search icon
என் மலர்tooltip icon

    மேற்கு வங்காளம்

    • 42 இடங்களை கொண்ட மேற்கு வங்காளத்தில் இரண்டு இடங்களை மட்டுமே காங்கிரஸ்க்கு ஒதுக்க திரிணாமுல் காங்கிரஸ் முடிவு.
    • காங்கிரஸ் அதிகமான இடங்களில் போட்டியிட விரும்புவதால் காங்கிரஸ்- மம்தா கட்சி இடையே மோதல் ஏற்படும் நிலை.

    2024 மக்களவையில் பா.ஜனதாவை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகள் INDIA (இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி- Indian National Developmental Inclusive Alliance) கூட்டணியை உருவாக்கியுள்ளன.

    இந்தியா கூட்டணியில் 26 கட்சிகளுக்கு மேல் இடம் பிடித்துள்ளன. விரைவில் தேர்தல் வர இருப்பதால் 543 தொகுதிகளில், எத்தனை இடங்களில் யார் யார் போட்டியிடுவது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இதற்காக ஒரு குழுவை அமைத்துள்ளது.

    ஏனென்றால் பெரும்பாலான மாநிலங்களில் அந்தந்த மாநில கட்சிகள் வலுவாக உள்ளன. இதனால் காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலை தீர்ப்பதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது.

    தொகுதி பங்கீடு சிக்கல் மேற்கு வங்காளத்தில் எதிரெலிக்கிறது. 42 இடங்களை கொண்ட மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என திரிணாமுல் காங்கிரஸ் கறாராக தெரிவித்து விட்டது. காங்கிரஸ் கட்சியோ நாங்கள் பிட்சை கேட்கவில்லை. எங்களுடைய முழுப்பலத்துடன் போட்டியிடுவோம் எனத் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் காங்கிரஸ் ஒவ்வொரு மாநில கட்சிகளை தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அழைத்து வருகிறது.

    அந்த வகையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் எங்கள் கட்சி சார்பில் பிரதிநிதிகள் கலந்த கொள்ளமாட்டார்கள். எங்களது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டோம் என திரிணாமுல் கட்சி கூறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஒருவேளை காங்கிரஸ்- திரிணாமுல் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடியவில்லை என்றால் இரண்டு கட்சிகளும் அங்கே எதிர்த்து போட்டியிடும் சூழ்நிலை உருவாகும்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 48 தொகுதிகள் உள்ளன. உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 22 இடங்களில் போட்டியிடுவதாக தெரிவித்தது. இதனால் காங்கிரஸ் கட்சி தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.

    • பாராளுமன்றத்திற்கும், மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு ஆலோசனை.
    • சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி தலைமையில் குழு அமைப்பு.

    இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழு ஒவ்வொரு கட்சிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது. அதில் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

    இந்த நிலையில் மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என கடிதம் எழுதியுள்ளார்.

    மேலும், அவர் அந்த கடிதத்தில் "1952-ம் ஆண்டு முதன்முறையாக பாராளுமன்ற தேர்தலுடன் மாநில தேர்தல்களும் இணைந்து நடத்தப்பட்டன. சில வருடங்களுக்கு இது நீடித்தது. ஆனால், இந்த கூட்டுத் தேர்தல் பின்னர் சிதைந்து விட்டது.

    இந்த கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை தெரிவித்துக் கொள்ள வருந்துகிறேன். இதுதொடர்பான உங்களுடைய உருவாக்கம் மற்றும் பரிந்துரையுடன் நாங்கள் உடன்படவில்லை. ஒரே நேரத்தில் தேர்தல் இல்லாதது (மாநிலத்திற்கு அந்தந்த நேரத்தில் தேர்தல்) இந்திய அரசியலமைப்பு ஏற்பாடுகளின் அடிப்படை கட்டமைப்பு" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • புகழ்பெற்ற ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகர் உஸ்தாத் ரஷீத் கான் புற்று நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார்.
    • அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்

    ராம்பூர் சஹாஸ்வான் கரானா இசை குடும்பத்தை சேர்ந்தவர் பிரபல கிளாசிக்கல் பாடகர் உஸ்தாத் ரஷித் கான்(55). புரோஸ்டேட் வகை புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார்.

    உஸ்தாத்தின் மரணத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "உஸ்தானின் மரணம் குறித்து அறிந்து மிகவும் வேதனையுற்றேன். அவரது இழப்பு நாட்டுக்கும் ஒட்டுமொத்த இசை உலகுக்கும் மிகப் பெரிய இழப்பாகும். நான் மிகுந்த வலியுடன் இருக்கிறேன். உஸ்தான் ரஷித் கான் இனி இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை" என்று தெரிவித்தார். மேலும் , அவரது உடல் நாளை(ஜன.10) ரபிந்தர சதானுக்கு கொண்டு செல்லப்படும். அங்கு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தலாம் என்றும், அவரது இறுதி சடங்கில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

    • அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள, அமலாக்கத் துறையின் செயல் இயக்குநர் கொல்கத்தா விரைந்தார்.
    • மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போசை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    ரேஷன் விநியோக ஊழல் வழக்கு தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், வடக்கு 24 பர்கான்ஸ் மாவட்டத்தில் உள்ள பங்கான் நகராட்சியின் முன்னாள் தலைவருமான சங்கர் ஆதியாவிடம் விசாரணை நடத்த கடந்த 5ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். அப்போது, அவர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 அதிகாரிகள் காயமடைந்தனர்.

    இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறை செயல் இயக்குநர் ராகுல் நவீன் கொல்கத்தா விரைந்துள்ளார். நள்ளிரவில் கொல்கத்தா விரைந்த ராகுல் ரவீன் -க்கு துணை ராணுவ படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்வதற்காக கொல்கத்தா சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், அமலாக்கத்துறையின் விசாரணையில் உள்ள இதர வழக்குகளையும் விசாரிப்பார் என கூறப்படுகிறது.

    அதனைத்தொடர்ந்து, தாக்குதலால் காயமடைந்த அமலாக்கத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார். மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போசை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • வியாழக்கிழமை சோதனை செய்யபோது கும்பலால் அதிகாரிகள் தாக்கப்பட்டனர்.
    • நேற்று தொடர்ந்து சோதனை நடத்திய நிலையில், சங்கர் சத்யா கைது செய்யப்பட்டுள்ளார்.

    மேற்கு வங்காள மாநிலத்தில் ரேசன் ஊழல் வழக்கு தொடர்பாக பாங்கோன் நகராட்சியின் முன்னாள் தலைவரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சங்கர் ஆத்யா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

    சுமார் 17 மணி நேர சோதனைக்குப்பின் நேற்றி நள்ளிரவு சங்கர் ஆத்யா கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நிலையில் அவரை அதிகாரிகள் அழைத்துச் செல்ல விடாமல் தடுத்தனர். மேலும், சங்கர் ஆத்யாவின் ஆதரவாளர்கள் கல்வீச்சு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் பணியில் இருந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் அவர்களை விரட்டியடித்தனர். அதன்பின் அதிகாரிகள் சங்கர் ஆத்யாவை அழைத்துச் சென்றனர்.

    வியாழக்கிழமை இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் சங்கர் ஆத்யா மற்றும் ஷேக் ஷாஜஹான் ஆகியோர் வீட்டில் சோதனை நடத்த சென்றபோது மர்ம கும்பல்களால் தாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மேற்கு வங்காளத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • இந்தச் சம்பவத்துக்கு அம்மாநில பா.ஜ.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் ரேஷன் திட்டத்தில் ஊழல் முறைகேடு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த வழக்கில் மந்திரி ஜோதிபிரியா மாலிக் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

    மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கு 24 பர்கானா பகுதியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனைக்காக காரில் புறப்பட்டுச் சென்றனர். சந்தேஷ்காலி என்ற இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளான ஷாஜஹான் ஷேக், சங்கர் ஆத்யா வீடுகளில் சோதனை நடத்தச் சென்றது. அதிகாரிகள் குழுவுக்கு துணை ராணுவப் படை பாதுகாப்பாக சென்றது.

    தகவலறிந்து திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அதிகாரிகள் சோதனை நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்ற வாகனத்தை தாக்கினர். இதில் அவர்களது கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் சோதனை நடத்த முடியாமல் அங்கிருந்து அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இச்சம்பவம் மேற்கு வங்காளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவத்துக்கு அம்மாநில பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது.

    இதுதொடர்பாக, பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா கூறுகையில், தாக்குதல் நடத்தியவர்கள் திரிணாமுல் காங்கிரசின் உள்ளூர் தலைவர்களால் ஆதரிக்கப்படும் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக இருக்கலாம். மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு தொடர்வது தேசத்துக்கு அச்சுறுத்தல் என தெரிவித்தார்.

    • கொல்கத்தாவை சேர்ந்த தெருவோர வியாபாரி ஒருவர் ‘பிடாய் பராத்தா’ என அழைக்கப்படும் ரொட்டி தயாரிக்கும் காட்சிகள் உள்ளது.
    • இறுதியில் சூடான ரொட்டி தயாரானதும், அதனுடன் கொண்டை கடலை கலந்த கலவையும் சேர்த்து பரிமாறப்படுகிறது.

    நாட்டின் முக்கிய நகரங்களில் தெருவோர கடைகளில் ஏராளமான சிற்றுண்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் சில உணவு வகைகள் தயாரிப்பு குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்துவதுண்டு.

    அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கொல்கத்தாவை சேர்ந்த தெருவோர வியாபாரி ஒருவர் 'பிடாய் பராத்தா' என அழைக்கப்படும் ரொட்டி தயாரிக்கும் காட்சிகள் உள்ளது. 'பிடாய்' என்ற சொல்லுக்கு அடித்தல் என்று கூறப்படுகிறது.

    வீடியோவில் மைதா மாவை உருட்டி, வறுத்து சுவையான, மிருதுவான தன்மையை அடைகிறது. இறுதியில் சூடான ரொட்டி தயாரானதும், அதனுடன் கொண்டை கடலை கலந்த கலவையும் சேர்த்து பரிமாறப்படுகிறது.

    இந்த வீடியோ வைரலான நிலையில், பயனர்கள் பலரும் 'பிடாய் பராத்தா' தயாரிப்பு முறையை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • நேற்று முன்தினம் ஜார்க்கண்ட், நேற்று அரியானாவில் சோதனை நடத்தியது.
    • ஆறு பேர் கொண்ட கும்பல் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

    பல்வேறு புகார் அடிப்படையில் மத்திய விசாரணை அமைப்பான அமலாக்கத்துறை நாட்டின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.

    நேற்று முன்தினம் ஜார்க்கண்ட், நேற்று அரியானாவில் சோதனை நடத்தியது. பா.ஜனதாவின் தூண்டுதல் அடிப்படையில்தான் சோதனை நடத்தப்படுகிறது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்த நிலையிலும் சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

    பெரும்பாலான இடங்களில் அதிகாரிகள் பாதுகாப்புப்படை வீரர்கள் பாதுகாப்புடன்தான் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இன்று மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கு 23 பர்கானஸ் பகுதியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்காக காரில் புறப்பட்டுச் சென்றனர். கார் சண்டேஷ்காலி என்ற இடத்தில் சோதனை நடத்தப்பட்டபோது, திடீரென ஒரு கும்பல் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் அவர்கள் வந்த வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால் பரபரப்பான சூழ்நிலை உருவாகியது.

    அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவில் இடம் பிடித்தவர்களில் ஒருவர் இந்த சம்பவம் குறித்து கூறும்போது "8 பேர் சம்பவ இடத்திற்கு வந்தனர். நாங்கள் மூன்று பேர்தான் சம்பவ இடத்தில் இருந்தோம். நாங்கள் வந்தபோது, அவர்கள் எங்களை தாக்கினர்" என்றார்.

    ஏற்கனவே மத்திய அரசுக்கும் மம்தா தலைமையிலான மாநில அரசுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. மேற்கு வங்காளத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என பா.ஜனதா குற்றம்சாட்டி வரும் நிலையில்தான் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

    • மம்தா பானர்ஜி, தேர்தலில் இந்தியா கூட்டணியாக போட்யிடுவோம் என்ற சொல்லி வருகிறார்.
    • கூட்டணி இல்லை என்றால், பிரதமர் மோடி மிகவும் மகிழ்சசியடைவார்.

    மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. பா.ஜனதா கட்சி அதற்கு ஆயத்தமாகி வருகிறது. அதேபோல் பா.ஜனதாவை எதிர்க்க இந்தியா கூட்டணி தங்களை தயார் படுத்தி வருகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கும் மாநில கட்சிகளுக்கும் இடையில் தொகுதி பங்கீடு செய்வதில் பிரச்சனை ஏற்படும் எனத் தெரிகிறது.

    இது சரி செய்யப்பட்டால் இந்தியா கூட்டணி பிரதமர் மோடிக்கு வலுவான எதிர்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேற்கு வங்காளத்தில் 42 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு இந்தியா கூட்டணிதான் போட்டியிடும் என மம்தா பானர்ஜி தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் தொகுதி பங்கீடு செய்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்கள்தால் வழங்குவோம் என மம்தா பானர்ஜி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

    இது காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திற்கு அதிர்ச்சியளித்துள்ளது. மேலும், மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் எம்.பி.யும், அக்கட்சியின் மக்களவை தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை ஆத்திரமடையச் செய்துள்ளது.

    இதுகுறித்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது-

    யாரை பிச்சைக்கேட்டார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் பிச்சை கேட்கவில்லை. மம்தா பானர்ஜி, தேர்தலில் இந்தியா கூட்டணியாக போட்யிடுவோம் என்ற சொல்லி வருகிறார். ஆனால் எங்களுக்கு இரண்டு தொகுதிகள் எனத் தெரிவித்துள்ளார். நாங்கள் அவரிடம் கருணை கேட்கவில்லை. நாங்கள் எங்களுடைய சொந்த பலத்தில் போட்டியிட முடியும்.

    கூட்டணி இல்லை என்றால், நாட்டில் யார் அதிகம் மகிழ்ச்சியடைவார்?. கூட்டணி இல்லை என்றால், பிரதமர் மோடி மிகவும் மகிழ்சசியடைவார். மம்தா பானர்ஜி செய்வது மோடிக்கு சேவை செய்வதாகும்.

    இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    • 1998-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து பிரிந்து தனிக்கட்சியாக உதயமாகிய திரிணாமுல் காங்கிரஸ், 2001 மற்றும் 2006-ல் தோல்வியடைந்தது.
    • மம்தா பானர்ஜி மூன்று முறை தொடர்ச்சியாக முதல்வராக பதவி ஏற்று சாதனைப் படைத்துள்ளார்.

    மேற்கு வங்காளத்தின் முக்கிய கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 1998-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி தொடங்கப்பட்டது. இன்று அந்த கட்சி தொடங்கிய தினம். 26 ஆண்டுகள் முடிவடைந்து, 27-வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது.

    கட்சி தொடங்கிய நாளில், தீய சக்திகளை எதிர்ப்போம் என கட்சி தொண்டர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    திரிணாமுல் கட்சிக்காக அர்ப்பணிப்பு மற்றும் சுயத்தியாகம் செய்த ஒவ்வொரு தொண்டருக்கும், ஆதரவாளர்களுக்கும் பணிவுடன் மரியாதை அளிக்கிறேன். இன்று திரிணாமுல் காங்கிரஸ் குடும்பம் அனைவரின் அன்பாலும், பாசத்தாலும் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் தளராத ஆதரவின் பலத்தில் மாபெரும் ஜனநாயக நாட்டில் அனைவருக்காகவும் தொடர்ந்து போராடுவோம். எந்த தீய சக்திக்கும் சரணடைய வேண்டாம். அனைத்து பயங்கரவாதத்தையும் மீறி, நமது நாட்டின் பொது மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் போராடுவோம்.

    1998-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து பிரிந்து தனிக்கட்சியாக உதயமாகிய திரிணாமுல் காங்கிரஸ், 2001 மற்றும் 2006-ல் தோல்வியடைந்தது. அதன்பின் 2011-ல் ஆட்சியை பிடித்தது. அதன்பின் 2016 மற்றும் 2021-ல் அடுத்தடுத்து ஆட்சியை பிடித்தது. மம்தா பானர்ஜி மூன்று முறை தொடர்ச்சியாக முதல்வராக பதவி ஏற்று சாதனைப் படைத்துள்ளார்.

    • எதிா்க்கட்சிகள் அனைவரும் திருடா்கள் என்று முத்திரை குத்த பா.ஜ.க. முயலுகிறது.
    • காங்கிரசுக்கும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக்கும் மக்கள் வாக்களிப்பதை தவிர்க்க வேண்டும்.

    கொல்கத்தா:

    வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் கட்சித் தொண்டா்கள் மத்தியில் மம்தா பானர்ஜி பேசியதாவது:-

    எதிா்க்கட்சிகள் அனைவரும் திருடா்கள் என்று முத்திரை குத்த பா.ஜ.க. முயலுகிறது. நாட்டின் ஜனநாயகத்தை மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் முறியடிக்க முயற்சித்து வருகிறது.

    மேற்கு வங்கத்தில் காங்கிரசும், மாா்க்சிஸ்ட் கம்னிஸ்ட் கட்சியும் பா.ஜ.க.வுடன் ரகசிய கூட்டணி அமைத்து நமது கட்சிக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தேசிய அளவில் பா.ஜ.க.வை எதிா்ப்பதற்காகவே இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தைப் பொறுத்த வரையில் திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே பா.ஜ.க. வுக்கு எதிராகப் போராடி வருகிறது. மக்களவைத் தோ்தலிலும் திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே பா.ஜ. க.வை எதிா்த்து நிற்கும்.

    இந்த தடவையும் திரிணாமுல் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும். காங்கிரசுக்கும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக்கும் மக்கள் வாக்களிப்பதை தவிர்க்க வேண்டும்.

    பா.ஜ.க. தனது அரசியல் லாபத்துக்காக மேற்கு வங்க மாநில மக்களின் குடியுரிமை விஷயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இங்குள்ள மக்கள் பலா் வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக ஊடுவியவா்கள் என்று பிரசாரம் செய்கிறது. இதன் மூலம் மக்கள் மத்தியில் தவறான தகவல்களை பரப்புகின்றனா்.

    முன்பு குடியுரிமை விவகாரத்தில் மாவட்ட கலெக்டர்கள்தான் முடிவெடுத்து வந்தனா். இப்போது, அந்த உரிமை அவா்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை இல்லாத மக்கள் எவ்வாறு அரசின் நலத்திட்டங்களைப் பெற முடியும்?

    இவ்வாறு அவர் பேசினார்.

    மக்களவைத் தோ்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக முக்கிய எதிா்க்கட்சிகள் இணைந்து அமைத்துள்ள இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மம்தா பானா்ஜி, கூட்டணிக் கட்சிகள் மீது இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அண்மையில், மேற்கு வங்கத்துக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, 'குடியுரிமை திருத்தச் சட்ட (சிஏஏ) விவகாரத்தில் அதனை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த விடமாட்டோம் என்று மம்தா பானா்ஜி மக்களை தவறாக வழி நடத்துகிறாா். அச்சட்டம் அமலாக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என்பதே உண்மை' என்று கூறியிருந்தாா்.

    • விஜயகாந்த் இன்று காலை 6.10 மணியளவில் காலமானார்.
    • விஜயகாந்த் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி.

    தே.மு.தி.க. நிறுவனரும், நடிகருமாக விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 6.10 மணியளவில் காலமானார்.

    தொடர்ந்து, தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், விஜயகாந்தின் மறைவுக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    முதுபெரும் பொதுத் தலைவரும், தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவர் இன்று சென்னையில் காலமானார். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    ×