என் மலர்
சமையல்
- மெல்லிசான வெண்ணெய்யைப் போன்ற பதத்தில் மாட்டிறைச்சி கொழுப்பு கிடைக்கும்.
- முதல் முறையாக மாட்டிறைச்சி கொழுப்பு உட்கொள்பவர்களுக்கு அஜீரணம் உள்ளிட்ட செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.
திருப்பதி வெங்கடாசலபதி கோவில் வழங்கப்படும் உலகப் பிரசித்தி பெற்ற பிரசாதமான லட்டு, மாட்டிறைச்சி கொழுப்பு கலந்த நெய்யினால் தயாரிக்கப்படுகிறது என்று ஆய்வில் தெரியவந்தது. இந்து மதத்தில் மாடு புனிதமான விலங்காகக் கருதப்படுவதால் பிரசாதத்தில் மாட்டிறைச்சி கொழுப்பு கலந்தது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் உணவுகளில் மாட்டிறைச்சி கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்படுவது புதிதானது அல்ல.
மாட்டிறைச்சியில் இருந்து கொழுப்பு தயாரிக்கப்படுவது எப்படி?
கசாப்பு செய்யப்பட்ட மாட்டின் இறைச்சியில் இருந்து கொழுப்பு அதிகம் உள்ள திசுக்களை வெட்டி எடுத்து அதிக கொதிநிலையில் உள்ள நீரில் கொதிக்க விட்டு அதன் கசடுகளை நீக்கி சுத்தப்படுத்துவதன் மூலம் மெல்லிசான வெண்ணெய்யைப் போன்ற பதத்தில் மாட்டிறைச்சி கொழுப்பு கிடைக்கும்.
மாட்டின் சிறுநீரகத்தை சுற்றியுள்ள இறைச்சியில் அதிக கொழுப்புத் தன்மை உள்ளதால் அதிலிருந்தே பெரும்பாலும் கொழுப்பு தயாரிப்பதற்கான மாட்டிறைச்சி பெறப் படுகிறது. இந்த கொழுப்பானது மனிதர்கள் உட்கொள்வதற்குத் தகுந்தது ஆகும். அதிக கொதிநிலையில் வறுக்கப்படும், ரோஸ்ட் செய்யப்படும் உணவுகளில் இந்த கொழுப்பானது சுவைக்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
நன்மைகள் மற்றும் தீமைகள்
இந்த மாட்டிறைச்சி கொழுப்பில் உடலுக்கு நன்மை பயக்கும் மோனோ மற்றும் பாலி [mono and poly unsaturated] கொழுப்புகள் நிறைந்துள்ளது. இதில் உள்ள Conjugated linoleic acid (CLA) மற்றும் omega-6 கொழுப்பு ஆகியவை ரத்தக்குழாய் அடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை தடுக்கிறது.
எதிர்ப்பு சக்தி, எலும்பு மற்றும் சரும ஆரோக்கியம் உள்ளிட்ட உடலின் பல்வேறு இயக்கங்களுக்கு அத்தியாவசியமான fat-soluble வைட்டமின்கள் மாட்டிறைச்சி கொழுப்பில் உள்ளது. இருப்பினும் இதை அளவுக்கு மீறி உட்கொள்வதால் இதயம் மற்றும் ரத்தநாளங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். முதல் முறையாக மாட்டிறைச்சி கொழுப்பு உட்கொள்பவர்களுக்கு அஜீரணம் உள்ளிட்ட செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.
- முடக்கறுத்தான் இலைகளை அரைத்து பூசி குளித்து வரலாம்.
- மலச்சிக்கல் தோன்றும் சமயம் முடக்கறுத்தான் கீரை சாப்பிடலாம்.
மூட்டுகளை முடக்கி வைக்கும் வாதநோயை அகற்றுவதால் இந்த கீரைக்கு முடக்கறுத்தான் கீரை என்று பெயர். தோல் நோய்களுக்கு முடக்கறுத்தான் இலைகளை அரைத்து பூசி குளித்து வரலாம். வயிற்று உப்புசம் மற்றும் மலச்சிக்கல் தோன்றும் சமயம் முடக்கறுத்தான் கீரை சாப்பிடலாம்.
முடக்கறுத்தான் கீரை சாப்பிடும் பொழுது சிலருக்கு பேதி உண்டாகும். அதனால் முதலில் சாப்பிடும் பொழுது ஒரு விடுமுறை நாளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது.
தேவையான பொருட்கள்:
முடக்கறுத்தான் இலை- 100 கிராம்
வெங்காயம் -2 (பொடிதாக அரிந்து கொள்ளவும்)
தக்காளி- 2
புளி- சிறிய எலுமிச்சம்பழம் அளவு
சாம்பார் பொடி- 2 ஸ்பூன்
மஞ்சள்தூள்- அரை ஸ்பூன்
தனியாதூள்- 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் -2 ஸ்பூன்
வெந்தயம்- கால் ஸ்பூன்
உப்பு- சுவைக்கேற்ப
செய்முறை:
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, முடக்கறுத்தான் இலையை வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் ஆற வைத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் தாளித்து, தக்காளி, வெங்காயம் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் புளியை கரைத்து ஊற்றி, சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, தனியா பொடிகளை கலந்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அத்துடன் அரைத்து வைத்துள்ள முடக்கறுத்தான் கலவையை போட்டு உப்பு கலந்து கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த குழம்பை சூடான சாதத்துடனும், இட்லி, தோசை, பொங்கல் போன்றவற்றிற்கு தொட்டு சாப்பிடலாம்.
மூட்டு வலி மற்றும் மாதவிடாய் காலங்களில் உண்டாகும் வயிற்றுவலி, மலச்சிக்கல் போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாக அமையும்.
- தோசைக்கு அரைக்கும் மாவில் சிறிது கொள்ளை சேர்த்து அரைத்தால் தோசை மிருதுவாக இருக்கும்.
- டால்டா, நெய் கெட்டியாகிவிட்டால் ஸ்பூனை சூடாக்கி கலந்தால் சுலபமாக வரும்.
* இட்லி மாவு நீர்த்துப் போய்விட்டால் அதில் எண்ணெய் இல்லாமல் வறுத்த ரவையை சிறிது கலந்து அரை மணி நேரம் ஊறிய பிறகு இட்லி வார்த்தால் சுவையாக இருக்கும்.
* ஒரு கைப்பிடி வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து மோரில் கலக்கி பச்சை மிளகாய்களை ஊற வைத்து பின்னர் காயப்போட்டால் மிளகாய் வற்றல் பார்க்க வெண்மையாகவும், அதிக ருசியாகவும் இருக்கும்.
* இடியாப்பத்திற்கு மாவு பிசையும்போது சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்துக்கொண்டால் இடியாப்பம் பிழிவது சுலபமாக இருக்கும்.
* வத்தக்குழம்பு தாளிக்கும்போது ஆரஞ்சு பழத்தோலையும் சேர்த்துக் கொண்டால் நல்ல சுவையுடன் இருக்கும்.
* கொள்ளு பயிறை காலையில் ஊற வைத்து மாலையில் தண்ணீரை வடித்து ஒரு துணியில் கட்டி மறுநாள் உலர்த்த வேண்டும். உலர்ந்த பின் தேய்த்தால் பருப்பு கிடைக்கும். இந்த பருப்பில் சாம்பார் செய்தால் சுவையாக இருக்கும்.
* தோசைக்கு மாவு அரைக்கும்போது உளுந்துக்கு பதில் கொள்ளு பருப்பை சேர்த்து அரைத்து செய்தால் தோசை பூப்போல மிருதுவாக இருக்கும்.
* ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேக வைத்து, ஆறியதும் தக்காளி சாறு சேர்த்து தினமும் சாப்பிட்டால் உடல் வலிமை பெறும்.
* பஜ்ஜி செய்யும் போது கடலை மாவு, அரிசி மாவுடன் ஒரு பங்கு மைதா மாவு சேர்த்தால் பஜ்ஜியின் சுவையே அலாதி.
* அடை மாவுடன் கார்ன் பிளேக்சை பொடித்து சேர்த்து அடை சுட்டால் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.
* தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் தயார் செய்யும்போது கொஞ்சம் பொட்டுக்கடலையை வறுத்துக்கொட்டினால் சுவையாக இருக்கும்.
* பால் உறைக்கு ஊற்றும்போது வெதுவெதுப்பாக இருந்தால் தான் தயிர் நன்கு உறையும். சூடாகவோ அல்லது ஆறியதாகவோ இருந்தால் தயிர் சரியாக உறையாது.
* டால்டா, நெய் போன்றவை கெட்டியாக இருக்கும்போது பாத்திரத்தில் இருந்து எடுப்பது சிரமமாக இருக்கும். ஸ்பூனை சூடாக்கிக் கொண்டு எடுத்தால் சுலபமாக வரும்.
* உளுந்தம் பருப்பை வடைக்கு அரைக்கும் போது பச்சரிசியையும் கொஞ்சம் சேர்த்து அரைத்தால் வடை மொறுமொறுவென்று இருக்கும். அதே போல் வடைக்கு அரைக்கும் போது தண்ணீர் அதிகமானால் சிறிது பச்சரிசி மாவினை சேர்த்தால் கெட்டியாகிவிடும்.
* சப்பாத்தி மாவு பிசையும்போது சிறிது பனைவெல்லத்தை காய்ச்சி அதில் சேர்த்து மாவு பிசைந்து சாப்பிட்டால் தனி டேஸ்ட்டாக இருக்கும்.
* சமையல் அறையில் இருக்கும் கத்தரிக்கோலை சாணைப்பிடிக்க ஈஸியான வழி கல் உப்பு ஜாடிக்குள்ளே சொருகி சிறிது நேரம் கத்தரித்தால் உப்புடன் உரசும் போது கத்திரிக்கோலில் சாணை ஏறிவிடும்.
* எந்த வகை பாயசம் செய்யும்போதும் ஏலக்காய்ப் பொடியைக் கடைசியாக சேர்க்க வேண்டும். ஒரு சிட்டிகை பச்சைக் கற்பூரம் சேர்த்தால் அதன் வாசனை அறையெங்கும் மணக்கும்.
* உளுந்து கொழுக்கட்டை செய்யும்போது, தேங்காய் எண்ணெய்யில் தாளித்தால் கொழுக்கட்டை தேங்காய் எண்ணெய் வாசனையோடு கமகமக்கும்.
- பித்தம், கபம் அதிகரித்த நிலைக்கு முசுமுசுக்கை சிறந்த மருந்து.
- நுரையீரலில் படிந்துள்ள சளியைக் கரைத்து வெளியேற்றக் கூடியது.
முசுக்கை கொடி வகையைச் சார்ந்தது. இலைகளிலும், முதண்டுகளிலும், சொரசொரப்பாக ரோம இழை போலக் காணப்படும். தரைகளிலும், மற்ற செடிகளிலும், வேலிகளிலும் பற்றி வளரும்.
பித்தம், கபம் அதிகரித்த நிலைக்கு முசுமுசுக்கை சிறந்த மருந்து. பித்தத்துக்கு முசுமுசுக்கை மூலிகை ஒரு வரப்பிரசாதம். கபம் அதிகமாகி சுவாசமண்டலம் பாதிக்கும் நிலைக்கும் இம்மூலிகை ஒரு சிறந்த நிவாரணி ஆகும். நுரையீரலில் படிந்துள்ள சளியைக் கரைத்து வெளியேற்றக் கூடியது.
சிலருக்கு உடல் சூடாக இருக்கும். ஆனால் கபம் அதிகரித்து சளி, இருமல் என தொந்தரவு இருந்துகொண்டே இருக்கும். இத்தகைய உடல் தன்மையுள்ளவர்களுக்கு முசுமுசுக்கை சிறந்த மருந்து. பித்தத்தால் உண்டாகும் மயக்கம், தலைசுற்றல், ரத்த அழுத்தம் போன்றவற்றை நீக்கும் ஆற்றல் உள்ளது.
இருமல், சுவாச நோய்கள், காசம், தலைவலி, தலையில் நீர்க் கோவையால் உண்டாகும் வலி, வறட்டு இருமல், தொண்டை வலி போன்றவற்றுக்கும் முசுமுசுக்கை சிறந்த மருந்தாகிறது.
தேவையான பொருட்கள்:
முசுமுசுக்கை இலை இஞ்சி-100 கிராம்
இஞ்சி-10 கிராம் (தோல்சீவி பொடிதாக அரிந்து கொள்ளவும்)
கறிவேப்பிலை கொத்தமல்லித் தழை-1 கைபிடி அளவு
புளி- ஒரு கொட்டைப் பாக்களவு
மிளகாய்வற்றல்- 3
கறுப்பு உளுந்து- 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி
உப்பு- சுவைக்கேற்ப
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் புளி, மிளகாய் வற்றல், கறுப்பு உளுந்து போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் வெட்டி வைத்துள்ள இஞ்சி மற்றும் முசுமுசுக்கை இலை, கொத்தமல்லித் தழை, கறி வேப்பிலையை சேர்த்து வதக்கி, சற்று ஆறிய பின்னர் உப்பு கலந்து மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் முசுமுசுக்கை துவையல் ரெடி.
இதை சூடான சாதத்துடன் சேர்த்து சிறிது நெய் கலந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம். இதனால் வயிற்றுவலி, பித்தம் நீங்கும், அஜீரணம் நீங்கும், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும், கல்லீரல் நன்கு செயல்பட உதவும்.
- அகத்திக்கீரைக்கு உடலில் உள்ள வெப்பத்தை அகற்றும்.
- லேசான கசப்பு தன்மை உடையது.
அகத்திக்கீரைக்கு உடலில் உள்ள வெப்பத்தை அகற்றும் தன்மையுள்ளதால் இந்த கீரை அகத்தி கீரை எனப்படுகிறது இதில் இரண்டு வகை உள்ளது. ஒன்றில் வெள்ளை நிற பூ பூக்கும். மற்றொன்று சிவப்பு நிறத்தில் பூக்கும்.
இந்த கீரையில் பலவகை யான சத்துக்கள் உள்ளன. இது லேசான கசப்பு தன்மை உடையது. இதன் பூக்களும் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.
வயிற்றுப் புண்களை ஆற்றும் திறன் இந்த கீரைக்கு உண்டு. இதை சாப்பிட்டால் வயிற்றில் உள்ள பூச்சிகள் நீங்கும். வைட்டமின் ஏ மற்றும் கரோட்டின் சத்தும் இதில் உள்ளது. இரும்பு, சுண்ணாம்பு சத்துக்களும் நிறைந்துள்ளது.
கண் பார்வையை அகத்திகீரை துல்லியமாக்கும். அதனால் இது மாலை கண் நோய்க்கு சிறந்த மருந்தாகும்.
தேவையான பொருட்கள்:
அகத்திகீரை- ஒரு சிறிய கட்டு
சிறிய வெங்காயம்- 100 கிராம் (சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்)
சீரகம்- 1 தேக்கரண்டி
மிளகுபொடி- 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல்- ஒரு கப்
உப்பு- தேவைக்கு
செய்முறை:
தேங்காய் துருவலை அரைத்து 200 மி.லி நீரில் கலந்து வடிகட்டி முதல் தேங்காய் பால் எடுக்க வேண்டும். பின்னர் மறுபடியும் 200 மி.லி நீர் கலந்து வடிகட்டி இரண்டாம் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடிகனமான பாத்திரத்தை எடுத்து இரண்டாம்முறை எடுத்த பாலை ஊற்ற வேண்டும். அதில் அகத்திகீரை, சீரகம், மிளகுத்தூள் கலந்து நன்கு வேக வைக்க வேண்டும்.
இந்த கலவை நன்கு வெந்தவுடன் முதலில் எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை சேர்க்க வேண்டும். அதன்பிறகு உப்பும் கலந்து இறக்கிவிட வேண்டும். தேங்காய்பாலில் வேகவைப்பதால் கசப்புத்தன்மை தெரியாது.
இந்த கூட்டில் உள்ள தேங்காய் பாலை மட்டும் வடிகட்டி 50 மி.லி. அளவு எடுத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றில் இருக்கும் தேவையற்ற பூச்சிகள் அழியும். இதை மாதம் ஒருமுறை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். வயிற்றுப்புண், வாய்ப்புண் மற்றும் கருப்பையில் உள்ள புண்களுக்கும் இந்த கூட்டு சிறந்த மருந்து.
- வயிற்று கோளாறுகளை சரிசெய்து மலச்சிக்கலையும் போக்கும்.
- உடலுக்கு குளிர்ச்சியையும், சக்தியையும் அளிக்க கூடியது.
வெந்தய கீரை உடலுக்கு குளிர்ச்சியையும், சக்தியையும் அளிக்க கூடியது. வெந்தய கீரையில் சுண்ணாம்பு சத்து, புரதம், வைட்டமின் ஏ.பி.சி சத்துக்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு குளிர்ச்சியை தந்து, வயிற்று கோளாறுகளை சரிசெய்து மலச்சிக்கலையும் போக்கும்.
கசப்பான ருசியை தந்தாலும், உணவு பதார்த்தங்களில் கலக்கும் போது விரும்பி சாப்பிடும் அளவிற்கு சிறந்த ருசியையும், மணத்தையும் கொடுக்கும்.
தேவையான பொருட்கள்:
வெந்தய கீரை-1 கட்டு
பட்டாணி- 50 கிராம் (ஊறவைத்து வேகவைத்துக் கொள்ளுங்கள்)
வெண்ணெய்- 3 ஸ்பூன்
பால்- 100 மி.லி
கரம் மசாலா தூள் -1 ஸ்பூன்
சீரகம்- 1 ஸ்பூன்
உப்பு- தேவைக்கு
சர்க்கரை- 1 ஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு:
பெரிய வெங்காயம் 1
முந்திரி பருப்பு 5
பச்சைமிளகாய் 4
இஞ்சி சிறுதுண்டு
ஏலக்காய் -3
கிராம்பு- 2
செய்முறை:
வாணலியில் ஒரு தேக்கரண்டி வெண்ணெய் அல்லது எண்ணெய் போட்டு காய்ந்ததும் வெங்காயத்தை நறுக்கிப்போடுங்கள். முந்திரி பருப்பு, பச்சைமிளகாய், இஞ்சி, கிராம்பு, ஏலக்காய் போன்றவைகளையும் கலந்து நன்றாக வதக்க வேண்டும். ஆறிய பின்னர் அனைத்தையும் ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் மீண்டும் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகத்தை தாளித்து, வெந்தய கீரை மற்றும் வேக வைத்த பட்டாணியையும் அதில் சேர்க்க வேண்டும்.
அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை கொட்டி கொதிக்க வைக்க வேண்டும். சிறு தீயில் வேகவைத்து இறுதியாக பாலையும் சேர்க்க வேண்டும். நன்றாக கொதித்த பின்பு உப்பு, சர்க்கரை சேர்க்கவும்.
இந்த பட்டாணி பால் கூட்டு சப்பாத்திக்கு அதிக சுவை தரும்.
- கற்பூரவல்லி மிகச் சிறந்த மருத்கதுவம் கொண்டர் மூலிகை.
- வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
கற்பூரவல்லி மிகச் சிறந்த மருத்கதுவம் கொண்டர் மூலிகை. இது ஓமவல்லி என்றும் அழைக்கப்படுகிறது. கற்பூரம் மற்றும் ஓமம் நறுமணம் உள்ள இந்த செடியின் இலைகள் நீர்ச்சத்து நிறைந்து தடித்து இருக்கும். இதன் இலைகளில் உள்ள கார் வாக்ரால், தைமால் மற்றும் பீட்டா காரோபைலின் போன்ற வேதியியல் பொருட்கள், இலைகளின் நறுமணம் மருத்துவ குணங்களுக்கு காரணமாகின்றன.
குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு ஒவ்வாமையால் உண்டாகும் தும்மல் மற்றும் சளி, இருமலுக்கு கற்பூரவல்லி அருமருந்து. தோலில் உண்டாகும் ஒவ்வாமை, தோலில் ஏற்படும் கானாக்கடி போன்ற தடிப்புக்கும் இதன் இலையை தோலில் தேய்க்கலாம். கற்பூரவல்லி சருமத்துக்கு நல்ல மருந்து.
குழந்தைகளுக்கு பருப்புசாதத்தில் ஒரு கற்பூரவல்லி இலையைக் கலந்து பிசைந்து ஊட்டலாம். அப்போது உணவு நன்கு ஜீரணமாகும்.
கற்பூரவல்லிச் செடியை மிக எளிதாக தொட்டிகளில் வளர்க்கலாம். செடியின் தண்டை உடைத்து நட்டால் புதுச்செடி வளர்ந்து விடும்.
தேவையான பொருட்கள்:
கற்பூரவல்லி இலை- 30
கறுப்பு உளுந்து- 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல்- 4
தேங்காய்த் துருவல்-4 ஸ்பூன்
புளி- எலுமிச்சை அளவு
உப்பு- சுவைக்கேற்ப
பெருங்காயம் தூள்- 1 ஸ்பூன்
நல்லெண்ணெய்- 3 ஸ்பூன்
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, புளி, உளுந்து, மிளகாய்வற்றலை வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கற்பூரவல்லி இலைகளை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். சற்று ஆறிய பின் தேங்காய்த் துருவல் கலந்து மிக்சி ஜாரில் போட்டு அரைத்து அதன்பின் உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து கலக்க வேண்டும். சுவையான கற்பூரவல்லி சட்னி ரெடி.
இந்த சட்னி செய்வதற்கு தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. இந்த சட்னி சுவையாக இருக்கும். இட்லி,தோசைக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். சூடான சாதத்துடனும் கலந்து சாப்பிடலாம்.
வித்தியாசமான சுவையுடன் இருக்கும். சளி, இருமல், அஜீரணம், ஆஸ்துமா போன்ற நோய்களால் அவதிப்படுபவர்கள் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம்.
- சிறிது இட்லி மாவு சேர்த்தால் பஜ்ஜி உப்பி வரும், உடலுக்கு கெடுதல் கிடையாது.
- காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை அலமாரிகளில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
* இட்லி கல் மாதிரி இருப்பதாக தெரிந்தால், நான்கு பச்சை அப்பளத்தை தண்ணீரில் நனைத்து பின் மிக்சியில் அரைத்து எடுத்து வேக வைக்கும் இட்லி மாவில் சேர்த்து அவித்தால் இட்லி பூ போல வரும்.
* ஒரு வெண்டைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, நீரில் போட்டு இரவு முழுவதும் வைத்திருக்கவும். மறுநாள் காலை அந்த நீரை சப்பாத்தி செய்யும் மாவில் கலந்தால், சப்பாத்தி மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.
* பஜ்ஜி போடும்போது உப்பி வர சமையல் சோடா சேர்க்க வேண்டாம். சிறிது இட்லி மாவு சேர்த்தால் பஜ்ஜி உப்பி வரும், உடலுக்கு கெடுதல் கிடையாது.
* தேங்காய் துருவி அதை கொதி நீரில் போட்டு வைத்துவிட்டு பிறகு கை பொறுக்கும் சூட்டில் எடுத்து பிசைந்தால் நல்ல கெட்டியான தேங்காய் பால் கிடைக்கும்.
* காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை அலமாரிகளில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
* முருங்கை கீரை சமைக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்து சமைத்தால் முருங்கை இலைகள் ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கும்.
* பொரித்த அப்பளத்தை நொறுக்கி இரண்டு டீஸ்பூன் துருவிய தேங்காய், கருவேப்பிலை, புளி, ஒன்று அல்லது இரண்டு பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் அரையுங்கள். அசத்தலான அப்பள துவையல் ரெடி!
* உங்கள் வீட்டில் ஜவ்வரிசி பயன்பாடு இல்லாமல் இருந்தால் அதை கொண்டு சூப்பராக உடனடி ஸ்நாக்ஸ் செய்யலாம். அதற்கு ஜவ்வரிசியை கடாயில் வறுத்து உப்பு, காரம் தேவையான அளவு சேர்த்துக் கொண்டால் போதும். சுவையான காராப்பூந்தி தயார். மேலும் ருசி கூட்ட கருவேப்பிலை, இடித்த பூண்டுவை எண்ணெய்யில் பொரித்து அதனுடன் சேர்த்தால் அருமையாக இருக்கும்.
- கொழுப்பு பதார்த்தங்களை சாப்பிட்ட பின்பு வெங்காயம் சாப்பிட்டால் கொழுப்பு உடலில் தங்காது.
- பாலை லேசாக சூடு படுத்தி அரை ஸ்பூன் சர்க்கரை கரைத்து உறை ஊற்றினால் தயிர் கெட்டியாக கிடைக்கும்.
கார அடைக்கு பச்சரிசி சேர்ப்பது போல, கோதுமை ரவையை மற்ற பருப்புகளுடன் ஊற வைத்து அரைத்து வார்த்தால், அடை மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.
கேசரி செய்யும்போது நீரின் அளவைக்குறைத்து பால் கலந்து செய்தால், நல்ல மணத்துடன் இருக்கும். அதில் பேரீச்சை, அன்னாசி பழங்களையும் வெட்டிப்போட்டு பழக்கேசரி செய்தால் சுவையும், சத்தும் கூடும்.
தேநீர் டிகாஷனில் எலுமிச்சை சாறு, பனங்கற்கண்டு, ஏலக்காய் சேர்த்து குடித்தால் மணமாக இருக்கும். வாயுத்தொல்லை நீங்கும்.
நாள்பட்ட உளுந்தில் இட்லி, வடைக்கு அரைக்கும்போது மாவு பொங்கி வராது. பிரிட்ஜில் உளுந்தை வைத்து தேவைப்பட்டபோது பயன்படுத்தினால், உளுந்து நன்றாக பொங்கிவரும்.
புதுப்புளி விறைப்பாக இருக்கும். உருட்டி கல் உப்பு ஜாடியில் போட்டு வைத்தால், மிருதுவாகிவிடும், புளியை கரைப்பது எளிதாக இருக்கும்.
கொழுப்பு பதார்த்தங்களை சாப்பிட்ட பின்பு வெங்காயம் சாப்பிட்டால் கொழுப்பு உடலில் தங்காது.
அகத்திக்கீரைக்கு தண்ணீர் அதிகம் ஊற்றி, பச்சை நிறம் மாற சமைக்க வேண்டும். முருங்கைக்கீரையை நிறம் மாறும் முன்பு எடுத்துவிட வேண்டும்.
சீயக்காய் அரைக்கும்போது மற்ற பொருட்களுடன் வேப்பிலையையும் காயவைத்து அரைத்தால் பேன் வராது.
பாலை லேசாக சூடு படுத்தி அரை ஸ்பூன் சர்க்கரை கரைத்து உறை ஊற்றினால் தயிர் கெட்டியாக கிடைக்கும். ருசியும் மேம்படும்.
- தண்ணீரில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய், சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
நாளை விநாயகர் சதுர்த்தி. விநாயகருக்கு மிகவும் பிடித்தமான பூரண கொழுக்கட்டையை சுலபமாக பக்குவமாக செய்யும் முறையை விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு - 1 கப்
தேங்காய் -1 மூடி
வெல்லம் - 150 கிராம்
ஏலக்காய் - 2
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
பச்சரிசியை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்து பின் மிக்ஸியில் நைஸாக மாவாக அரைக்கவும். பின்னர் அதனை அடிகனமான வாணலியில் ஈரம் போக வறுத்து ஆற விடவும்.
மாவு 1 கப் என்றால் 2 மடங்கு அளவு தண்ணீரில் ஊற்றி அதில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய், சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்கு கொதித்தவுடன் மாவில் ஊற்றி கிளறவும். ஆறிய பின்னர் கையில் பிசைந்து உருட்டிக்கொள்ளவும். எல்லா வகை பூரண கொழுக்கட்டைகளுக்கும் மாவு தயாரிக்கும் விதம் இதுதான்.
வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் நெய் ஊற்றி, அதில் துருவிய தேங்காயை சேர்த்து லேசாக கிளற வேண்டும். (கலர் மாறக்கூடாது).
பின்னர் வடிகட்டிய வெல்ல கரைசலை சேர்க்க வேண்டும். லேசாக கிளறி விடவும். சிறிது நேரத்தில் தேங்காய், வெல்லம் கெட்டியானவுடன் ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கவும்.
மாவை சிறு சிறு உருண்டையாக உருட்டி கொள்ள வேண்டும். வாழையிலையில் உருண்டையை வைத்து தட்டி நடுவில் பூரணம் வைத்து கிண்ணம் போல் குவித்து மூட வேண்டும்.
இட்லி தட்டில் வைத்து ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்க வேண்டும். சூப்பரான சுவையான தேங்காய் பூரண கொழுக்கட்டை தயார்.
- புளிக்குழம்பு, ரசம், போன்றவற்றிற்கு புளியை ஊற வைக்கும்போது உப்பையும் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
- சோறு குழையாமல் இருக்க, சோறு வடிக்கும் முன்பு கொஞ்சம் நல்லெண்ணெய் அல்லது சிறிது நெய் கலந்து வடிக்க வேண்டும்.
* தோசை மாவுடன் வறுத்த ரவாவை கலந்து சுட தோசை மொறு மொறுப்பாக இருக்கும்.
* வற்றல் மிளகாய், பொட்டுக்கடலை ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு முன்பு தண்ணீரில் கழுவிக்கொள்வது சுகாதாரமானது.
* தாளிக்கும்போது மிளகாய் வற்றல் கருகாமல் இருக்க அதை தண்ணீரில் கழுவி எடுத்துக்கொண்டு கத்தரியால் நறுக்கிக் கொள்ளலாம்.
* புளிக்குழம்பு, ரசம், போன்றவற்றிற்கு புளியை ஊற வைக்கும்போது உப்பையும் சேர்த்து ஊற வைக்க வேண்டும். அப்போது தான் சுவையும் நன்றாக இருக்கும்.
* காய்கறிகள் வாடிப்போய் இருந்தால் தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து காய்கறிகளை சிறிது நேரம் ஊறவிட்டு எடுத்தால் பசுமையாக இருக்கும்.
* சோறு குழைந்து விடாமல் இருக்க, சோறு வடிக்கும் முன்பு கொஞ்சம் நல்லெண்ணெய் அல்லது சிறிது நெய் கலந்து வடிக்க வேண்டும். எலுமிச்சை சாறு சில துளிகள் விட்டும் வடிக்கலாம். சோறு பொல பொலவென்றிருக்கும்.
* இரவே உருளைக்கிழங்கை நறுக்கி வைக்க வேண்டுமா? எலுமிச்சை சாற்றில் கிழங்கு துண்டுகளைப் போட்டு பிரட்டி எடுத்து வைத்தால் கிழங்கு கருத்துப் போகாமல் இருக்கும்.
* முருங்கைக்கீரை தண்ணீர் சாறு வைக்கும்போது அரிசி களைந்த நீரில் அளவான உப்பிட்டு வெங்காயம் அரிந்து போட்டு தண்ணீர் கொதி வந்ததும் கீரையைப் போடவேண்டும். தாளிக்கும்போது மிளகாய் போட்டு சீரகத்தை நுணுக்கிப் போடவேண்டும். கடுகு போட வேண்டாம். நல்ல சுவை கிடைக்கும்.
* சாம்பார் கொதித்த பின்னரே காய்கறிகளை போடவேண்டும். காய்கள் வெந்ததும் புளி கரைசலில் கலந்து அதன்பிறகு தாளிக்கவேண்டும். தாளித்து கொதித்த பின் அரைத்த தேங்காய் விழுதைக் கலந்து கொதிக்கவிட்டு இறக்கினால் சாம்பார் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
* பச்சை மஞ்சள் கிடைக்கும்போது இரண்டு கிலோ வாங்கி கொதி தண்ணீரில் நன்றாக அவித்து நன்றாக உலர வைத்து சுத்தம் செய்து, மில்லில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் சுத்தமான மஞ்சள் தூள் கிடைக்கும். சமையலில் இந்த மஞ்சள்தூள் நல்ல நிறமாக கண்ணைப் பறிக்கும்.
* அரிசியையும், பருப்பையும் வாசனை வரும் வரை வறுத்து, பின்னர் களைந்து போட்டு பொங்கல் செய்தால் சீக்கிரம் வெந்து விடுவதுடன் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
- வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, தேங்காய் துருவல், காய்ந்த திராட்சையை வறுத்து பொடித்துக் கொள்ளவும்.
- பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு ஏலக்காய் பொடி, பால், நெய் சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவில் லட்டுக்களை செய்து கொள்ளுங்கள்.
கிருஷ்ணருக்குப் பிடித்தமானவற்றில் அவலும் ஒன்று. அவல் லட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
அவல் -1 கப்
பொட்டுக்கடலை - 1 கப்
முந்திரி - 6
திராட்சை - 6
ஏலக்காய்ப்பொடி
பால் - அரை கப்
சர்க்கரை - 1 கப் நெய்
தேங்காய்துருவல் - 2 கப்
செய்முறை:
அவல், பொட்டுக்கடலை இரண்டையும் சுத்தம் செய்து தனித்தனியே வெறுமனே வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, தேங்காய் துருவல், காய்ந்த திராட்சையை வறுத்து பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையையும் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
அகலமான பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு ஏலக்காய் பொடி, பால், நெய் சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவில் லட்டுக்களை செய்து கொள்ளுங்கள். வறுத்த முந்திரியை மேல் தெரிவதுபோல் வைத்து லட்டு பிடித்துக்கொள்ளலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் பிரசாதமாக கிருஷ்ணருக்கு பிடித்த அவல் லட்டுக்கள் தயார்.