என் மலர்
நேபாளம்
- சிஹந்தண்டா என்ற இடத்தில் ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்களும் 6 பேரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- ஹெலிகாப்டர் மலை மேல் உள்ள மரத்தில் மோதியதே விபத்துக்கு காரணம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை பார்வையிடுவதற்காக 5 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் லாம்ஜுரா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. இன்று காலை 5 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 6 பேருடன் புறப்பட்ட ஹெலிகாப்டர் சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்தது.
இதையடுத்து ஹெலிகாப்டர் காணாமல் போனதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்ட நிலையில், பகன்ஜே கிராமத்தின் லம்ஜுராவில் உள்ள சிஹந்தண்டா என்ற இடத்தில் ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்களும் 6 பேரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஹெலிகாப்டர் மலை மேல் உள்ள மரத்தில் மோதியதே விபத்துக்கு காரணம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- 17 திரையரங்கங்களின் வாசலில் போலீசார் நிறுத்தப்பட்டு இந்தி படங்கள் திரையிடப்படுவது தடை செய்யப்பட்டிருக்கிறது.
- ஜானகி இந்தியாவின் மகள் எனும் வசனம் நீக்கப்படும் வரை தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கலாச்சாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் புராணங்கள், "ராமாயணம்" மற்றும் "மகாபாரதம்". இவை இந்துக்களின் புனித நூல்களில் மிகவும் மதிக்கப்படுகின்ற காவியங்களாகும். இந்தியாவெங்கும் ராமாயணத்தை தழுவி 1950களிலிருந்தே பல மொழிகளில், பல திரைப்படங்கள் வந்து அவை பெரும் வெற்றியை பெற்றிருக்கின்றன.
கடந்த வாரம், தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் கதாநாயகனாக நடித்த "ஆதிபுருஷ்" எனும் திரைப்படம் பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது. இத்திரைப்படம் ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டிருப்பதாக பல மாதங்களுக்கு முன்பே தகவல்கள் வெளியானதால், இந்தியா முழுவதும் இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு மிகவும் கூடியிருந்தது.
ஆனால், இத்திரைப்படம் வெளியான இரு தினங்களுக்குள்ளேயே இப்படத்தின் காட்சிகள் மற்றும் வசனங்கள் குறித்து பல சர்ச்சைகள் உருவாகி வருகின்றன. பல இடங்களில் திரையரங்க வாசல்களில் போராட்டங்களும் நடைபெறுகின்றன. சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கக்கோரி இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்திலும் போராட்டம் நடைபெற்றது.
நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவிலும், சுற்றுலா தலமான பொகாராவிலும், இத்திரைப்படம் ஏற்படுத்தியுள்ள சர்ச்சை காரணமாக எல்லா இந்தி திரைப்படங்களுமே தடை செய்யப்பட்டுவிட்டன. 17 திரையரங்கங்களின் வாசலில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டு இந்தி படங்கள் திரையிடப்படுவது தடை செய்யப்பட்டிருக்கிறது.
"ஜானகி இந்தியாவின் மகள்" எனும் வசனம் இந்தியாவிலும், நேபாளத்திலும் இப்படத்திலிருந்து நீக்கப்படும் வரையில் எந்த இந்தி திரைப்படமும் காத்மாண்டு பெருநகரத்தில் திரையிட அனுமதி இல்லை", என மேயர் பாலேந்திர ஷா தெரிவித்தார். இது குறித்த ஷாவின் முகநூல் பதிவிற்கு பரவலான ஆதரவும், ஒரு சிலரின் எதிர்ப்பும் காணப்படுகிறது. மேயரின் உத்தரவை நிறைவேற்றுவதாக கூறிய காத்மாண்டு பெருநகர காவல்துறை தலைவர் ராஜு பாண்டே, இதனை உறுதி செய்வதற்காக திரையரங்கங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அதே போன்று "இன்று முதல் அத்திரைப்படம் திரையிட அனுமதியில்லை" என பொகாரா நபர மேயர் தனராஜ் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
சர்ச்சைகள் வலுவடைந்திருக்கும் நிலையில், படத்தின் வசனகர்த்தா மனோஜ் முன்டாஷிர் சுக்லா கூறுகையில், "திரைப்படத்தை உருவாக்கியவர்கள், பல வசனங்களில் மாற்றம் செய்வதாக தெரிவித்திருக்கிறார்கள். இவை ஒரு வார காலத்திற்குள் நடைபெற்று திரையரங்கங்களில் திரையிடப்படும்" என்றும் தெரிவித்தார்.
பிரபலமான டி-சீரிஸ் நிறுவனம், ரெட்ரோஃபைல்ஸ் மற்றும் யு.வி. கிரியேஷன்ஸ் ஆகியோரின் கூட்டு தயாரிப்பில் உருவாகியுள்ள "ஆதிபுருஷ்" திரைப்படத்தில் ராமராக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக இந்தி நடிகர் சாய்ஃப் அலிகானும், இலக்குவனாக சன்னி சிங்கும், மற்றும் அனுமனாக தேவதத்தா நாகேயும் நடித்துள்ளனர்.
- உலகிலேயே உயரமான சிகரமாக இமயமலையில் உள்ள எவரெஸ்ட் விளங்குகிறது.
- 'இமயமலையை காப்போம்' என்ற வாசகம் இடம்பெற்ற பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.
காத்மாண்டு :
உலகிலேயே உயரமான சிகரமாக இமயமலையில் உள்ள எவரெஸ்ட் விளங்குகிறது. இதன் உச்சிமுடியை எட்டிப்பிடிப்பது அரிய சாகச செயலாக கருதப்படுகிறது.
1953-ம் ஆண்டு மே 29-ந்தேதியன்று, நியூசிலாந்தைச் சேர்ந்த எட்மண்ட் ஹிலாரியும், நேபாள நாட்டின் டென்சிங் நார்கேயும் முதல்முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தனர்.
அதன் 70-வது ஆண்டுவிழாவையொட்டி, நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நேற்று ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில், எவரெஸ்ட் மலையேற்றத்துக்கு உதவும் ஆயிரக்கணக்கான ஷெர்பா இன வழிகாட்டிகளும், அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர். 'இமயமலையை காப்போம்' என்ற வாசகம் இடம்பெற்ற பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.
இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்த பல உள்நாட்டு, வெளிநாட்டு மலையேற்ற வீரர்களும், அவர்களுக்கான ஷெர்பா வழிகாட்டிகளும் நேபாள அரசால் கவுரவிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு, வெள்ளியாலான, எவரெஸ்ட் சின்னம் பொறித்த 'பேட்ஜ்'களும் வழங்கப்பட்டன. எவரெஸ்டில் முதல்முறையாக காலடி பதித்த ஹிலாரி, டென்சிங் குடும்பத்தினருக்கு மரியாதை அளிப்பதற்கான ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஹிலாரி கடந்த 2008-ம் ஆண்டும், டென்சிங் கடந்த 1986-ம் ஆண்டும் இறந்துவிட்டனர். அவர்களுக்குப் பின் கடந்த 70 ஆண்டுகளில், பல நாடுகளைச் சேர்ந்த 7 ஆயிரத்து 621 பேர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்திருக்கின்றனர்.
- விமானத்தின் வலதுபுற இறக்கை சேதமடைந்தது.
- பயணிகள் வேறு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
காத்மாண்டு:
நேபாள ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நேற்று காத்மாண்டு நகரின் திருபுவன் விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்டு சென்றது. நடுவானில் பறந்தபோது எதிர்பாராதவிதமாக ஒரு பறவை விமானம் மீது மோதியது. விமானத்தின் வலதுபுற இறக்கை சேதமடைந்தது.
அதைத்தொடர்ந்து அந்த விமானம் திருபுவன் விமான நிலையத்திற்கு மீண்டும் திருப்பப்பட்டு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டனர். பின்னர் வேறு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
- கமி ரீட்டா முதன் முதலில் 1994ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்.
- மற்றொரு ஷெர்பா 27வது முறை சிகரத்தை அடைந்துள்ளார்.
காத்மாண்டு:
உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை அடைவது மலையேற்ற வீரர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மலையேற்ற சீசனில் ஏராளமான வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுகின்றனர். அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கென வழிகாட்டிகள் உள்ளனர். அவர்களும் வீரர்களுடன் சிகரத்தில் ஏறி இறங்குகின்றனர்.
அவ்வகையில் இந்த ஆண்டு நேபாளத்தைச் சேர்ந்த வழிகாட்டி கமி ரீட்டா (வயது 53), மலையேற்ற வீரர்களுடன் இன்று சிகரத்தை அடைந்தார். இந்த வாரத்தில் மட்டும் இரண்டு முறை அவர் சிகரத்தை அடைந்துள்ளார். அத்துடன் தன் வாழ்நாளில் 28 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி புதிய சாதனை படைத்துள்ளார்.
அவர் பாரம்பரியமான தென்கிழக்கு மலைமுகட்டு பாதை வழியாக சென்று 8,849 உயரம் கொண்ட சிகரத்தை வெற்றிகரமாக அடைந்ததாக நேபாள சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.
கமி ரீட்டா முதன் முதலில் 1994ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். மலையேற்றம் தடை செய்யப்பட்ட ஆண்டுகளைத் தவிர, ஒவ்வொரு ஆண்டும் சிகரத்தில் ஏறி உள்ளார்.
தென்கிழக்கு மலைமுகட்டு பாதையை முதன்முதலாக 1953ஆம் ஆண்டில் நியூசிலாந்தைச் சேர்ந்த சர் எட்மண்ட் ஹிலாரி மற்றும் ஷெர்பா டென்சிங் நோர்கே ஆகியோர் பயன்படுத்தினர். அதன்பின்னர் இந்த பாதையில் அதிக வீரர்கள் பயணிக்கத் தொடங்கி, தற்போது மிகவும் பிரபலமான பாதையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கமி ரீட்டாவுக்கு அடுத்தபடியாக, மற்றொரு ஷெர்பா 27வது முறை சிகரத்தை அடைந்துள்ளார். அவர் கடந்த வாரம் இந்த சாதனையை எட்டினார்.
பிரிட்டனைச் சேர்ந்த கென்டன் கூல் என்ற வீரர், 17வது முறையாக கடந்த வாரம் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளார். வெளிநாட்டு வீரர்களில் இவர் அதிக முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
- முன்னாள் ராணுவ வீரர் ஹரி புத்தமகர், எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் நபர் என்ற வரலாற்றை படைத்தார்.
- 2018ம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் திட்டத்தை புத்தமகர் ஒத்திவைத்தார்.
பிரித்தானிய முன்னாள் ராணுவ வீரர் தனது இரண்டு கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் செயற்கை கால்களுடன் உலகின் மிக உயரமான சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளார்.
43 வயதான ஹரி புத்தமகர், நேற்று முன்தினம் பிற்பகல் 8848.86 மீட்டர் உச்சத்தை எட்டினார்.
இரட்டை கால்களை இழந்த முன்னாள் ராணுவ வீரர் ஹரி புத்தமகர், அந்த பிரிவில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் நபர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் என சுற்றுலாத்துறை அதிகாரி தெரிவித்தார்.
கடந்த 2010ம் ஆண்டில் இங்கிலாந்து அரசாங்கத்திற்காக ஆப்கானிஸ்தானில் நடந்த போரின்போது பிரிட்டிஷ் கோர்காவின் சிப்பாயாக போரிட்ட புத்தமகர் தனது இரண்டு கால்களையும் இழந்துள்ளார்.
2017ம் ஆண்டில் எவரெஸ்ட் உட்பட, பார்வையற்றவர்கள், இரட்டை உறுப்புகள் இழந்தவர்கள் மற்றும் தனியாக ஏறுபவர்கள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மலைகளில் ஏறுவதைத் தடைசெய்யும் மலையேறும் விதிமுறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இதனால், 2018ம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் திட்டத்தை புத்தமகர் ஒத்திவைத்தார்.
பிறகு, தடைக்கு எதிராக ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் முடிவில் தடை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- மாரடைப்பு ஏற்பட்டு இதயத்தில் பேஸ்மேக்கர் கருவி பொருத்திய சுசான் லியோபோல்டினா ஜீசஸ் என்ற வீராங்கனை எவரெஸ்ட் சிகரத்தில் ஏற விரும்பினார்.
- மருத்துவ குழுவினர் ஹெலிகாப்டர் உதவியுடன் சுசான் லியோபோல்டினா ஜீசசை மீட்டு காத்மாண்டு கொண்டு வந்தனர்.
காத்மாண்ட்:
இமயமலையின் எவரெஸ்ட் சிகரம் உலகிலேயே மிக உயரமான சிகரமாகும்.
இந்த சிகரத்தில் ஏறி சாதனை படைக்க மலைஏறும் வீரர்கள் பலரும் விரும்புவது வழக்கம். அதன்படி மாரடைப்பு ஏற்பட்டு இதயத்தில் பேஸ்மேக்கர் கருவி பொருத்திய சுசான் லியோபோல்டினா ஜீசஸ் என்ற வீராங்கனை எவரெஸ்ட் சிகரத்தில் ஏற விரும்பினார்.
இதன்மூலம் ஆசியாவில் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்ட நிலையில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் வீராங்கனை என்ற சாதனையை படைக்க விரும்பினார். இதற்காக நேபாள அரசிடம் உரிய அனுமதி பெற்று அவர் மலை ஏற தொடங்கினார்.
எவரெஸ்ட் சிகரத்தின் அடிவார முகாமில் இருந்து புறப்பட்ட மலையேற்ற வீராங்கனை சுசான் லியோபோல்டினா ஜீசஸ் முதல் 2 கட்டங்களை தாண்ட நீண்ட நேரம் எடுத்து கொண்டார். இதனை அறிந்த மருத்துவ குழுவினர் அவரது உடல் நிலை மலை ஏற போதுமானதாக இல்லை எனக்கூறி அவரை மலை ஏற்றத்தை நிறுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தினர். ஆனால் சுசான் லியோபோல்டினா ஜீசஸ் மலை ஏற்றத்தை நிறுத்தாமல் தொடர்ந்து ஏறினார். ஒரு கட்டத்தில் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து மருத்துவ குழுவினர் ஹெலிகாப்டர் உதவியுடன் சுசான் லியோபோல்டினா ஜீசசை மீட்டு காத்மாண்டு கொண்டு வந்தனர்.
அங்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதயத்தில் பேஸ்மேக்கர் கருவி பொருத்திகொண்டு எவரெஸ்டு சிகரம் ஏறிய வீராங்கனை சுசான் லியோபோல்டினா ஜீசஸ் இறந்தது மலை ஏற்றக்குழுவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- நேபாளத்தின் கர்னாலி மாகாணத்தில் பனிச்சரிவு ஏற்பட்டது.
- பனிச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகினர். 9 பேர் காயமடைந்தனர்.
காத்மண்டு:
நேபாள நாட்டில் உள்ள கர்னாலி மாகாணத்தில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் முகு மாவட்டத்தின் சியார்கு கணவாயில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து சென்ற மீட்புக்குழுவினர் காயம் அடைந்த 9 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
- பொடேகோலா ஆற்றின் அருகே தரையிறங்க முயன்றபோது மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
- சிம்ரிக் ஏர் ஹெலிகாப்டரின் உதவியாளர்களில் ஒருவரான பாவின் குருங் விபத்தில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
நேபாளத்தின் கிழக்குப் பகுதியில் ஹெலிகாப்டர் சேவை வழங்கும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், விமானி உட்பட 4 பேர் காயமடைந்தனர்.
விமானி உள்பட நான்கு பயணிகளுடன் சேர்ந்து நேபாள நிறுவனத்தால் கட்டப்படும், அப்பர் அருண் ஹைட்ரோ திட்டத்திற்குச் சொந்தமான கட்டுமானப் பொருட்களை ஹெலிகாப்டர் ஏற்றிச் சென்றது.
ஹெலிகாப்டர் சங்குவாசபா மாவட்டத்தில் உள்ள பொடேகோலா ஆற்றின் அருகே தரையிறங்க முயன்றபோது மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், சிம்ரிக் ஏர் ஹெலிகாப்டரின் உதவியாளர்களில் ஒருவரான பாவின் குருங் விபத்தில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
ஹெலிகாப்டரில் இருந்த மற்ற நால்வரும் கேப்டன் சுரேந்திர பவுடல், பணியாளர்கள் ஷெரிங் போட் மற்றும் மனோஜ் தாபா மற்றும் நேபாள மின்சார ஆணைய ஊழியர் பிக்ரம் சங்கர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
- பிளை துபாய் விமானம் 576 (போயிங் 737-800) விமானத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
- விமானத்தை அவசரகால அடிப்படையில் காத்மாண்டு அல்லது டெல்லியில் தரையிறக்க முயற்சிக்கப்பட்டது.
நேபாளம், காத்மாண்டுவில் இருந்து துபாய் புறப்பட்ட பிளை துபாய் விமானம் 576 (போயிங் 737-800) விமானத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் எஞ்சின் பகுதியில் தீ பிடித்ததை அடுத்து விமானத்தை அவசரகால அடிப்படையில் காத்மாண்டு அல்லது டெல்லியில் தரையிறக்க முயற்சிக்கப்பட்டது.
இந்நிலையில், கோளாறு சரிசெய்யப்பட்டு, மீண்டும் விமானம் துபாய்க்கு புறப்பட்டுவிட்டதாக அந்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
- பரிசோதனையில் அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பது தெரியவந்தது.
- ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
காத்மாண்டு:
நேபாள அதிபர் ராம்சந்திர பவுதல் (வயது 78) கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த 1ம் தேதி வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று மீண்டும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதையடுத்து காத்மாண்டுவில் உள்ள டியூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதற்கட்ட பரிசோதனையில் அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று அவர் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருடன் அவரது மகன் சிந்தன் பவுதல் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.