என் மலர்
பொது மருத்துவம்
நீரிழிவு நோயால் உடல் மெலிவது ஆபத்தானதா?
- நீரிழிவு நோய் இருப்பவர்கள் பாதங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் அதிகமாக மெலிவது கீழ்க்கண்ட காரணங்களால் ஏற்படலாம்
இந்தியாவில் 40 வயதுக்கு மேற்பட்ட பலருக்கும், 40 வயதுக்கு கீழே உள்ளவர்களில் சிலருக்கும் பொதுவான நோயாக நீரிழிவு பிரச்சினை இருக்கிறது.
ரத்த சர்க்கரை குறித்து அவ்வபோது மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்வதும், அதை கட்டுக்குள் வைத்துக் கொள்வதும் அவசியமானது. அதே சமயம், ரத்த சர்க்கரை அளவு கட்டுக்கடங்காத வகையில் செல்லும்போது உடல் உள் உறுப்புகளை அது கொஞ்சம், கொஞ்சமாக பாதிக்கத் தொடங்கும். இந்த பாதிப்புகளை நீங்கள் மீண்டும் சரி செய்ய இயலாது.
நாம் உண்ணும் உணவில் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து ஆகிய மூன்று ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. மாவுச்சத்தில் குளுக்கோஸ் அதிகமாக உள்ளது. மனிதனின் உடலில் சுரக்கும் இன்சுலின் இந்த குளுக்கோசை செல்களுக்கு உள்ளே எடுத்துச் சென்று நமக்கு சக்தியைக் கொடுக்கின்றது. நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் குறைவாக சுரப்பதால் இந்த குளுக்கோசால் செல்களுக்கு செல்ல முடிவதில்லை அதனால் தசை மற்றும் கொழுப்பில் உள்ள குளுக்கோஸ் பயன்படுத்துவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் மெலிகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் அதிகமாக மெலிவது கீழ்க்கண்ட காரணங்களால் ஏற்படலாம்:
1) ரத்தத்தில் அதிகமான சர்க்கரை அளவு.
2) நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ளும் மெட்பார்மின் போன்ற மாத்திரைகளால் உடல் மெலியலாம்,
3) ஹைபர் தைராய்டிசம் அல்லது புற்றுநோய் அல்லது செலியாக் நோய் போன்று வேறு சில நோய்களின் பாதிப்பாக இருக்கலாம்.
ஆரோக்கியமான உணவை உட்கொண்டு உடல் எடையை கட்டுப்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோய் வருவதை தடுக்க முடியும்.
நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயபடிக் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்