என் மலர்
பொது மருத்துவம்
உலர் பழங்களை ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?
- உண்ண வேண்டிய உலர் பழங்கள்.
- புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் அதிகம் கலந்திருக்கும்.
உலர் பழங்கள் அளவில் சிறியவை. ஆனால் ஊட்டச்சத்துகள் மிகுந்தவை. பழங்களை தவிர்க்கும் குழந்தைகள் கூட உலர் பழங்களை ருசிக்க விரும்புவார்கள். சுவையான, குறைவான கலோரி கொண்ட சிற்றுணவை தேர்வு செய்ய தடுமாறுகிறீர்களா?
பசியை போக்குவதுடன், உற்சாகமாக செயல்பட வைக்கும் உணவு வகைகளை விரும்புகிறீர்களா? ஆம்! எனில் உலர் பழங்களை தேர்வு செய்யலாம். ஏனெனில் உலர் பழங்களில் சோடியம், கொலஸ்ட்ரால் அளவு குறைவாகவே இருக்கும்.
புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் அதிகம் கலந்திருக்கும். அவை வழங்கும் நன்மைகள் ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகை செய்யும். உலர் பழங்களை ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?
பிஸ்தா
தொடர்ந்து உலர் பழங்கள் சாப்பிடும் வழக்கம் கொண்டவர்களுக்கு பிஸ்தா சிறந்த தேர்வாக அமையும். இது பசியை கட்டுப்படுத்தி நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்கும் உணர்வை தரும். இதில் ஒலிக் அமிலம், ஆன்டி ஆக்சிடென்டுகள், கரோட்டின்கள், வைட்டமின் ஈ, தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, செலினியம், துத்தநாகம் மற்றும் பாலிபீனாலிக், அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
ஆரோக்கிய நன்மைகள்:
* நீரிழிவு நோயை தடுக்கும்.
* கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்.
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
* உடல் எடையைக் குறைக்க உதவும்.
28 கிராம் பிஸ்தாவில் புரதம் 5.72 கிராம், நார்ச்சத்து 3 கிராம், கார்போஹைட்ரேட் 7.7 கிராம், கொழுப்பு 12.85 கிராம், 159 கலோரிகள் உள்ளன.
முந்திரி
இதில் உடலுக்கு தேவையான வைட்டமின் ஈ, வைட்டமின் பி6, புரதம் மற்றும் மெக்னீசியம் போன்றவை நிறைய உள்ளன. சிறுநீரக வடிவிலான இந்த உலர் பழம் உடல் எடையைக் குறைக்கவும், இதய நோய் ஏற்படும் அபாயத்தை தடுக்கவும், கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும்.
28 கிராம் முந்திரி பருப்பில் புரதம் 5 கிராம், நார்ச்சத்து ஒரு கிராம், இரும்பு (தினசரி தேவையில் 11 சதவீதம்), தாமிரம் (தினசரி தேவையில் 67 சதவீதம்), கார்போஹைட்ரேட் 9 கிராம், கொழுப்பு 12 கிராம், 157 கலோரிகள் உள்ளன.
அத்தி
ஊட்டச்சத்துக்கள் மிகுந்த அத்தி, எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும். புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். உடல் எடையை குறைக்க உதவும்.
100 கிராம் உலர்ந்த அத்திப்பழத்தில் புரதம் 3.3 கிராம், நார்ச்சத்து 9.8 கிராம், இரும்பு 2.03 மி.கி., மெக்னீசியம் 68 மி.கி., கால்சியம் 162 மி.கி., வைட்டமின் சி 1.2 மி.கி., 249 கலோரிகள் உள்ளடங்கி இருக்கின்றன.
பாதாம்
இது உலர் பழங்களிலேயே முதன்மையானது, பிரபலமானது. இதில் வைட்டமின் ஈ, அத்தியாவசிய எண்ணெய்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளடங்கி இருப்பதால் பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் ஏற்றது. இதனை அப்படியே பச்சையாகவோ, வறுத்தோ, தண்ணீரில் ஊறவைத்தோ சாப்பிடலாம்.
ஆரோக்கிய நன்மைகள்:
* இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
* உடல் எடையை சீராக நிர்வகிக்க துணை புரியும்.
* சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு பலம் சேர்க்கும்.
* ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
28 கிராம் பாதாமில் 6 கிராம் புரதம், 4 கிராம் நார்ச்சத்து, தினசரி வைட்டமின் ஈ தேவையில் 35 சதவீதம், தினசரி மெக்னீசியம் தேவையில் 20 சதவீதம், தினசரி கால்சியம் தேவையில் 8 சதவீதம் இருக்கிறது.
பேரீட்சை
உலர் பேரீச்சம்பழத்தில் நார்ச்சத்து, இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இந்த உலர் பழம் குளிர்காலத்தில் ஆரோக்கியத்தை பாதுகாக்க ஏற்றது. உடல் எடையைக் குறைக்க உதவும். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். உடல் ஆற்றல், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 7 கிராம் பேரீச்சம்பழத்தில் (ஒரு பழம்) புரதம் 0.2 கிராம், நார்ச்சத்து 0.6 கிராம், சோடியம் 0.14 மி.கி, கார்போஹைட்ரேட் 5.3 கிராம், 20 கலோரிகள் உள்ளன.
ஒரு நாளைக்கு எத்தனை உலர் பழங்கள் சாப்பிட வேண்டும்?
உலர் பழங்களின் அதிகபட்ச நன்மைகளைப் பெற, தினமும் 4 முதல் 7 வரை சாப்பிடலாம். சரியான அளவில் உட்கொள்வது உடலுக்கு சரியான ஊட்டச்சத்தை அளிக்கும்.
எல்லா உலர் பழங்களையும் ஒரே நேரத்தில் சாப்பிடலாமா?
ஏதேனும் ஒரு உலர் பழம் சாப்பிடுவதாக இருந்தால் 4 முதல் 7 வரை உட்கொள்ளலாம். அனைத்து உலர் பழங்களையும் சாப்பிடுவதாக இருந்தால் எல்லாவற்றிலும் ஒன்று, இரண்டு எடுத்துக்கொண்டு மொத்தம் ஒரு கைப்பிடி அளவுக்குள்ளாகவே (20 முதல் 30 கிராமுக்குள்) சாப்பிட வேண்டும்.
உடல் எடையை குறைப்பதற்கு எந்த உலர் பழம் சிறந்தது?
உடல் எடை குறைப்பு நடவடிக்கையை விரைவுபடுத்த விரும்பினால், தினமும் பேரீச்சம்பழம், அக்ரூட் பருப்புகள், உலர் திராட்சை, ஆப்ரிகாட் போன்றவற்றை மிதமான அளவில் உட்கொள்ளலாம்.
உடல் எடை அதிகரிக்க எந்த உலர் பழம் சிறந்தது?
உடல் எடை அதிகரிக்க விரும்பினால், முந்திரி, பாதாம், சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணி விதைகளை சாப்பிடுவது நல்லது.
உலர் பழங்களை இரவில் சாப்பிடலாமா?
உலர் பழங்களை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்த பிறகு அதிகாலையில் சாப்பிடுவதே சிறந்தது.