search icon
என் மலர்tooltip icon

    மேற்கு வங்காளம்

    • பா.ஜனதாவால் டிசம்பர் அல்லது ஜனவரியில் தேர்தல் நடத்தக்கூடும்
    • காவி கட்சி ஏற்கனவே சமூகங்களுக்கு இடையேயான பகைமையின் நாடாக மாற்றிவிட்டது

    மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எதேச்சதிகார ஆட்சியை இந்தியா எதிர்கொள்ள நேரிடுவது உறுதி. பா.ஜனதா டிசம்பர் அல்லது ஜனவரிலேயே தேர்தலை நடத்தும் வாய்ப்பு உள்ளது. காவி கட்சி ஏற்கனவே சமூகங்களுக்கு இடையேயான பகைமையின் நாடாக மாற்றிவிட்டது. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வெறுப்பு நாடாக மாற்றிவிடுவார்கள்.

    அடுத்த வருடம் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தேர்தல் பிரசாரத்திற்காக அனைத்து ஹெலிகாப்டர்களையும் முன்பதிவு செய்துவிட்டனர். ஆகவே, மற்ற கட்சிகள் பிரசாரத்திற்காக அவற்றை பயன்படுத்த முடியாது.

    இவ்வாறு தெரிவித்தார்.

    மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 9 பேர் பலியானார்கள். இதுகுறித்து கேட்ட கேள்விக்கு, "சிலர் சட்டவிரோத செயல்களை ஊக்குவிக்கின்றனர். சில போலீஸ் அதிகாரிகள் அதற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

    பெரும்பாலான போலீசார் தங்களை பணியை அர்ப்பணிப்புடன் செய்து வருகின்றனர். ஆனால் சிலர் மற்றவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். மாநிலத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு உள்ளது என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்" என்றார்.

    • குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும்
    • உங்களுடைய ஊழல் பற்றி மேற்கு வங்காள மக்களுக்கு தெரியும்

    எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பிரதமர் மோடியை வீழ்த்த திட்டமிட்டுள்ளன. இதற்காக I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கியுள்ளன. எதிர்க்கட்சிகளின் 3-வது கூட்டம் மும்பையில் நடைபெற இருக்கிறது. மோடியை எதிர்க்கும் முக்கியமான தலைவர்களில் ஒருவராக மம்தா பானர்ஜி உள்ளார்.

    இன்னும் ஆறு மாதத்திற்குதான் மோடி பிரதமர் பதவியில் இருப்பார். அதன்பின் மக்களால் தோற்கடிக்கப்படுவார் என மம்தா பானர்ஜி தொடர்ந்து கூறி வருகிறார்.

    இந்த நிலையில் மேற்கு வங்காள மாநில பா.ஜனதா தலைவர் சுகந்தா முஜும்தார், I.N.D.I.A. கூட்டணியில் நீங்கள் உள்ளீர்கள், ஆனால், இந்தியா உங்களுடன் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சுகந்தா மஜும்தார் கூறுகையில் ''நீங்கள் (மம்தா பானர்ஜி) I.N.D.I.A. கூட்டணியில் உள்ளீர்கள். ஆனால், இந்தியா உங்களோடு இல்லை. இந்தியா மோடியுடன் உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும். அதை மம்தா பானர்ஜியால் தடுத்து நிறுத்த இயலாது. உங்களுடைய ஊழல் பற்றி மேற்கு வங்காள மக்கள் தெரிந்து வைத்துள்ளனர். நேரம் வரும்போது அவர்கள் உங்களை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவார்கள்'' என்றார்.

    முன்னதாக, இமாம்களுடன் நடந்த கூட்டத்தின்போது, மதம் அரசியலுடன் ஒருபோதும் கலக்கக் கூடாது. பா.ஜனதா தன்னைப் பற்றி என்னக் கூறினாலும் பரவாயில்லை. ஆனால், யாருடன் மதம் தொடர்பான மோதல் கிடையாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்'' என்றார்.

    • இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது ஐ.என்.எஸ். விந்தியகிரி போர்க்கப்பல்.
    • இந்த போர்க்கப்பலை ஜனாதிபதி திரவுபதி முர்மு கொல்கத்தாவில் தொடங்கி வைத்தார்.

    கொல்கத்தா:

    இந்திய கடற்படைக்கு 7 போர்க்கப்பல்களை கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. கடந்த 2019-2022 காலகட்டத்தில் 5 போர்க்கப்பல்கள் தொடக்க விழாக்களை கண்டுள்ளன. இந்த வரிசையில் 6-வது போர்க்கப்பலின் கட்டுமானப் பணிகள் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் ஹூக்ளி ஆற்றங்கரையில் அமைந்துள்ள 'கார்டன் ரீச்' கப்பல் கட்டும் தளத்தில் நடந்து வந்தன.

    இந்தப் பணிகள் நிறைவடைந்து தொடக்க விழாவுக்கு தயாராகி இருந்த இந்த கப்பலுக்கு ஐ.என்.எஸ். விந்தியகிரி என பெயரிடப்பட்டு உள்ளது.

    149 மீட்டர் நீளமும், 6,670 டன் எடையும் கொண்ட இந்த போர்க்கப்பல் தரை, கடல், வான்வழி என 3 பகுதிகளில் இருந்தும் வரும் அச்சுறுத்தல்களையும் முறியடிக்கும் திறன் வாய்ந்தது. மேலும் எதிரியின் எல்லைக்குள்ளேயே ஊடுருவி சென்று தாக்கும் திறன் பெற்றது. இந்தக் கப்பலில் உள்ள 75 சதவீத தளவாடங்களும் உள்நாட்டு நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டவை என்பது கூடுதல் சிறப்பு.

    இந்நிலையில், ஐ என் எஸ் விந்தியகிரி போர்க்கப்பலை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்த நவீன போர்க்கப்பல் உற்பத்தி, தற்சார்பு இந்தியாவின் அடையாளமாகவும், நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அடையாளமாகவும் உள்ளது. இது, கப்பல் கட்டுமானத்தில் நமது தன்னம்பிக்கையின் அடையாளமாகும். இது போன்ற திட்டங்கள் இந்தியாவின் தன்னம்பிக்கை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன.

    விந்தியகிரி கப்பலை தொடங்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் கடல்சார் திறன்களை மேம்படுத்துவதில் இந்த நிகழ்வு ஒரு முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

    நாம் தற்போது உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இருக்கிறோம். வருங்காலத்தில் 3-வது இடத்தை நோக்கி நகர்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். நமது வர்த்தகப் பொருட்களின் பெரும் பகுதி கடல் வழியாகவே செல்கின்றன. இது நமது வளர்ச்சி மற்றும் நல்வாழ்வில் பெருங்கடல்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியின் பாதுகாப்பு பல அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்தியாவின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதில் இந்தியக் கடற்படையின் பங்கு மிகப்பெரியது. இவ்வாறு ஜனாதிபதிதிரவுபதி முர்மு கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி, கவர்னர் ஆனந்தபோஸ் மற்றும் கடற்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    இந்த கப்பலில் நவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை இணைத்து கடலில் வெள்ளோட்டம் விடப்படும். அதைத்தொடர்ந்து இந்த கப்பல் கடற்படையிடம் ஒப்படைக்கப்படும்.

    • மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளன.
    • ‘2024-ம் ஆண்டு தேர்தலில் ‘இந்தியா’ வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்.

    கொல்கத்தா:

    மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளன. இந்த கூட்டணி 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, '2024-ம் ஆண்டு தேர்தலில் 'இந்தியா' வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். பின்னர் பேரழிவு, இனக்கலவர பதற்றம், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றில் இருந்து நாட்டை பாதுகாக்கும்' என்று கூறினார்.

    நாடாளுமன்ற தேர்தலில் குறுக்கு வழியில் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளை பா.ஜனதா தொடங்கி இருப்பதாக கூறிய மம்தா பானர்ஜி, இதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஹேக் செய்ய முயன்றுவருவதாகவும் குற்றம் சாட்டினார்.

    இதுகுறித்து கேள்விப்பட்டு இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

    • லஞ்சம், ஊழலுக்கு எதிரான புகார்களை பொதுமக்கள் அனுப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது.
    • மாநில அரசின் நிர்வாகத்திலும், உரிமையிலும் தேவையில்லாமல் தலையிடும் செயலாகும்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்கத்தில் ஊழல் ஒழிப்புப் பிரிவு ஒன்றை கவர்னர் சி.வி.ஆனந்த் போஸ் தொடங்கி உள்ளார். இதற்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கவர்னர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊழல் ஒழிப்புப் பிரிவு அமைக்கப்பட்டது. இதில் லஞ்சம், ஊழலுக்கு எதிரான புகார்களை பொதுமக்கள் அனுப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    ஊழல் ஒழிப்புப் பிரிவு என்று ஒன்றை கவர்னர் உருவாக்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது கவர்னர் மாளிகையின் வேலையல்ல. நாங்கள் கவர்னர் மீது மரியாதை வைத்துள்ளோம். அதே நேரத்தில் அவர் தன்னிச்சையாக ஒரு பிரிவை உருவாக்கி உள்ளார். இது மாநில அரசின் நிர்வாகத்திலும், உரிமையிலும் தேவையில்லாமல் தலையிடும் செயலாகும்.

    கவர்னர் என்ற முகமூடியை அணிந்துகொண்டு பா.ஜ.க.வின் உத்தரவுகளுக்கு இணங்க செயல்படுவதை ஏற்க முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தில் கவர்னருக்கான பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

    மேலும் தனது சொந்த மாநிலமான கேரளத்தில் இருந்து ஒருவரை மேற்கு வங்கத்தில் உள்ள பல்கலைக் கழக துணைவேந்தராக கவர்னர் ஆனந்த போஸ் நியமித்துள்ளார்.

    அவருக்கு கல்வித் துறையில் எந்த அனுபவமும் இல்லை. இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

    • பள்ளியில் 12ம் வகுப்புக்கான வேதியியல் நடைமுறைப் போட்டி நடைபெற்றது.
    • பாதிக்கப்பட்டவர்களுக்கு டாக்கி மருத்துவமனையில் சிகிச்சையில் அளிக்கப்பட்டது.

    மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியின் வேதியியல் ஆய்வகத்தில் அமோனியா வாயு தொட்டி வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

    ஹஸ்னாபாத் காவல் நிலையப் பகுதியில் உள்ள டாக்கி எஸ்.எல் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்புக்கான வேதியியல் நடைமுறைப் போட்டி நடைபெற்றது. அப்போது, அமோனியா வாயு டேங்க் வெடித்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் வாயுவை சுவாசித்ததால், ஒன்பது மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து, இவர்களை டாக்கி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சில மணி நேரங்களுக்குப் பிறகு அவர்களது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • I.N.D.I.A. கூட்டணி எம்.பி.க்கள் 21 பேர் மணிப்பூர் சென்றுள்ளனர்
    • இரண்டு நாட்கள் மணிப்பூரில் நடப்பது என்ன? என்பதை ஆராய உள்ளனர்

    மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி தொடங்கிய வன்முறைக்குப் பிறகு இன்னும் அமைதி திரும்பவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. சபாநாயகர் இன்னும் விவாதத்திற்கான தேதி அறிவிக்கப்படவில்லை.

    இதற்கிடையே கள நிலவரம் குறித்து ஆராய இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் மணிப்பூரில் இரண்டு நாட்கள் பயணம் செய்ய முடிவு செய்தனர். இந்த குழுவில் 21 எம்.பி.க்கள் இடம் பிடித்துள்ளனர். அதில் ஒருவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. அதிர் ரஞ்சன் சவுத்ரி.

    இவர் மணிப்பூர் செல்வது குறித்து கூறியதாவது:-

    இதுவரை பிரதமர் மோடி மணிப்பூர் செல்லும் முயற்சியை மேற்கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து குரல் கொடுத்த பின்னர்தான், மத்திய அரசு தூக்கத்தில் இருந்து எழுந்துள்ளது.

    நாங்கள் அரசியல் பிரச்சனையை எழுப்புவதற்காக மணிப்பூர் செல்லவில்லை. மணிப்பூர் மக்களின் அவலநிலை, அவர்களின் வலியை புரிந்து கொள்வதற்கான செல்கிறோம். அவர்களின் வலிக்கு தீர்வு காணவேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறோம்.

    இது சட்டம்- ஒழுங்கு பிரச்சனையை குறித்தது அல்ல. வகுப்புவாத வன்முறை அங்கு நடக்கிறது. இதுகுறித்து நாங்கள் கவலையடைகிறோம். மணிப்பூரில் நடக்கும் விசயம், அருகில் உள்ள மாநிலங்களையும் பாதித்துள்ளது. அரசு அமைதி மற்றும் சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டவில்லை. மணிப்பூரில் உண்மையிலான நிலை குறித்து ஆராய்வதற்காக செல்கிறோம்.

    இவ்வாறு கூறினார்.

    • குழந்தையின் தாயாரிடம் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன.
    • போலீசார் விசாரிப்பதை அறிந்த வாலிபர் தலைமறைவாகிவிட்டார்.

    கொல்கத்தா :

    மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தா அருகே உள்ள கங்காநகர் பனிஹத்தி பகுதியில் அந்த தம்பதி வசித்து வருகிறார்கள். அவர்கள் கடந்த சில வாரங்களாக தங்கள் குழந்தையின்றி நடமாடுவது குறித்தும், ஜாலியாக பல இடங்களுக்கு சுற்றித்திரிவது குறித்தும் அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

    இதையடுத்து போலீசார், இளம்பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரிப்பதை அறிந்த வாலிபர் தலைமறைவாகிவிட்டார். குழந்தையின் தாயாரிடம் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன.

    ஒரு மாதத்திற்கு முன்பாக அந்த தம்பதி தங்களது 8 மாத ஆண் குழந்தையை ஒருவரிடம் விற்றுள்ளனர். அதில் கிடைத்த பணத்தில் ஐபோன்-14 என்ற நவீன மாதிரி போனை விலைக்கு வாங்கி உள்ளனர். மேலும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று உல்லாசமாக வாழ்ந்துள்ளனர்.

    அத்துடன் புதிதாக வாங்கிய செல்போனில் வீடியோ காட்சிகளை பதிவு செய்து ரீல்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளனர்.

    "இதுகுறித்து எங்களுக்கு கடந்த 24-ந் தேதிதான் புகார் வந்தது. குழந்தையை விற்பனை செய்த குற்றத்திற்காக அந்த பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். குழந்தையை எவ்வளவு பணத்திற்கு விற்றார்கள், யாரிடம் விற்றார்கள் என்பது பற்றிய விவரங்கள், அந்த பெண்ணின் கணவரை பிடித்தால்தான் தெரியவரும். இது தொடர்பாக அவளது கணவரையும், குழந்தையை வாங்கியவர்களையும் தேடி வருகிறோம்" என்று போலீசார் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • I.N.D.I.A. எம்.பி.க்கள் மணிப்பூர் செல்ல இருக்கின்றனர்
    • மணிப்பூர், நாகாலாந்து எரிந்து கொண்டிருக்கிறது. நீங்கள் பணத்தை எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்

    மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. மத்திய அரசு சிபிஐ விசாரணை கேட்டுள்ளது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாளை மற்றும் நாளைமறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் மணிப்பூர் செல்ல இருக்கிறார்கள். பிரதமர் மோடி மணிப்பூர் பற்றி பேச மறுத்து வருகிறார். இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை.

    இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கூறுகையில் ''நீங்கள் (பா.ஜனதா) இன்னும் ஆறு மாதம்தான் இருக்கப் போகிறீர்கள். மணிப்பூரை கண்டு ஏன் பயப்படுகிறீர்கள்?. உங்களுடைய எம்.பி.க்களை அனுப்புங்கள். யார் பொறுப்பு என்று அவர்கள் சொல்லட்டும். நீங்கள் பணத்தை எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். மணிப்பூர், நாகாலாந்து எரிந்து கொண்டிருக்கின்றன. காஷ்மீர் எரிந்து முடிந்துவிட்டது.

    இந்தியா கூட்டணியின் எம்.பி.க்கள் மணிப்பூர் செல்ல இருக்கின்றனர். நான் மணிப்பூர் செல்ல அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது'' என்றார்.

    • 26 எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி பேசி இந்தியா என்ற கூட்டணி பெயரை அறிவித்தனர்.
    • பா.ஜ.க.வினர் கூட்டணியின் பெயரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

    கொல்கத்தா :

    வருகிற பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளவும், பா.ஜனதாவை வீழ்த்தவும் 26 எதிர்க்கட்சிகள் பெங்களூருவில் ஒன்றுகூடி பேசி இந்தியா என்ற கூட்டணி பெயரை அறிவித்தனர். இதையடுத்து பா.ஜ.க.வினர் கூட்டணியின் பெயரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

    அதுகுறித்து பிரதமர் மோடி பேசும்போது, "கூட்டணிக்கு நாட்டின் பெயரை வைத்து மக்களை திசை மாற்ற முடியாது. ஆங்கிலேயர்களும், பயங்கரவாத அமைப்புகளும்கூட இந்தியா என்ற பெயரை மக்களை மடைமாற்ற பயன்படுத்தினார்கள்" என்று ஒப்பிட்டு கருத்து கூறினார்.

    இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று இது குறித்து தனது கருத்தை வெளியிட்டார். கவர்னருடன் சந்திப்பு நடத்திய பின்பு நிருபர்களை சந்தித்தபோது அவர் கூறுகையில், "பிரதமருக்கு நன்றி கூறுகிறேன். அவர் இந்தியா என்ற கூட்டணி பெயரை விரும்புகிறார் என நினைக்கிறேன். அந்த பெயரை மக்களைப்போலவே அவரும் ஏற்றுக்கொண்டார். பா.ஜ.க.வினரின் பெரும்பான்மையான பேச்சுகள் இந்தியா கூட்டணியைப் பற்றியதாக உள்ளது. மோசமாகவும் விமர்சிக்கிறார்கள். எந்த அளவுக்கு விமர்சிக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக தங்கள் விருப்பத்தை நிரூபிக்கிறார்கள்" என்றார்.

    • ரோகித் சர்மா 44 பந்தில் 57 ரன்கள் அடித்தார்
    • இஷான் கிஷன் 34 பந்தில் 52 ரன் விளாசல்

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின்போது வெஸ்ட் இண்டீஸ் ஆல்அவுட் ஆனதும், இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    விரைவாக அதிக ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய இந்திய அணி முடிவு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களான ரோகித் சர்மா- ஜெய்ஸ்வால் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். ரோகித் சர்மா 44 பந்தில் 57 ரன்களும், ஜெய்ஸ்வால் 30 பந்தில் 38 ரன்களும் சேர்த்தனர். அடுத்து வந்த இஷான் கிஷன் 34 பந்தில் 52 ரன்கள் விளாசினார். இந்தியா 24 ஓவரில் 181 ரன்கள் எடுத்திருக்கும்போது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    இந்தியா 12.2 ஓவரில் 100 ரன்களை எடுத்தது. இதன்மூலம் விரைவாக 100 ரன்களை கடந்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்குமுன் 2001-ம் ஆண்டு ஆசிய டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வங்காளதேச அணிக்கெதிராக இலங்கை 13.2 ஓவரில் 100 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது. தற்போது 22 ஆண்டு கால சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.

    • முதல்-மந்திரி மம்தா வீட்டில் இருக்கும்போது போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் ஒருவர் வந்தார்.
    • காரில் ஒரு துப்பாக்கி, ஒரு கத்தி, கஞ்சா, பி.எஸ்.எப். உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பெயரில் அடையாள அட்டைகள் இருந்தன.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் வீடு கொல்கத்தாவின் காளிகட் பகுதியில் உள்ள ஹரீஷ் சாட்டர்ஜி தெருவில் உள்ளது.

    நேற்று காலை முதல்-மந்திரி மம்தா வீட்டில் இருக்கும்போது போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் ஒருவர் வந்தார். அவர் அந்த தெருவுக்குள் நுழைய முயன்றார். அவரது காரை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியபோது முதல்-மந்திரி மம்தாவை சந்திக்க விரும்புவதாக அந்த நபர் கூறியுள்ளார்.

    அவரது காரை போலீசார் சோதனையிட்டனர். அப்போது காரில் ஒரு துப்பாக்கி, ஒரு கத்தி, கஞ்சா, பி.எஸ்.எப். உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பெயரில் அடையாள அட்டைகள் இருந்தன. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த நபரை பிடித்தனர்.

    காளிகட் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் பெயர் ஷேக் நூர் ஆலம் என அடையாளம் காணப்பட்டார்.

    இதுகுறித்து கொல்கத்தா காவல் ஆணையர் வினீத் கோயல் கூறும்போது, அந்த நபரிடம் இருந்து பல்வேறு போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அந்த நபரின் உண்மையான நோக்கத்தை அறிய முயன்று வருகிறோம். அந்த நபர் முதலில், தான் அனந்தபூரை சேர்ந்தவர் என்றார். பிறகு பாஸ்சிம் மெதினிபூர் என்றார். இதில் உண்மை என்ன என்பதை நாங்கள் சரி பார்த்து வருகிறோம் என்றார்.

    மற்றொரு அதிகாரி கூறும்போது அந்த நபர் தற்போது போலீஸ் காவலில் உள்ளார். காளிகட் காவல் நிலையத்தில் காவல் துறையின் பல்வேறு பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரித்து வருகின்றனர். அந்த நபரின் காரும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்றார்.

    ×