என் மலர்
உலகம்

இஸ்ரேல்: பேருந்துகளில் தொடர் குண்டுவெடிப்பு - மீண்டும் பயங்கரவாத தாக்குதல்?

- பெஞ்சமின் நேதன்யாகு அவசர பாதுகாப்புக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்
- குண்டுகள் அதே பாணியில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் நேரக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்ததாகவும் கூறியுள்ளனர்.
இஸ்ரேலில் நேற்று (வியாழக்கிழமை) இரவு பேருந்துகளில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. மத்திய இஸ்ரேல், டெல் அவிவ் அருகே ஒரு வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று பேருந்துகளில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளன.
மேலும் இரண்டு பேருந்துகளிலும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், இது ஒரு பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இருப்பினும், குண்டுவெடிப்பு நடந்த நேரத்தில் பேருந்துகள் காலியாக நிறுத்தப்பட்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. யாரும் காயமடைந்ததாகத் தகவல் இல்லை.
குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து இஸ்ரேலிய காவல்துறையினரும் வெடிகுண்டு நிபுணர்களும் அனைத்து முக்கிய இஸ்ரேலிய நகரங்களிலும் பேருந்துகள் மற்றும் ரெயில்களில் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
பேருந்து குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அவசர பாதுகாப்புக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காவல்துறை முதற்கட்ட அறிக்கையில், இவை சந்தேகத்திற்குரிய பயங்கரவாத தாக்குதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குண்டுகள் அதே பாணியில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் நேரக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் பிணை கைதிகள் பரிமாற்றம் நடந்து வரும் சூழலில் இந்த குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன.
போர் நிறுத்தத்தின் முதற்கட்டமாக 6 வாரங்களில் 33 பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. 33 பணய கைதிகளுக்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் 1,904 பேரை இஸ்ரேல் விடுதலை செய்கிறது. பணய கைதிகள் 33 பேரில் சிலர் உயிரிழந்ததாக ஹமாஸ் தெரிவித்தது.
போரின்போது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் இஸ்ரேலிய பிணை கைதிகளின் உடல்களை நேற்று இஸ்ரேலிடம் ஹமாஸ் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.