கு அதிக ஆற்றலை வழங்கக்கூடியது. ஒரு தேக்கரண்டி தூய பசு நெய்யில் 7.9 கிராம் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. இது தவிர ஆன்டி வைரல், ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் பசு நெய்யில் உள்ளடங்கி இருக்கும். ஆனால் எருமை நெய்யில் 100 சதவீதம் கொழுப்பு கலந்திருக்கும்.
செரிமானம்: எருமை நெய்யுடன் ஒப்பிடும்போது பசு நெய் ஜீரணிக்க எளிதானது. குடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். பசும் பாலில் கொழுப்புகள் குறைவாகவும், கரையக்கூடிய அமிலங்களின் சதவீதம் அதிகமாகவும் இருக்கும். அதனால்தான் எருமை நெய்யுடன் ஒப்பிடும்போது எளிதில் ஜீரணமாகும் தன்மையை கொண்டிருக்கிறது.
எடையை குறைக்கும்: பசு நெய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளதால் அனைத்து வயதினரும் உட்கொள்ளலாம். குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் கூட பசு நெய்யை உட்கொள்வதன் மூலம் பயனடையலாம். ஏனெனில் பசு நெய்யில் உள்ள வைட்டமின் டி இன்சுலின் அளவை ஒழுங்குபடுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம் படுத்த உதவும். உடல் எடையை குறைக்கவும் உதவும்.
உடல் பருமன்: எருமை நெய்யில் கொழுப்பு அதிகம் உள்ளதால் எடையை கடுமையாக அதிகரிக்க வழிவகுத்து விடும். மெலிந்த உடல்வாகு கொண்டவர்கள் உடல் எடையை அதிகரிக்க விரும்பினால் எருமை நெய்யை தாராளமாக உட்கொள்ளலாம். பசு நெய்யை பொறுத்தவரை குறைந்த கொழுப்பையே கொண்டிருப்பதால் உடல் எடையை சீராக பராமரிக்க உதவும்.
ஆயுர்வேத சிகிச்சை: பசு நெய் அனைத்து ஆயுர்வேத சிகிச்சைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஒற்றைத் தலைவலி, டென்ஷன், தலைவலி, பார்வை திறன், செவித்திறன் மற்றும் நினைவாற்றல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்க நெய் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேதத்தின் படி எருமை நெய்யை விட பசு நெய் அதிக மருத்துவ குணம் கொண்டது.
குழந்தைகளுக்கு நல்லது: பசு நெய்யை எல்லா வயதினரும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு அதிக நன்மை பயக்கும். குழந்தை பருவத்தில் ஏற்படும் உடல் பருமன் பிரச்சினையை குறைப்பதில் பசு நெய்க்கு முக்கிய பங்குண்டு. பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும். குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் அளிக்கும். எருமை நெய்யை உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் சாப்பிடுவதுதான் சரியானது.