search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    தூக்கத்தைக் கெடுக்கும் குறட்டையை விரட்டும் இயற்கை வழிகள்...
    X

    தூக்கத்தைக் கெடுக்கும் குறட்டையை விரட்டும் இயற்கை வழிகள்...

    • 'குறட்டை' தீவிரமான உடல்நலக் கோளாறின் அறிகுறியாக இருக்கலாம்.
    • குறட்டை பிரச்சினையை தீர்ப்பதற்கு இயற்கை வழிகள் சிலவற்றைக் காண்போம்.

    தூங்கும்போது, மூச்சுக்காற்று தொண்டைப் பகுதியில் உள்ள மெல்லிய தளர்வான திசுக்களின் வழியாகச் செல்வதால் ஏற்படும் அதிர்வு ஒலியையே 'குறட்டை' என்கிறோம். குறட்டை வருவது இயல்பானதுதான் என்றாலும், பலருக்கு இது மிகப்பெரிய பிரச்சினையாக மாறிவிடுகிறது. சில நேரங்களில், 'குறட்டை' தீவிரமான உடல்நலக் கோளாறின் அறிகுறியாகவும் இருக்கலாம். அதிகப்படியான உடல் எடையைக் குறைத்தல், மதுப்பழக்கத்தை தவிர்த்தல், பக்கவாட்டு நிலையில் படுத்து உறங்குதல், சற்று உயரமான தலையணையைப் பயன்படுத்துதல் போன்ற ஒரு சில வாழ்வியல் மாற்றங்களை மேற்கொள்வதன் மூலமாக குறட்டை விடுவதை நிறுத்த முடியும். இதுதவிர குறட்டை பிரச்சினையை தீர்ப்பதற்கு இயற்கையான வழிகள் சிலவற்றைக் காண்போம்.

    நீராவி பிடித்தல்: குறட்டைக்கான காரணங்களில் ஒன்று மூக்கில் ஏற்படும் அடைப்பு. இதனால், தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும். இதற்கு ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் தண்ணீரை எடுத்துக்கொண்டு, அதில் இருந்து வரும் நீராவியை 10 நிமிடங்களுக்கு மூக்கு வழியாக உள்ளிழுக்க வேண்டும். படுக்கைக்குச் செல்லும் முன்பு இவ்வாறு செய்யலாம். இதனால், மூக்கில் உண்டாகும் அடைப்பு நீங்கி, குறட்டை விடுவது நிற்கும்.

    புதினா மற்றும் வெந்தயம்: செரிமானப் பிரச்சினைகளாலும் குறட்டை ஏற்படலாம். இதற்கு, புதினா மற்றும் வெந்தயம் சிறந்த தீர்வாகும். வெந்தயம் தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறலுக்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது. சிறிதளவு வெந்தயத்தை தண்ணீரில் அரைமணி நேரம் ஊற வைத்து, அதை தூங்கச் செல்வதற்கு முன்பு சாப்பிடலாம். அதேபோல், ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வெந்தயப் பொடி மற்றும் சிறிதளவு புதினா இலைகளைப் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இந்த நீரை வடிகட்டி, அதில் சிறிது தேன் கலந்து குடிக்கலாம். இதனால், செரிமான பிரச்சினை நீங்குவதுடன், இரவில் நிம்மதியான உறக்கமும் கிடைக்கும்.

    ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன்: அரை டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் அரை டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் இரண்டையும் நன்றாகக் கலந்து, படுக்கைக்குச் செல்லும் முன்பு சாப்பிடலாம். இதுதவிர ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து தூங்கச் செல்வதற்கு முன்னர் குடிக்கலாம். இது தொண்டைக்கு இதமாக இருப்பதுடன், குறட்டையையும் தடுக்கும்.

    பூண்டு: பூண்டில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இது சுவாச மண்டலத்தைச் சுத்தப்படுத்தி, நாசி பாதையில் சளி படிவதைத் தடுத்து குறட்டையைக் குறைக்கும். 2 அல்லது 3 பூண்டு பற்களை எடுத்து மென்று சாப்பிடவும். பின்னர் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கவும். படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் குறட்டை நிற்கும்.

    Next Story
    ×