search icon
என் மலர்tooltip icon

    ராஜஸ்தான்

    • பிறக்கும் போது நூர் ஷெகாவத்தின் பாலினம் 'ஆண்' என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
    • திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் வேலைகளில் இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை.

    ஜெய்ப்பூர் கிரேட்டர் முனிசிபல் கார்ப்பரேஷன் மூலம் முதன்முறையாக திருநங்கைக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் இயக்குநரும், தலைமைப் பதிவாளருமான (பிறப்பு மற்றும் இறப்பு) பன்வர்லால் பைர்வா, ராஜஸ்தானின் முதல் திருநங்கையின் பிறப்புச் சான்றிதழை ஜெய்ப்பூரைச் சேர்ந்த நூர் ஷெகாவத்துக்கு வழங்கினார்.

    ஆண் மற்றும் பெண் பிறப்பு பதிவுகளுடன், திருநங்கைகளின் பிறப்பு பதிவுகளும் இனி மாநகராட்சி போர்ட்டலில் கிடைக்கும் என்று பன்வர்லால் பைர்வா கூறினார்.

    திருநங்கைகள் தங்கள் பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வுத் திட்டமும் தொடங்கப்படும் என்று பைர்வா கூறினார்.

    பிறக்கும் போது நூர் ஷெகாவத்தின் பாலினம் 'ஆண்' என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

    மாற்றுத்திறனாளிகள், ஆண்கள் மற்றும் பெண்களின் பதிவேடுகளுடன் திருநங்கைகளின் பதிவுகளை அரசு பராமரிக்க இந்த முயற்சி உதவும் என ஆங்கில வழிப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, திருநங்கைகளுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் நூர் ஷெகாவத் கூறினார்.

    நூர் ஷெகாவத் இப்போது திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் வேலைகளில் இடஒதுக்கீடு வழங்க அதிகாரிகளை வலியுறுத்த திட்டமிட்டுள்ளார்.

    • பொது மக்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம்.
    • முதல்வர் அஷோக் கெலாட் பரிந்துரையை ஏற்று அம்மாநில ஆளுநர் நடவடிக்கை.

    மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக சாலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம் நாட்டையே பதற வைத்துள்ளது.

    பொது மக்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ராஜஸ்தானிலும் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுவதாகவும், உண்மையில் ராஜஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் நாம் தோல்வி அடைந்துவிட்டோம் என்று அம்மாநில மாநில ஊர்க்காவல்படை மற்றும் குடிமைப் பாதுகாப்பு, பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சரான ராஜேந்திர சிங் ஹதுடா விமர்சித்து பேசினார்.

    தனது சொந்த மாநில அரசையே ராஜஸ்தான் மாநில அமைச்சர் ராஜேந்திர சிங் குதா விமர்சித்து பேசியதை அடுத்து அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    முதல்வர் அஷோக் கெலாட் பரிந்துரையை ஏற்று அம்மாநில ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    • கடந்த 54 மாதங்களில் பெண்களுக்கு எதிராக 2 லட்சம் குற்றவழக்குகள்
    • 33 ஆயிரம் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன

    மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக சாலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம் நாட்டையே பதற வைத்துள்ளது. இந்த சம்பவத்தால் நாட்டின் 140 கோடி மக்களும் வெட்கப்படுகிறார்கள். மனித இனத்திற்கே வெட்கக்கேடானவை. இதுபோன்று ராஜஸ்தான் மற்றும் சத்திஸ்கர் என எங்கு நடந்தாலும் அரசியலை தாண்டி குரல் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

    இதனால் காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனம் செய்துள்ளது. மணிப்பூர் குறித்து நீண்ட நாட்கள் மவுனம் சாதித்த பிரதமர் மோடி, தற்போது குறுகிய நேரம் பேசிய நிலையில், மற்ற மாநிலங்களை குறிப்பிட்டது அரசியல் நாடகம் எனத் தெரிவித்துள்ளது.

    மோடியின் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பா.ஜனதாவின் மூத்த தலைவருமான வசுந்தரா ராஜே, ராஜஸ்தானில்தான் இந்தியாவில் நடைபெற்ற பலாத்கார சம்பவங்களில் 22 சதவீதம் நிகழ்ந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வசுந்தரா ராஜே கூறியதாவது:-

    பெண்கள், குழந்தைகள், தலித்கள் மற்றும் தொழில்அதிபர்களுக்கு எதிராக நடந்த சம்பவங்கள் அடிப்படையில், ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு குலைந்துள்ளது. ராஜஸ்தானில்தான் பெண்களுக்கு எதிரான குற்றவழக்கு அதிகமாக பதிவாகியுள்ளது. கடந்த 54 மாதங்களில் 10 லட்சத்திற்கும் மேலான வழக்குகள் பதிவாகியுள்ளன. 7500-க்கும் அதிகமானனோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    பெண்களுக்கு எதிராக மட்டும் 2 லட்சம் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. சுமார் 33 ஆயிரம் பலாத்கார சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இது இந்தியாவில் நடைபெற்ற மொத்த சம்பவங்களில் 22 சதவீதம் ஆகும். கற்பழிப்பு வழக்குகளில் ராஜஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. முதலமைச்சர் அசோக் கெலாட்டின் பகுதியில் பெண்களுக்கு எதிராக குற்ற சம்பவம் நடந்தாலும், அவர்கள் மவுனம் காக்கிறார்கள்.

    மீடியாக்கள் தரவுகளின்படி ஒவ்வொரு நாளும் சராசரியாக 18 முதல் 19 பலாத்கார சம்பவங்களும், 5 முதல் 7 கொலைகளும் நடைபெற்ற வருகின்றன.

    அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் ஆயிரக்கணக்கான பலாத்கார சம்பவங்கள் நிகழ்ந்துள்ளனர். அவர்கள் அரசில் இருந்து யாரும் இதுகுறித்து பேசுவதோ, காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதோ கிடையாது.

    இவ்வாறு வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார்.

    • உயிர்சேதம் அல்லது சேதங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை.
    • நிலநடுக்கம் குறித்து ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு.

    ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை 4.09 மணியளவில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

    மேலும், இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என்றும் உயிர்சேதம் அல்லது சேதங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கம் குறித்து ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜெய்ப்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் பிற இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    முன்னதாக நேற்று அதிகாலையில் மிசோரமின் என்கோபாவில் இருந்து கிழக்கே 61 கிலோமீட்டர் தொலைவில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஜோகேந்திராவின் தந்தை மிஸ்ரலால் மேக்வால் உள்ளூர் போலீசில் கடந்த 13-ந்தேதி புகார் அளித்தார்.
    • கணவர் வேலைக்கு சென்றபிறகு கள்ளக்காதலன் மதன்லாலுடன் ஜோகேந்திராவின் மனைவி பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் பாலி பகுதியைச் சேர்ந்தவர் மிஸ்ரலால் மேக்வால் மகன் ஜோகேந்திரா (வயது 33). இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்ற ஜோகேந்திரா இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஜோகேந்திரா வேலை பார்த்த நிறுவனம் உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை பற்றிய எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து ஜோகேந்திராவின் தந்தை மிஸ்ரலால் மேக்வால் உள்ளூர் போலீசில் கடந்த 13-ந்தேதி புகார் அளித்தார். அப்போது மகன் மாயமானதற்கும், மதன்லால் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜோகேந்திராவை தேடி வந்தனர். மேலும் மதன்லால் என்பவரிடம் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் ஜோகேந்திரா கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது ஜோகேந்திராவின் மனைவிக்கும், மதன்லால் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது கள்ளக்காதலாக மாறி தொடர்ந்து வந்துள்ளது.

    கணவர் வேலைக்கு சென்றபிறகு கள்ளக்காதலன் மதன்லாலுடன் ஜோகேந்திராவின் மனைவி பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். நாளடைவில் இந்த விஷயம் தெரிந்த ஜோகேந்திரா மனைவியை கண்டித்தார். ஆனால் அவர் இதனை கண்டுகொள்ளவில்லை. இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கணவர் ஜோகேந்திராவை தீர்த்துக்கட்ட மதன்லாலிடம் கூறியுள்ளார்.

    தொடர்ந்து தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்து வரும் ஜோகேந்திராவை கொலை செய்ய மதன்லால் திட்டம் போட்டார். அதன்படி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த ஜோகேந்திராவை அழைத்து சென்று கொடூராமாக கொலை செய்துள்ளார்.

    பின்னர் அந்த உடலை தலை, கை, கால்கள் என 6 துண்டுகளாக்கினார். அந்த உடல் பாகங்களை தனது வீட்டில் இருந்து இரவு நேரத்தில் எடுத்துச் சென்று சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள தோட்டம் மற்றும் காட்டுப்பகுதிக்குள் புதைத்துள்ளார். அதனை மதன்லால் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் மீட்டனர்.

    மேலும் கொலையை மறைக்கும் விதமாகவும், உடல் புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடிக்காமல் இருக்கவும் உடல் பாகங்களை புதைத்த இடத்தில் மதன்லால் மா மரக்கன்றுகளை நட்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கொலையுண்ட ஜோகேந்திராவின் தந்தை மிஸ்ரலால் மேக்வால் கூறுகையில், தனது மகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மதன்லால் தவிர மேலும் சிலர் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. எனவே இதில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி தொடர்புடைய அனைவரையும் கைது செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.

    இந்த கொடூர கொலை சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கின் நிலை மோசமடைந்து வருவதாக பா.ஜ.க. குற்றஞ்சாட்டியுள்ளது.
    • தங்குவதற்காக இடம் தேடியபோது ஒரு விடுதியில் அதன் மேற்பார்வையாளர் தவறாக நடந்து கொண்டிருக்கிறார்.

    ராஜஸ்தானின் ஜோத்பூரில் ஒரு பட்டியலின சிறுமி 3 கல்லூரி மாணவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

    காவல்துறை உயர் அதிகாரி அம்ரிதா துஹான் இது குறித்து தெரிவித்ததாவது:

    அஜ்மீர் பகுதியைச் சேர்ந்த சிறுமி தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடி வந்திருக்கிறார். இருவரும் நேற்று முன் தினம் இரவு 10.30 மணியளவில் ஜோத்பூர் வந்திறங்கியுள்ளனர். தங்குவதற்காக இடம் தேடியபோது ஒரு விடுதியில் அதன் மேற்பார்வையாளர் தவறாக நடந்து கொண்டிருக்கிறார். உடனே அங்கிருந்து வெளியேறிய இருவரும் வேறு இடம் தேடியுள்ளனர். அப்போது அங்கு வந்த சமந்தர் சிங், தரம்பால் சிங் மற்றும் பட்டம் சிங் ஆகிய 3 இளைஞர்கள் அவர்களோடு நட்பாக பழகி அவர்களுக்கு உணவும் தங்குமிடமும் தருவதாக கூறியிருக்கின்றனர்.

    அவர்கள் அந்த இருவரையும் அதிகாலை 4 மணியளவில் ஜெய் நாராயணன் வியாஸ் பல்கலைகழகத்தை சேர்ந்த மைதானத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியின் காதலனை அந்த 3 பேரும் கடுமையாக தாக்கினர். பிறகு அந்த சிறுமியை மூவரும் பலாத்காரம் செய்துள்ளனர். காலை நடைபயிற்சிக்காக மக்கள் வர தொடங்கியதை கண்டதும் மூவரும் ஓடி விட்டனர். பின்பு, பொது மக்களின் உதவியுடன் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். காவல்துறை மோப்ப நாய், கண்காணிப்பு கேமிரா மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் குற்றவாளிகளை தேடி கண்டுபிடித்து கைது செய்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாலியல் பலாத்காரம் செய்த 3 நபர்கள் மற்றும் தவறாக நடக்க முயற்சித்த விடுதி மேற்பார்வையாளர் ஆகியோருக்கு எதிராக போக்சோ சட்டத்திலும், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவிலும் காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது.

    இச்சம்பவத்தையடுத்து ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கின் நிலை மோசமடைந்து வருவதாக பா.ஜ.க. குற்றஞ்சாட்டியுள்ளது.

    "பா.ஜ.க. இச்சம்பவத்தை அரசியலாக்குகிறது. குற்றவாளிகள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்," என ஆளும் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.

    அம்மூவரும் மாணவர் அமைப்பான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்துடன் தொடர்புடையவர்கள் என காவல்துறை கூறியிருக்கிறது. ஆனால், இதனை அந்த அமைப்பு திட்டவட்டமாக மறுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • காவல்துறை அலட்சியமாக நடந்து கொள்வதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் தெரிவித்தார்.
    • பாதிக்கப்பட்ட சிறுமியின் பிரேத பரிசோதனையில் மரணத்திற்கான காரணம் துப்பாக்கிச் சூடு என தெரிகிறது.

    ராஜஸ்தானின் கரவ்லி பகுதியில், 19 வயது பட்டியலின பெண் ஒருவர் ஜூலை 12 ஆம் தேதி அவரது வீட்டிலிருந்து 4 பேரால் கடத்தப்பட்டார். இந்நிலையில் தேடப்பட்டு வந்த அவரின் உடல் ஒரு கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. உடல் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு வெளியே பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

    ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்து விட்டதாக பாஜக மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளன. இவ்விவகாரம் ராஜஸ்தான் சட்டசபையில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்பட்டது.

    இவ்விவகாரத்தில் காவல்துறை தொடர்ந்து அலட்சியமாக நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டிய பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் மேலும் கூறியிருப்பதாவது:

    அதிகாலை 3 மணி அளவில் மூன்று நான்கு பேர் வந்து என் மகளின் வாயில் துணியை அடைத்து அவளை தூக்கிச் சென்றனர். நான் அலறி அழுதேன். உடனே காவல் நிலையத்திற்கு சென்றோம். ஆனால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய மறுத்து விட்டனர். வழக்கு பதிவு செய்வதால் எதுவும் நடக்க போவதில்லை என்று கூறி என்னை வெளியேறச் சொன்னார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை போலீசார் வரும் நிலையில், இதுவரை ஒருவரை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர்.

    "வழக்கில் எங்களுக்கு சில துப்புகள் கிடைத்துள்ளன. நாங்கள் பாதிக்கப்பட்டவரின் தாயிடம் பேசினோம். அவர் யாரையாவது சந்தேகிக்கிறாரா என்று கேட்டதற்கு அவர் இதுவரை எவர் பெயரையும் தெரிவிக்கவில்லை. இது குறித்து எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது," என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

    குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவேண்டும் என பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் கிரோடி லால் மீனா கோரிக்கை விடுத்துள்ளார்.

    முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, தனது டுவிட்டர் பதிவில், "கல்லூரிக்கு செல்லும் ஒரு தலித் சிறுமியின் உடலில் கிணற்றில் மீட்கப்பட்ட சம்பவம் என் நெஞ்சை உலுக்குகிறது. இந்த விவகாரம் சந்தேகத்திற்குரியதாக உள்ளது. நிர்வாகம் எல்லா கோணத்திலும் விசாரித்து குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்."

    காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், "மிகவும் முக்கியமான இந்த விஷயத்தை ஆழமாக விசாரித்து, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும்" என்று கோரியுள்ளார்.

    "பாதிக்கப்பட்ட சிறுமியின் பிரேத பரிசோதனையில் மரணத்திற்கான காரணம் துப்பாக்கிச் சூடு என தெரிகிறது. கற்பழிப்பு புகார்கள் குறித்து தடயவியல் நிபுணர்கள் சரிபார்ப்பார்கள். இழப்பீடு மற்றும் பிற கோரிக்கைகளுக்காக பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்ப உறுப்பினர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்", என்று கரௌலி எஸ்.பி. மம்தா குப்தா தெரிவித்தார்.

    • நோயாளிகள் மீண்டும் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகும் இழந்த பார்வையை பெற முடியவில்லை.
    • மருத்துவர்கள் மீது எந்த தவறும் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் பர்ஸதி லால் மீனா தெரிவித்தார்.

    ராஜஸ்தானின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையான ஸவாய் மான் சிங் மருத்துவமனையில், கண் புரைக்கான அறுவை சிகிச்சை செய்துகொண்ட 18 பேர் ஒரு கண்ணில் பார்வையை இழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் ராஜஸ்தான் அரசின், சிரஞ்சீவி சுகாதார திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றிருக்கின்றனர்.

    பாதிக்கப்பட்ட ஒருவர் இதுபற்றி கூறியதாவது:

    எனக்கு ஜூன் 23 அன்று ஆபரேஷன் செய்யப்பட்டது. ஜூலை 5 வரை எனக்கு பார்வை இருந்தது; எல்லாம் தெரிந்தது. ஆனால் ஜூலை 6 அல்லது 7 தேதியளவில் கண் பார்வை போய்விட்டது. அதன் பிறகு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் பார்வை திரும்பவில்லை. கண்பார்வை இழப்புக்கு தொற்று நோய் தான் காரணம் என்றும் நோய்த்தொற்றை குணப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் கூறினார்கள்.

    இவ்வாறு அந்த நோயாளி கூறினார்.

    கடுமையான கண் வலி இருப்பதாக நோயாளிகள் புகார் தெரிவித்தபோது, மருத்துவமனை அதிகாரிகள் நோயாளிகளை மீண்டும் மருத்துவமனையில் சேருமாறு கேட்டுக்கொண்டனர். நோயாளிகள் மீண்டும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகும் இழந்த பார்வையை பெற முடியவில்லை. அவர்களில் சிலர் இரண்டு முறைக்கு மேல் அறுவை சிகிச்சை செய்து கொள்ள நேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    மருத்துவர்கள் மீது எந்த தவறும் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் பர்ஸதி லால் மீனா தெரிவித்தார்.

    மருத்துவமனையின் கண் மருத்துவ பிரிவை சேர்ந்தவர்கள், தங்கள் தரப்பில் எந்த தவறும் இல்லை என்று கூறியதுடன், நோயாளிகளிடமிருந்து புகார்கள் வந்த பிறகு விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினர்.

    ஆனால், மருத்துவர்களும் மருத்துவமனை நிர்வாகமும் கவனக்குறைவாக இருந்ததாக பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் உறவினர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

    • பேருந்து மாணவர்களை அவர்களது பள்ளிக்கு ஏற்றிச் சென்று கொண்டிருந்தபோது விபத்து.
    • காயமடைந்த மாணவர்களில் பலர் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் இன்று பள்ளி பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் சுமார் 30 பள்ளி மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

    பேருந்து மாணவர்களை அவர்களது பள்ளிக்கு ஏற்றிச் சென்று கொண்டிருந்தபோது, பொக்ரான் நகர் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் கவிழ்ந்ததாக சங்கரா காவல் நிலையத்தின் (ஜெய்சால்மர்) உதவி சப் இன்ஸ்பெக்டர் கைலாஷ் சந்த் கூறினார்.

    காயமடைந்த மாணவர்களில் பலர் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிலர் உள்ளூர் மருத்துவ மையங்களில் அனுமதிக்கப்பட்டனர்.

    வேறு சில குழந்தைகளின் பெற்றோர் அவர்களை தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றதாக போலீஸ் அதிகாரி கூறினார். இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனரும் காயமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    விபத்து குறித்து, ஜோத்பூர் ஆட்சியர் ஹிமான்ஷு குப்தா கூறுகையில், "ஜெய்சால்மரில் இருந்து 11 பள்ளிக் குழந்தைகள் சிகிச்சைக்காக ஜோத்பூருக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டனர். ஆனால் விக்ரம் சிங் என அடையாளம் காணப்பட்ட ஊழியர் ஒருவர் காயம் அடைந்து உயிரிழந்தார்" என்றார்.

    • இரட்டை என்ஜினில் ஒன்று எப்போதுமே பழுது
    • ஒற்றை என்ஜின் சிறப்பாக செயல்பட்டு வருகிறது

    ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் சமூக பாதுகாப்பு பென்சன் திட்டத்தின் கீழ் பயன் அடைந்தவர்களுடன் உரையாடினார். அப்போது இரட்டை என்ஜின் அரசைவிட ஒற்றை என்ஜின் அரசு சிறப்பாக செயல்படுகிறது எனது பாரதிய ஜனதாவை விமர்சனம் செய்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    சிலர் அவர்களுடைய அரசாங்கத்தை (மாநிலம் மற்றும் மத்தியில் ஆட்சி செய்வதால்) இரட்டை என்ஜின் என்று கூறி வருகிறார்கள். ஆனால் அதில் ஒரு இந்தியன் எப்போதுமே பழுதாகியே உள்ளது. உண்மையான என்ஜின் ராஜஸ்தான் அரசு.

    அவர்களுடைய இரட்டை என்ஜின் அரசைவிட இந்தியாவில் உள்ள எங்கும் ஒற்றை என்ஜின் ஆன எங்கள் ஒற்றை என்ஜின் அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது. எங்களுடைய ஒற்றை என்ஜின் பாதுகாப்பானது உறுதியானது.

    பாரதிய ஜனதா அரசு மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்தால்தான், நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும். இதனால் மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே அரசான இரட்டை என்ஜின் அரசு தேவை என்று அடிக்கடி கூறிவரும் நிலையில், ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கிண்டல் செய்துள்ளார்.

    மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த திட்டத்திற்காக ஆயிரம் கோடி ரூபாயை, அவர்களது கணக்கில் போடப்பட்டுள்ளதாக தெரிவித்த அசோக் கெலாட், இந்த திட்டத்திற்கான சட்டம் இயற்றப்படும் எனக் கூறினார்.

    ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாக இருக்கிறது. ஒற்றுமையாகவே இருக்கும். வரும் தேர்தலில் ஒற்றுமையாக செயல்பட்டு காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் எனக் கூறினார்

    சட்டசபை தேர்தல் வரவிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் 21 தலைவர்கள், 42 பொதுச்செயலாளர்கள், ஒருங்கிணைப்பு பொதுச் செயலாளர், 121 செயலாளர் மற்றும் 25 மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • பிரதமர் மோடி காணொலி மூலம் ரிமோட் பட்டனை அழுத்தி திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.
    • பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி மக்களுக்கு அர்ப்பணித்தார்.

    ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் ரூ. 24,300 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.

    அமிர்தசரஸ்-ஜாம்நகர் பொருளாதார வழித்தடத்தின் ஆறு வழி பசுமையான விரைவுச் சாலைப் பகுதியையும், பசுமை ஆற்றல் வழித்தடத்திற்கான மாநிலங்களுக்கு இடையேயான டிரான்ஸ்மிஷன் லைனின் முதல் கட்டத்தையும், பிகானரில் இருந்து பிவாடிக்கு டிரான்ஸ்மிஷன் லைனையும், 30 படுக்கைகள் கொண்ட மாநில இஎஸ்ஐசி மருத்துவமனை ஆகிய திட்டங்களை பிரதமர் மோடி மக்களுக்கு அர்ப்பணித்தார்.

    பிகானேர் ரயில் நிலையத்தின் மறுவடிவமைப்பு மற்றும் 43 கிமீ நீளமுள்ள சுரு-ரதன்கர் பிரிவின் இரட்டிப்பாக்கத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

    பிகானேரில் உள்ள நோராங்தேசரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி மூலம் ரிமோட் பட்டனை அழுத்தி திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.

    மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பிகானீர் நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • சாலைகளில் எத்தனால் மற்றும் மின்சார வாகனங்கள் அதிகரிக்கும்போது பெட்ரோல் விலையை குறைக்க இயலும்.
    • இறக்குமதிக்கு செலவிடப்படும் ரூ.16 லட்சம் கோடி விவசாயிகளின் குடும்பங்களுக்கு வந்து சேரும்.

    இந்தியாவில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை ஆகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை  வேகமாக குறைந்தும், பல மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கவில்லை. பொதுமக்களை அதிகம் பாதிக்கக்கூடிய இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து, விலையை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் மத்திய மந்திரி நிதின் கட்கரி ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, பெட்ரோல் விலையை லிட்டருக்கு வெறும் 15 ரூபாய்க்கு கொடுக்க முடியும் என்று கூறினார். ஆனால் இதை சாத்தியமாக்குவதற்கான வழிமுறைகளையும் அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    வாகனங்களில் நாம் பயன்படுத்தும் எரிபொருள்களில் 60 சதவீதம் எத்தனாலுக்கு மாறவேண்டும். 40 சதவீதம் மின் பயன்பாட்டிற்கு மாறவேண்டும் (மின்சார வாகனம்). சாலைகளில் எத்தனால் மற்றும் மின்சார வாகனங்கள் அதிகரிக்கும்போது பெட்ரோல் விலையை நம்மால் குறைக்க இயலும்.

    இனி விவசாயிகள் உற்பத்தி செய்யும் எத்தனால் மூலமாக வாகனங்கள் இயங்கவேண்டும் என்ற எண்ணத்தில் அரசு இருக்கிறது. வாகன பயன்பாட்டிற்கு சராசரியாக 60% எத்தனால் மற்றும் 40% மின்சாரம் எடுத்துக் கொண்டால், பெட்ரோல் லிட்டருக்கு 15 ரூபாய் என்ற விகிதத்தில் கிடைக்கும். மேலும் மக்களும் பயனடைவார்கள். இது நடைமுறைக்கு வந்தால் மாசுபாடு குறைவதுடன், இறக்குமதிக்கு செலவிடப்படும் ரூ.16 லட்சம் கோடி விவசாயிகளின் குடும்பங்களுக்கு வந்து சேரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதிக்கு அரசு ரூ.16 லட்சம் கோடி செலவிடுகிறது. உள்நாட்டிலேயே எத்தனால் உற்பத்தி மற்றும் தேவையான மின்சாரம் தயாரிக்க முடிந்தால், நாம் எரிபொருட்களுக்காக வெளிநாடுகளை நம்பியிருக்க தேவையில்லை என்பதே அவரது கருத்தாக உள்ளது.

    கரும்பு சக்கை, வைக்கோல், கோதுமை போன்றவற்றில் இருந்து எத்தனால் தயாரிப்பதால், அந்த பொருட்களை கொள்முதல் செய்வதன்மூலம் விவசாயிகளின் வருமானம் பன்மடங்கு உயரும். நம் தேவை குறையும்போது கச்சா எண்ணெய்யை குறைந்த விலைக்கு கேட்க முடியும்.

    மத்திய மந்திரி நிதின் கட்காரியின் கருத்தின்படி, அனைத்து வாகனங்களும் எத்தனால் மற்றும் மின்சாரத்திற்கு மாறும்  நடைமுறைகள் நாடு முழுவதும் செயல்பாட்டிற்கு வரும்போது பெட்ரோல் விலை குறையும்.

    அனைத்து வாகனங்களும் மின்சாரம் மற்றும் எத்தனாலுக்கு மாறிவிட்டால், அதற்கு பிறகு ஒருசில பயன்பாடுகளுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் தேவைப்படும். ஒருசிலர் வைத்திருக்கும் பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் தேவைப்படும். ஆனால் இது நடைமுறைக்கு வர 20-30 ஆண்டுகள் ஆகலாம்.

    ஏனென்றால் இந்தியாவில் எத்தனால் மூலம் இயங்கும் முதல் வாகனம் இனிமேல்தான் வர உள்ளது. முதல் வாகனத்தை ஆகஸ்ட் மாதம் நிதின் கட்காரி அறிமுகம் செய்ய உள்ளார். அதன்பிறகு எத்தனால் வாகனங்கள் அதிகரிக்க வேண்டும், மின்சார வாகனங்களும் அதிகரிக்கவேண்டும். அப்போதுதான், பெட்ரோல்-டீசல் தேவை குறைந்து விலை குறையும். அப்படியே குறைந்தாலும், பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் தேவைப்படாது என்பதே நிதர்சனம்.

    ×