என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நேபாளம்
- உலகின் உயரமான சிகரங்களில் ஏறி சாதனை படைத்தவர் பல்ஜீத் கவுர்.
- அன்னப்பூர்னா மலையில் உள்ள 4-வது முகாமுக்கு அருகே வந்துகொண்டிருந்தபோது பல்ஜீத் கவுர் திடீரென மாயமானார்.
காத்மாண்டு:
இமாசலபிரதேச மாநிலத்தை சேர்ந்த மலையேற்ற வீராங்கனை பல்ஜீத் கவுர். 27 வயதான இவர் உலகின் உயரமான சிகரங்களில் ஏறி சாதனை படைத்தவர் ஆவார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நேபாள நாட்டின் வடமத்திய பகுதியில் இமயமலை தொடரில் அமைந்துள்ள அன்னப்பூர்னா சிகரத்தில் தனி ஆளாக ஏறினார். அதைத்தொடர்ந்து, 8,091 மீட்டர் உயரம் கொண்ட அந்த மலையில் இருந்து அவர் இறங்க தொடங்கினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அன்னப்பூர்னா மலையில் உள்ள 4-வது முகாமுக்கு அருகே வந்துகொண்டிருந்தபோது பல்ஜீத் கவுர் திடீரென மாயமானார். இதை தொடர்ந்து ஹெலிகாப்டர்கள் மூலம் அவரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
இந்த நிலையில் நேற்று அதிகாலை பல்ஜீத் கவுர் 'உடனடி உதவி' கேட்டு ரேடியோ சிக்னலை அனுப்பினார். இதன் மூலம் அவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து ஹெலிகாப்டரில் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு குழு பல்ஜீத் கவுர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தது. இதனையடுத்து, அவரை பத்திரமாக மீட்பதற்கான பணிகளை மீட்பு படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
- அன்னபூர்ணா சிகரத்தில் மலையேற்ற பயணம் மேற்கொள்வது மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது.
- மலையேற்றத்தின்போது இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.
காத்மாண்டு:
நேபாளத்தில் உள்ள அன்னபூர்ணா மலைச்சிகரம் உலகின் 10வது உயரமான மலைச்சிகரம் ஆகும். 8,091 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிகரத்தில் ஏறி சாதனை படைப்பதற்காக ஏராளமான மலையேற்ற வீரர்கள் நேபாளம் வருகின்றனர். ஆனால் அடிக்கடி பனிச்சரிவு ஏற்படும் என்பதால் இங்கு மலையேற்ற பயணம் மேற்கொள்வது மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது.
இந்நிலையில், வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர் நோயல் ஹன்னா என்பவர் நேற்று அன்னபூர்ணா சிகரத்தில் ஏறினார். சிகரத்தில் இருந்து இறங்கியபோது நான்காவது முகாமில் இரவு தங்கியிருந்த சமயத்தில் திடீரென உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. இவர் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 10 முறை ஏறி சாதனை படைத்தவர் ஆவார்.
மேற்கு நேபாளத்தில் உள்ள அன்னபூர்ணா சிகரத்தில் முதன் முதலில் ஏறியவர் பிரான்ஸ் நாட்டின் மாரிஸ் ஹெர்சாக் ஆவார். இவர் 1950களின் முற்பகுதியில் இந்த சாதனையை படைத்தார். அதன்பின்னர் 365 பேர் சிகரத்தில் ஏறி உள்ளனர். மலையேற்றத்தின்போது 72 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் கூறி உள்ளனர். கடந்த வாரம் ஷெர்பா வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
உலகின் உயரமான 14 மலைகளில் 8 மலைகள் நேபாளத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- நேபாள நாட்டில் உள்ள சிகரங்களில் ஒன்று மவுன்ட் அன்னபூர்னா.
- இந்தியாவைச் சேர்ந்த மலையேற்ற வீரர் நேபாளில் மாயமானார்.
காத்மண்டு:
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் கிஷன்கர்க் பகுதியைச் சேர்ந்தவர் அனுராக் மாலு (34). மலையேற்ற வீரர்.
நேபாளம் நாட்டில் உள்ள உலகின் உயரமான சிகரங்களில் 10-வது சிகரமான மவுன்ட் அன்னபூர்னா பகுதிக்குச் சென்றார். நேற்று வரை முகாம் திரும்பவில்லை. இதையடுத்து அவர் மாயமானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேபாள சிகரத்தில் மாயமான அனுராக் வேலுவைத் தேடும் பணியில் அந்நாட்டு ராணுவம் மற்றும் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
- காட்டுத் தீ மற்றும் விவசாய எச்சங்களை எரிப்பதே என நேபாள அரசாங்கம் குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- புற்றுநோய், பக்கவாதம், ஆஸ்துமா மற்றும் உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
காத்மாண்டு:
உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஐக்யூ ஏர்-இன் கூற்றுப்படி, காத்மாண்டுவில் காற்றின் தரக் குறியீடு 190 ஐத் தாண்டியுள்ளது. அந்நகரை புகைமூட்டம் சூழ்ந்துள்ள நிலையில், உள்ளூர் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இந்த வார தொடக்கத்தில், காத்மாண்டு மற்றும் நாட்டின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் அதிகரித்து வரும் மாசுபாட்டிற்குக் காரணம் காட்டுத் தீ மற்றும் விவசாய எச்சங்களை எரிப்பதே என நேபாள அரசாங்கம் குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கட்டுமானப் பணிகளால் ஏற்படும் தூசி, பழைய, மோசமாகப் பராமரிக்கப்படும் வாகனங்களின் புகை, நிலக்கரி, செங்கல் சூளைகளின் புகை ஆகியவை காத்மாண்டு நகரை சூழ்ந்துள்ளது. இதனால் புற்றுநோய், பக்கவாதம், ஆஸ்துமா மற்றும் உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
- திருமண நடன வீடியோக்கள் பார்க்க மிகவும் மகிழ்ச்சியான விஷயங்களில் ஒன்றாகும்.
- நேபாளத்தில் தனது பேரனின் திருமணத்தில் தாத்தா நடனமாடுவதை இன்ஸ்டாகிராம் வீடியோ படம்பிடித்துள்ளது.
நேபாளத்தில் தனது பேரனின் திருமணத்தில் 96 வயது தாத்தா உற்சாகமாக நடனமாடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. திருமண நடன வீடியோக்கள் பார்க்க மிகவும் மகிழ்ச்சியான விஷயங்களில் ஒன்றாகும். அந்த வகையில் நேபாளத்தில் தனது பேரனின் திருமணத்தில் தாத்தா நடனமாடுவதைப் படம்பிடித்துள்ள வீடியோ மக்களின் இதயங்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
விருந்தாளிகள் இசைக்குழுவின் இசையில் முதியவர் நடனமாடுவதை 76,600 பார்வையாளர்கள் பார்த்து ரசித்து தங்களது லைக்குகளை தெரிவித்துள்ளனர்.
- பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்த விபத்தில் காரில் பயணித்த 4 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- இறந்தவர்கள் பீகார் மாநிலத்தவர்கள் என்பதால் இந்திய வெளியுறவுத்துறையிடம் தகவல் கொடுத்துள்ளது
காத்மண்டு:
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இருந்து நேபாளத்தின் காத்மண்டுவுக்கு 5 பேர் காரில் புறப்பட்டுச் சென்றனர். இன்று அதிகாலை நேபாளத்தின் மஹ்மதி மாகாணம் சிந்த்ஹுலி மாவட்டத்தில் உள்ள மலைப்பங்கான பகுதியில் சென்றபோது விபத்தில் சிக்கியது.
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்தார்.
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடம் சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
உயிரிழந்த 4 இந்தியர்களின் உடலை மீட்பதில் சிக்கல் நிலவுவதால் நேபாள ராணுவத்தின் உதவி கேட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்திய வெளியுறவுத்துறையிடம் நேபாள அரசு தகவல் கொடுத்துள்ளது.
- உடனடியாக ஒரு விமானத்தை மேலும் கீழே இறங்கச் செய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
- இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
காத்மாண்டு:
நேபாளத்தில் ஏர் இந்தியா மற்றும் நேபாள ஏர்லைன்ஸ் விமானங்கள் நடுவானில் மோதிக்கொள்வது போன்று நெருங்கி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த வெள்ளிக்கிழமை காலையில் நேபாள ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ-320 விமானம் கோலாலம்பூரில் இருந்து நேபாளத்தின் காத்மாண்டு நோக்கி வந்துகொண்டிருந்தது. அதேசமயம், ஏர் இந்தியா விமானம் டெல்லியில் இருந்து காத்மாண்டு நோக்கி வந்தது. காத்மாண்டை நெருங்கியதும் கீழே இறங்கும்போது இரு விமானங்களும் மிகவும் நெருங்கியதால் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் ரேடாரில் இதனை கவனித்து, ஒரு விமானத்தை மேலும் கீழே இறங்கச் செய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக நேபாள சிவில் விமான போக்குவரத்து ஆணைய (சிஏஏஎன்) செய்தித் தொடர்பாளர் ஜெகநாத் நிரோலா கூறியதாவது:-
தரையிறங்குவதற்கு முன்னதாக ஏர் இந்தியா விமானம் 19,000 அடி உயரத்தில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தது. அதே பாதையில் நேபாள ஏர்லைன்ஸ் விமானம் 15,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. இரண்டு விமானங்களும் அருகாமையில் இருப்பது ரேடாரில் தெரிந்ததையடுத்து, நேபாள ஏர்லைன்ஸ் விமானம் உடனடியாக 7,000 அடிக்கு கீழே இறங்கியது.
இந்த கவனக்குறைவு தொடர்பாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய 3 ஊழியர்களை நேபாள சிவில் விமான போக்குவரத்து ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்து, நேபாள வான் பகுதிக்குள் வந்தபோது தீப்பிடித்தது
- இதேபோல் கடந்த 8ம் தேதி ஒரு ராக்கெட் டெக்சாஸ் மாநில வான் பகுதியில் தீப்பற்றி எரிந்தது,
காத்மாண்டு:
உளவு செயற்கைக் கோளை அனுப்புவதற்கு பயன்படுத்தப்பட்ட சீன ராக்கெட், நேபாள வான் பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இத்தகவலை ஐக்கிய நாடுகள் கடற்படை நிறுவனம் கூறி உள்ளது.
மத்திய சீனாவில் இருந்து செலுத்தப்பட்ட சாங் செங் 2டி லாங் மார்ச் என்ற அந்த ராக்கெட், உளவு செயற்கைக் கோள்களை விடுவித்தபின்னர் சுமார் 200 நாட்கள் விண்வெளியில் இருந்த பிறகு, கடந்த சனிக்கிழமையன்று வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்தது. அப்போது நேபாள வான் பகுதிக்குள் நுழைந்தபோது, ராக்கெட் தீப்பற்றியதாக வானியல் விஞ்ஞானி ஜோனாதன் மெக்டோவல் கூறியிருக்கிறார்.
இதே மத்திய சீனாவில் இருந்து அனுப்பப்பட்ட ராக்கெட், தென் சீனக் கடலை கண்காணிப்பதற்கான மூன்று உளவு செயற்கைக் கோள்களை விடுவித்தபின், கடந்த 8ம் தேதி அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில வான் பகுதியில் தீப்பற்றி எரிந்தது குறிப்பிடத்தக்கது.
- கடந்த சில தினங்களாக கடுமையாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
- அந்த பாட்டில் அவரது குடலில் காயத்தை ஏற்படுத்தியதுடன், மலக் கசிவும் ஏற்பட்டுள்ளது.
காத்மாண்டு:
நேபாளத்தில் வாலிபர் ஒருவரின் வயிற்றில் இருந்து ஓட்கா பாட்டிலை டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றிய நிலையில், இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாளத்தின் ரவுதஹத் மாவட்டம், குஜாரா நகரில் வசித்து வரும் நூர்சாத் மன்சூரி என்ற 26 வயது வாலிபர், கடந்த சில தினங்களாக கடுமையாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அடிவயிற்றில் தாங்க முடியாத வலி ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவரது அடிவயிற்றில் ஒரு ஓட்கா மது பாட்டில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஆபரேசன் மூலம் அந்த பாட்டிலை டாக்டர்கள் அகற்றினர்.
கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு அவருக்கு ஆபரேசன் நடந்ததாகவும், இரண்டரை மணி நேரம் நடந்த இந்த ஆபரேசனில் பாட்டில் வெளியே எடுக்கப்பட்டதாகவும் ஹிமாலயன் டைம்ஸ் செய்தி வெளியட்டுள்ளது.
அந்த பாட்டில் அவரது குடலில் காயத்தை ஏற்படுத்தி குடலில் வீக்கம் ஏற்பட்டதுடன், மலக் கசிவும் ஏற்பட்டுள்ளது. ஆனால், பாட்டிலை அகற்றியதால் அவர் அபாயகட்டத்தில் இருந்து மீண்டுள்ளதாக டாக்டர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது நண்பர்களில் ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் சில நண்பர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
நண்பர்கள் சேர்ந்து மது அருந்தியபோது, போதையில் நூர்சாத்தின் ஆசனவாய் வழியாக பாட்டிலை வயிற்றுக்குள் செருகியிருக்கலாம், பாட்டில் உடையாமல் இருந்ததால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நேபாள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராம் சந்திர பவுடல் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
- அவருக்கு 214 எம்.பி.க்கள், 352 மாகாண சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது.
காத்மாண்டு:
நேபாள அதிபர் பித்யாதேவி பண்டாரியின் பதவிக்காலம் வரும் 12-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே அங்கு புதிய அதிபர் தேர்தல் நேற்று நடந்தது.
இதில் நேபாள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராம் சந்திர பவுடல் (78), புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 214 எம்.பி.க்கள், 352 மாகாண சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. நாட்டின் முக்கியமான 8 கட்சிகள் ராம் சந்திர பவுடலை ஆதரித்தன.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுபாஷ் சந்திர நெபாங்கை முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் கட்சி மட்டுமே ஆதரித்தது.
புதிய அதிபர் ராம்சந்திர பவுடலுக்கு பிரதமர் பிரசந்தா, முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தூபா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
- உடனடியாக விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
- ஜனவரி மாதம் நிகழ்ந்த பயங்கர விமான விபத்துக்குப் பிறகு அதிகாரிகள் அதிக எச்சரிக்கையுடன் உள்ளனர்.
காத்மாண்டு:
நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து பைரஹவா நோக்கி ஸ்ரீ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் விமான பணியாளர்கள், பயணிகள் என மொத்தம் 78 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் என்ஜினில் தீப்பற்றியதற்கான அறிகுறி தென்பட்டதையடுத்து இதுபற்றி தரைக்கட்டுப்பாட்டு நிலையத்திற்கு விமானி தகவல் தெரிவித்தார். உடனடியாக விமானம் காத்மாண்டு விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டது.
காத்மாண்டு விமான நிலையத்தில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. உடனடியாக விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். ஆனால் தரையிறங்கியபோது தீப்பிடித்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை.
நேபாளத்தில் ஜனவரி மாதம் நிகழ்ந்த பயங்கர விமான விபத்துக்குப் பிறகு விமானப் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் அதிக எச்சரிக்கையுடன் உள்ளனர். அந்த விமானத்தில் பயணித்த 72 பேரில் 71 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. ஒருவரை காணவில்லை. அவரும் உயிரிழந்துவிட்டதாக கருதப்படுகிறது.
- மனிதர்கள் நல்வாழ்வு என கருதும் அனைத்தும் பைரவியின் அருளை பெற்றால், அவர்கள் வசமாகும் என சத்குரு கருத்து
- இந்தியாவிற்கு வெளியே பிரதிஷ்டை செய்யப்பட்ட முதல் லிங்கபைரவி தேவி கோவில் இதுவாகும்.
பெண்மையின் சக்திமிக்க வெளிப்பாடான லிங்கபைரவி தேவி கோவிலை நேபாள நாட்டில் சத்குரு பிரதிஷ்டை செய்தார். இந்தியாவிற்கு வெளியில் முதல் முறையாக லிங்கபைரவி கோவில் நேபாள நாட்டில் தான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது பல்வேறு வழிகளில் சத்குருவிற்கும் நேபாளம் மற்றும் அங்குள்ள மக்களுக்கும் உள்ள ஆழமான தொடர்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.
லிங்கபைரவி தேவியை பிராண பிரதிஷ்டை எனும் சக்திவாய்ந்த செயல்முறை மூலம் சத்குரு பிரதிஷ்டை செய்தார். இது உயிர் ஆற்றலை பயன்படுத்தி கல்லை தெய்வமாக மாற்றும் அரிய மறைஞான செயல்முறை ஆகும். லிங்க பைரவியின் ஆற்றல் மனித அமைப்பில் உள்ள மூன்று அடிப்படை சக்கரங்களை பலப்படுத்துகிறது. இது ஒருவரின் உடல், மனம் மற்றும் சக்தி அமைப்பை உறுதிப்படுத்துகிறது. ஒருவர் வாழ்வின் உடல் மற்றும் பொருள் தன்மையிலான அம்சங்களை பெற, அனுபவிக்க அல்லது கடந்து செல்ல முனைந்தால் அவருக்கு அதையும், அதை தாண்டிய பலவற்றையும் அருள்பவளாக தேவி இருக்கிறாள்.
லிங்கபைரவியை பற்றி சத்குரு கூறும் போது, "பைரவியின் அருளை பெறுபவர்கள் வாழ்க்கை, மரணம், வறுமை, தோல்வி குறித்த பயத்துடனோ, கவலையுடனோ வாழ வேண்டியதில்லை. மனிதர்கள் நல்வாழ்வு என கருதும் அனைத்தும் பைரவியின் அருளை பெற்றால், அவர்கள் வசமாகும்." என்றார்.
மேலும் இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் "ஆண்தன்மையின் ஆதிக்கம் அடைதலைக் குறிக்கிறது, பெண்தன்மை அரவணைப்பால் ஆதிக்கம் செலுத்துகிறது. நேபாளத்தில் தேவியின் பிறப்பு, அன்பு மற்றும் பக்தியின் அற்புதமான வெளிப்பாடாகும். இது பெண்தன்மை வழிபாட்டை உயிர்ப்புடன் வைத்திருக்கும் இந்த கலாச்சாரத்தின் செழுமைக்கான அஞ்சலியாகும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
நேபாளத்தில் லிங்கபைரவி தேவி கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பான தருணத்தை குறிக்கும் விதமாக மார்ச்-9 ஆம் தேதி அன்று அங்குள்ள கன்டிபத்தில் உள்ள துண்டிகேலில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை "தேவி உற்சவம்" என்ற நிகழ்வு நடைபெறவுள்ளது. இப்பைரவி உற்சவம் சத்குரு யூடியூப் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.
பைரவி உற்சவத்தை நேரலையில் காண:- https://www.youtube.com/watch?v=PSlrccb6bXI
இந்நிகழ்வில் இசை, நடனம், மற்றும் பக்தி ஆகியவற்றை வெளிபடுத்தும் ஆழமான கலாச்சார கொண்டாட்டம் நடைபெறவிருக்கிறது. இது லிங்கபைரவியின் தீவிரமான ஆற்றல் மற்றும் அருளில் உறைவதற்கும் அனுபவிப்பதற்குமான வாய்ப்பை வழங்குகிறது. இந்த வேளையில், சத்குரு நடத்தவிருக்கும் சிறப்பு சத்சங்கத்தில் தேவியின் பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்துவதோடு, பங்கேற்பாளர்களுக்கு சக்தி வாய்ந்த தியானங்களையும் வழிநடத்துகிறார்.
நேபாளத்தில் உள்ள லிங்கபைரவி தேவி, இந்தியாவிற்கு வெளியே பிரதிஷ்டை செய்யப்பட்ட முதல் தேவி கோவில் ஆகும். இந்தியாவில் கோவை ஈஷா யோகா மையம், கோபிசெட்டிப்பாளையம், சேலம் மற்றும் புதுடெல்லி ஆகிய இடங்களில் லிங்க பைரவி கோவில்கள் அமைந்துள்ளன.
இந்த கோவில்கள் அனைத்தும் தனித்துவமான வகையில் பெண்களால் நிர்வகிக்கப்படுகின்றது. ஆண்கள், பெண்கள் என இருபாலரும் தேவியை தரிசிக்க வருகின்றனர் என்றாலும், பெண்கள் மட்டுமே கருவறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இவர்கள் வெவ்வேறு சாதிகள், மதங்கள் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.