என் மலர்tooltip icon

    இஸ்ரேல்

    • திருவனந்தபுரத்தை சேர்ந்த கேப்ரியல் மற்றும் எடிசன் ஆகியோர் ஜோர்டானுக்குச் சென்றுள்ளனர்.
    • தாமஸ் கேப்ரியலின் உறவினரான எடிசன் என்பவரின் காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது.

    இஸ்ரேல் நாட்டிற்குள் ஜோர்டான் வழியாக சட்டவிரோதமாக நுழையமுயன்றதாக கூறி கேரளாவை சேர்ந்த நபர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

    திருவனந்தபுரத்தை சேர்ந்த கேப்ரியல் மற்றும் எடிசன் என்ற இருவர் பிப்ரவரி 5 ஆம் தேதி, சுற்றுலா விசாவில் ஜோர்டானுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் சில நபருடன் சேர்ந்து இஸ்ரேலின் எல்லையை சட்டவிரோதமாக நுழைய முயன்றுள்ளனர்.

    அப்போது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் தாமஸ் கேப்ரியல் (44) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாமஸ் கேப்ரியலின் உறவினரான எடிசன் என்பவரின் காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

    தாமஸ் கேப்ரியல் உயிரிழந்தது தொடர்பாக இஸ்ரேலுக்கான இந்திய தூதரகத்திலிருந்து அவரது குடும்பத்தினருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

    • இஸ்ரேலில் மக்கள் கூட்டத்தின்மீது வேகமாக வந்த கார் மோதியது.
    • இந்த விபத்து ஏற்படுத்தியதில் 10 பேர் காயம் அடைந்தனர்.

    ஜெருசலேம்:

    இஸ்ரேலின் வடக்கே அமைந்துள்ள ஹைபா நகரின் தெற்கே கார்கர் பகுதியில் வாகனம் ஒன்று நடந்துசென்றவர்கள் மீது இன்று திடீரென மோதி விபத்து ஏற்படுத்தியது. அங்கிருந்த பலரின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.

    இந்தச் சம்பவத்தில் சிக்கி 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவரின் நிலைமை மோசமடைந்துள்ளது என கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், மக்கள் கூட்டத்தின்மீது வாகனத்தில் வந்த நபர் ஒருவர் திடீரென மோதி விபத்து ஏற்படுத்தி இருக்கிறார். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது என தெரிவித்தனர்.

    விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச்செல்ல முயன்ற நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    • மார்ச் 1 ஆம் தேதியுடன் போர் நிறுத்தம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை கேள்விக்குறியாகி உள்ளது.
    • போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தின் போது, இஸ்ரேலிய இராணுவம் 100 பாலஸ்தீனியர்களைக் கொன்றது.

    காசாவில் கடந்த 15 மாதமாக நடந்து வந்த போர் தற்காலிக அமைதி உடன்படிக்கை மூலம் ஜனவரி 19 ஆம் தேதி நிறுத்தபட்டது. இந்த உடன்படிக்கையில் பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேலிய பிணை கைதிகளை விடுவித்தல், காசாவிலிருந்து இஸ்ரேலிய படைகளை திரும்பப் பெறுதல், 15 மாதங்களாக இடைவிடாத இஸ்ரேலிய குண்டுவீச்சினால் அழிக்கப்பட்ட பகுதிக்கு உதவி வழங்குதல் ஆகியவை இதில் அடங்கும்.

    ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பிணைக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது.

    நேற்று 6 இஸ்ரேல் பிணை கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்தது. இந்நிலையில் திட்டமிட்டபடி அவர்களுக்கு ஈடாக இஸ்ரேல் பிடித்துவைத்துள்ள பாலஸ்தீனிய கைதிகளில் 650 பேரை விடுதலை செய்ய மறுத்துள்ளது. வரும் மார்ச் 1 ஆம் தேதியுடன் போர் நிறுத்தம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை கேள்விக்குறியாகி உள்ளது.

    இதுதொடர்பாக நேதன்யாகு இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹமாஸின் தொடர்ச்சியான மீறல்களைக் கருத்தில் கொண்டு நமது பணயக்கைதிகளை அவமதிக்கும் அவமானகரமான விழாக்கள் மற்றும் பணயக்கைதிகளை பிரச்சாரத்திற்காக இழிவாகப் பயன்படுத்துவதன் காரணமாக நேற்று (சனிக்கிழமை) திட்டமிடப்பட்ட பயங்கரவாதிகளின்(பால்ஸ்தீனியர்களின்) விடுதலையை தாமதப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது " என்று தெரிவித்துள்ளார்.

    நேற்று 6 இஸ்ரேலிய கைதிகள் விடுவிக்கப்படும்போது அதில் ஒருவர் ஹமாஸ் அமைப்பினர் ஒருவருக்கு நெற்றியில் முத்தமிட்ட காட்சி வைரலானதை தொடர்ந்து இஸ்ரேல் இந்த முடிவை எடுத்துள்ளது.

    இந்நிலையில் இஸ்ரேல் தொடர்ந்து ஒப்பந்தத்தை மீறி வருவதாக ஹமாஸ் மூத்த அதிகாரி பாஸ்ஸெம் நயீம் தெரிவித்தார். அல் ஜசீராவுக்கு பேட்டி அளித்த பாஸ்ஸெம் நயீம், "போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தின் போது, இஸ்ரேலிய இராணுவம் 100 பாலஸ்தீனியர்களைக் கொன்றது.

    இதுபோன்று தொடர்ந்து வரும் செயல்கள் ஒப்பந்தத்தை முறிக்கவும், மீண்டும் போருக்குத் திரும்புவதற்கான அதன் விருப்பத்தை வெளிப்படுத்தும் வலதுசாரி இஸ்ரேல் அரசாங்கத்தின் ஒரு மோசமான தந்திரம் என்று நாங்கள் கருதுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

    • இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
    • போர்நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர்.

    காசா முனை:

    இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போர்நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுதலை செய்து வருகிறது. அதற்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்து வருகிறது.

    இதற்கிடையே, போர்நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் இஸ்ரேலிய பிணைக்கைதிகளில் மேலும் 6 பேரை ஹமாஸ் அமைப்பினர் நேற்று விடுதலை செய்தனர்.

    இந்நிலையில், பிணைக்கைதிகளில் ஒருவரான ஒமர் ஷேம் என்பவர் தங்களை அழைத்து வந்த ஹமாஸ் அமைப்பினரில் இரண்டு பேரை நெற்றியில் முத்தமிட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

    • சண்டை 6 வார காலம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
    • இஸ்ரேல் நடத்திய வான்வழித்தாக்குதலில் அவர்கள் 4 பேரும் பலியானதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.

    இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தில் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 15 மாதங்களாக நடந்து வந்த சண்டை 6 வார காலம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்ற பிணைக்கைதிகளை விடுவித்து வருகின்றனர்.

    நேற்று ஷிரி பிபஸ் என்ற பெண் , அவரது 2 குழந்தை களான ஏரியல், கிபிர் மற்றும் ஓய்வு பெற்ற பத்திரிகையாளரான ஓடட் லிப்ஷிட்ஸ் ஆகிய 4 பிணைக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர்.

    இஸ்ரேல் நடத்திய வான்வழித்தாக்குதலில் அவர்கள் 4 பேரும் பலியானதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.

    ஆனால் இதனை இஸ்ரேல் மறுத்துள்ளது. 2 குழந்தைகளும் காசாவில் பாலஸ்தீன பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் அவிச்சே அத்ரே தெரிவித்து உள்ளார். மேலும் ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைத்த ஷிரி பிபஸ் உடல் அவருடையது இல்லை என்றும் அவர் கூறி உள்ளார்.

    மேலும் அவர் ஹமாஸ் அமைப்பினர் கடத்தி சென்ற அனைத்து பிணைக்கைதிகளுடன் சேர்த்து ஷிரிபிசையும் திருப்பி அனுப்ப வேண்டும் என நாங்கள் கோருகிறோம் என தெரிவித்துள்ளார். 

    • பெஞ்சமின் நேதன்யாகு அவசர பாதுகாப்புக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்
    • குண்டுகள் அதே பாணியில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் நேரக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்ததாகவும் கூறியுள்ளனர்.

    இஸ்ரேலில் நேற்று (வியாழக்கிழமை) இரவு பேருந்துகளில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. மத்திய இஸ்ரேல், டெல் அவிவ் அருகே ஒரு வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று பேருந்துகளில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளன.

    மேலும் இரண்டு பேருந்துகளிலும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், இது ஒரு பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

    இருப்பினும், குண்டுவெடிப்பு நடந்த நேரத்தில் பேருந்துகள் காலியாக நிறுத்தப்பட்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. யாரும் காயமடைந்ததாகத் தகவல் இல்லை.

    குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து இஸ்ரேலிய காவல்துறையினரும் வெடிகுண்டு நிபுணர்களும் அனைத்து முக்கிய இஸ்ரேலிய நகரங்களிலும் பேருந்துகள் மற்றும் ரெயில்களில் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

    பேருந்து குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு  அவசர பாதுகாப்புக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

     

    காவல்துறை முதற்கட்ட அறிக்கையில், இவை சந்தேகத்திற்குரிய பயங்கரவாத தாக்குதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குண்டுகள் அதே பாணியில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் நேரக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் பிணை கைதிகள் பரிமாற்றம் நடந்து வரும் சூழலில் இந்த குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன.

    போர் நிறுத்தத்தின் முதற்கட்டமாக 6 வாரங்களில் 33 பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. 33 பணய கைதிகளுக்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் 1,904 பேரை இஸ்ரேல் விடுதலை செய்கிறது. பணய கைதிகள் 33 பேரில் சிலர் உயிரிழந்ததாக ஹமாஸ் தெரிவித்தது.

    போரின்போது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் இஸ்ரேலிய பிணை கைதிகளின் உடல்களை நேற்று இஸ்ரேலிடம் ஹமாஸ் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது. 

    • இஸ்ரேல் பிணைக்கைதிகளில் 6 பேரை சனிக்கிழமை விடுவிக்க உள்ளது.
    • வியாழக்கிழமை 4 பேரின் உடல்களை திருப்பி அனுப்புவதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல் பிணைக்கைதிகளில் 6 பேரை சனிக்கிழமை விடுவிப்பதாகவும், வியாழக்கிழமை 4 பேரின் உடல்களை திருப்பி அனுப்புகிறோம் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

    காசாவில் மொபைல் வீடுகள், கட்டுமான பொருட்களை இஸ்ரேல் அனுமதிப்பதை அடுத்து ஹமாஸ் இவ்வாறு அறிவித்தது. போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டமாக விடுவிக்கப்படவுள்ள கடைசி உயிருள்ள பிணைக்கைதிகள் இவர்கள் ஆவர்.

    ஒப்பந்தத்தின் படி முதல் கட்டமாக இறந்தவர்களின் உடல்களை மட்டுமே திருப்பி அனுப்ப வேண்டும் என இஸ்ரேல் கூறியது.

    இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இஸ்ரேல் அரசுக்கு நாளை (இன்று) மிகவும் கடினமான நாளாக இருக்கும். ஒரு துக்கமான நாள், துக்கத்தின் நாள். இறந்த எங்கள் அன்பான பிணைக்கைதிகள் 4 பேரை வீட்டிற்கு அழைத்து வருகிறோம். நாங்கள் குடும்பங்களை அரவணைக்கிறோம், முழு தேசத்தின் இதயமும் கிழிந்துவிட்டது. என் இதயமே கிழிந்துவிட்டது. உங்களுடையதும் அப்படித்தான் என பதிவிட்டுள்ளார்.

    • உத்தரவை செயல்படுத்துவதில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.
    • இந்த நிறுவனம் அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு UNRWA சட்டத்தை உடனடியாக அமல்படுத்த அறிவுறுத்தி உள்ளார். இது இஸ்ரேல் பாராளுமன்றத்தில் (நெசெட்) பெரும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

    கிழக்கில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணிகள் நிறுவனம் (UNRWA) ஒரு நிவாரண மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் ஆகும்.

    இது குறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "நெசெட் பெரும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட UNRWA சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உத்தரவிட்டுள்ளார். பிரதமரின் உத்தரவை செயல்படுத்துவதில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை," என்று கூறப்பட்டுள்ளது.

    கடந்த அக்டோபர் 2024-இல் இஸ்ரேல் பாராளுமன்றம், அதன் பிரதேசத்தில் UNRWA-இன் செயல்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் இஸ்ரேலிய அதிகாரிகள் அந்த நிறுவனத்துடன் எந்த தொடர்பும் வைத்திருப்பதை தடை செய்வதற்கும் அழைப்பு விடுத்து இரண்டு சட்டங்களை இயற்றியது.

    ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள அனைத்து வளாகங்களையும் காலி செய்து, இந்த ஆண்டு ஜனவரி 30-ம் தேதிக்குள் அவற்றின் செயல்பாடுகளை நிறுத்துமாறு இஸ்ரேல் UNRWA-க்கு உத்தரவிட்டு இருந்தது.

    இந்த மாத தொடக்கத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் UNRWA-க்கான நிதியைக் குறைப்பதற்கான நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

    ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 1948 அரபு-இஸ்ரேலிய போரை அடுத்து, பொது சபைத் தீர்மானம் 302 (IV) மூலம் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, UNRWA நிறுவப்பட்டது. இதில் பதிவு செய்யப்பட்ட பாலஸ்தீனிய அகதிகளுக்கு "நேரடி நிவாரணம் மற்றும் பணித் திட்டங்களை" வழங்க, "1946 ஜூன் 1 முதல் 1948 மே 15 வரையிலான காலகட்டத்தில் பாலஸ்தீனமாக இருந்தவர்கள் மற்றும் 1948 போரின் விளைவாக வீடு மற்றும் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள்" என்று வரையறுக்கப்படுகிறது.

    பல தசாப்தங்களாக, இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், குறிப்பாக மேற்குக் கரை மற்றும் காசா பகுதி உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கு இந்த நிறுவனம் அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது. இதில் சுகாதார வசதிகள், பள்ளிகள் மற்றும் தொழில் பயிற்சி மையங்கள் அடங்கும்.

    இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் மசோதா அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், உதவி வழங்குவதில் UNRWA வகிக்கும் முக்கிய பங்கை வலியுறுத்தினார். மேலும் இந்த தடை "பேரழிவு விளைவுகளை" ஏற்படுத்தும் என்றும் கூறினார்.

    இது குறித்து ஐ.நா. உதவி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் செயல் தலைவர் ஜாய்ஸ் சுயா, "இந்த முடிவு ஆபத்தானது மற்றும் மூர்க்கத்தனமானது" என்று தெரிவித்தார். UNRWA ஆணையர் ஜெனரல் பிலிப் லாசரினி, இந்த மசோதாக்கள் "பாலஸ்தீனியர்களின் துன்பத்தை அதிகரிக்கும். மேலும் இது தண்டனைக்குக் குறைவானது அல்ல" என்று கூறியுள்ளார்.

    • மும்முனை தாக்குதலுக்கு 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
    • இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்து பேசினார்.

    இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் இடை யே கடும் போர் நடந்தது. காசாவில் இஸ்ரேல் நடத்திய மும்முனை தாக்குதலுக்கு 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். காசா நகரங்கள் குண்டு வீச்சுக்கு சின்னாபின்னமாகின.

    அமெரிக்கா, கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தம் செய்ததால் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 42 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாக பிடித்து சென்றவர்களை விடுவித்து வருகின்றனர். இதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

    ஹமாஸ் பிடியில் இன்னும் பிணைக்கைதிகள் உள்ளனர். அனைவரையும் உடனே விடுவிக்க வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார்.

    ஜெருசலேமில் அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, "ஹமாஸ் அதிகாரத்தில் இருக்கும் வரை சமாதானம் சாத்தியமற்றது. இதனால் ஹமாஸ் அமைப்பு அழிக்கப்பட வேண்டும்," என்று தெரிவித்தார்.

    இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறும் போது, "காசா போர் தொடர்பாக இஸ்ரேலும், அமெரிக்காவும் ஒரு பொதுவான உத்தியை கொண்டுள்ளன. அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்காவிட்டால் நரக வேதனையை அனுபவிக்க நேரிடும்."

    "காசாவில் ஹமாஸ் ராணுவ திறனையும், அதன் அரசியல் ஆட்சியையும் ஒழிக்க அரசு உறுதியாக இருக்கிறது. நாங்கள் அனைத்து பிணைக் கைதிகளையும் மீட்டு வீட்டுக்கு அழைத்து வருவோம். காசா ஒருபோதும் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வோம்."

    "இஸ்ரேலுக்கும், ஹமாசுக்கும் இடையே போர் நிறுத்தம் பலவீனமாக உள்ளது. கைதிகள் மற்றும் பிணைக் கைதிகள் பரிமாற்றத்தின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்னும் நடத்தப்படவில்லை," என்று அவர் கூறினார்.

    • பயணக் கைதிகளை விடுவிக்கும் வகையில் 6 வார போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
    • இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதால், பணயக் கைதிகளை விடுவிக்கமாட்டோம் என மிரட்டல் விடுத்திருந்தது.

    ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 பேர் உயிரிழந்தனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக கடத்தி சென்றனர்.

    இதையடுத்து ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த போருக்கிடையே 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது ஹமாஸ் பிடியில் உள்ள பணயக் கைதிகளில் 100-க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    இடைக்கால போர் நிறுத்தம் அமலில் இருக்கும்போது, ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

    டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்பதற்கு முன் இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனடிப்படையில் இஸ்ரேல்- காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த மாதம் 19-ந்தேதி அமலுக்க வந்தது. இந்த போர் நிறுத்தம் 6 வாரங்கள் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள பணய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.

    அதன்படி, முதற்கட்டமாக ஹமாஸ் தங்கள் பிடியில் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளில் 33 பேரை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. இதற்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளில் 1,904 பேரை விடுதலை செய்ய இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.

    ஒப்பந்தத்தின்படி ஹமாஸ் அமைப்பினர் தங்கள் பிடியில் உள்ள பணயக் கைதிகளில் 21 பேரை விடுதலை செய்திருந்தனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 730 பேரை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.

    இந்த நிலையில் இன்று 3 பேரை விடுதலை செய்ய ஹமாஸ் முடிவு செய்திருந்தது. ஆனால், இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸ் குற்றம்சாட்டியது. அத்துடன் திட்டமிட்டபடி சனிக்கிழமை (இன்று) பணயக் கைதிகளை விடுவிக்க முடியாது என ஹமாஸ் மிரட்டல் விடுத்தது.

    இதற்கிடையே சனிக்கிழமைக்குள் அனைத்து பயணக் கைதிகளையும் விடுவிக்கவில்லை என்றால காசாவில் நரகம வெடிக்கும் என டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிறுத்திவிட்டு காசா மீது தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் தெரிவித்தது.

    இதனால் திட்டமிட்டபடி சனிக்கிழமை (இன்று) 3 பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என கடந்த வியாழக்கிழமை ஹமாஸ் தெரிவித்திருந்தது.

    அதன்படி இன்று 3 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது. லெய்ர் ஹோர்ன் (46), சாகுய் தெகெல் சென் (36), அலெக்சாண்டர் (சஷா) டிரௌபனவ் (29) ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    லெய்ர் ஹோர்ன் இஸ்ரேல் மற்றும் அர்ஜென்டினா குடியுரிமை கொண்டவர். சாகுய் தெகெல் சென் இஸ்ரேல் வாழ் அமெரிக்கர் ஆவார். அலெக்சாண்டர் இஸ்ரேல் மற்றும் ரஷியா குடியுரிமை கொண்டவர். இந்த மூன்று பேருடன் மொத்த 24 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    காசாவில் இன்னும் 73 இஸ்ரேலியர்கள் பணயக் கைதிகளாக உள்ளதாகவும், இதில் 36 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் நம்புகிறது.

    • இதுவரை 21 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்துள்ளது
    • இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.

    கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச்சென்றனர். அதன்பின், தற்காலிக போர் நிறுத்தத்தின்போது 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக் கைதிகள் உள்ளனர். 34 பேர் உயிரிழந்துவிட்டனர்.

    கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் சமீபத்தில் அமலுக்கு வந்தது. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தப்படி இஸ்ரேலிய பிணைக்கைதிகளில் மேலும் 3 பேரை ஹமாஸ் ஆயுதக்குழு சனிக்கிழமை விடுதலை செய்ய உள்ளது.

    பிணைக்கைதிகளில் 3 ஆண்களை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி, இஸ்ரேலிய பிணைக்கைதிகள் யாஹர் ஹரன் (46), அலெக்சாண்டர் ருபெனோ (29), சஹொய் டிகெல் ஷென் (36) ஆகிய 3 பேரை ஹமாஸ் ஆயுதக்குழு விடுதலை செய்கிறது.

    இதற்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளில் 369 பேரை இஸ்ரேல் விடுதலை செய்கிறது. இதில் 36 பேர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட ஆயுள் தண்டனை கைதிகள் ஆவர்.

    போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் இதுவரை இஸ்ரேலிய பிணைக்கைதிகளில் 21 பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. அதற்கு ஈடாக தற்போதுவரை 750-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.

    • போர்நிறுத்தம் அடிப்படையில் ஹமாஸ் போராளிகள் பிணைக்கைதிகளை விடுவித்து வருகின்றனர்.
    • இஸ்ரேல் ராணுவமும் தங்கள் சிறைகளில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவித்து வருகிறது.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாகப் பிடித்துச்சென்றனர்.

    அதன்பின், தற்காலிக போர் நிறுத்தத்தின்போது 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக்கைதிகள் உள்ளனர். 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

    போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஹமாஸ் போராளிகள் பிணைக்கைதிகளை விடுவித்து வருகின்றனர். இஸ்ரேல் ராணுவமும் தங்கள் சிறைகளில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவித்து வருகிறது.

    இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியபோது வடக்கு காசாவில் இருந்த பாலஸ்தீனர்கள் தெற்கு காசாவிற்கு இடம்பெயர்ந்தனர். அவர்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கு இஸ்ரேல் ராணுவம் அனுமதித்தது. அதன்படி ஏராளமான பாலஸ்தீனர்கள் வடக்கு காசாவுக்கு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில், வடக்கு காசாவையும் தெற்கு காசாவையும் இணைக்கும் நெட்சரிம் பகுதியில் இருந்து படைகள் வாபஸ் பெறப்பட்டது என இஸ்ரேல் ராணுவ அதிகாரி தெரிவித்தார்.

    ×