search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் போலீஸ் அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
    X

    கோவையில் போலீஸ் அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

    கோவையில் போலீஸ் அருங்காட்சியத்தை ரிப்பன் வெட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். #TNCM #EdappadiPalanisamy
    கோவை:

    கோவை ரெயில் நிலையம் எதிர்புறம் போலீஸ் அருங்காட்சியகம் உள்ளது.

    1918-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம் ஆங்கிலேய ஆட்சியாளர் பெயரில் ‘ஹேமில்டன் கிளப்’ என அழைக்கப்பட்டு வந்தது.  1951-ம் ஆண்டு தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கட்டிடங்கள் பழுதடைந்த காரணத்தால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    2016-ம் ஆண்டு கோவை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த அமல் ராஜ் புதுப்பித்து காவல் துறையின் வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில் பல்வேறு பொருட்களை வைத்து அருங்காட்சியகமாக மாற்ற முயற்சி எடுத்தார். அதன்படி இங்கு ஏராளமான போர் கருவிகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.

    இந்த அருங்காட்சியகம் திறப்பு விழா இன்று நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு போலீஸ் அருங்காட்சியகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

    கோவை அரசு ஆஸ்பத்திரி சார்பில் விமான நிலையத்தில் நடந்த ரத்ததான முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அருகில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    பின்னர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த கார்கில் போரில் இந்திய ராணுவம் பயன்படுத்திய பீரங்கிகள், விடுதலை புலிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நீர் மூழ்கி கப்பல்கள், போலீஸ் ஆவணங்கள், சந்தன கடத்தல் வீரப்பன் மற்றும், மலையூர் மம்பட்டியானிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள், ராணுவ ஏவுகணை, காவலர்களுக்கு வழங்கப்பட்ட பதக்கம் ஆகியவற்றை பார்வையிட்டார்.

    விழாவில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி,  துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தமிழக போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன், கலெக்டர் ஹரிஹரன், மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யா, மேற்கு மண்டல ஐ.ஜி. பாரி, டி.ஐ.ஜி. கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி, மாவட்ட வருவாய் அலவலர் துரை ரவிச்சந்திரன், மாநகராட்சி துணை கமிஷனர் காந்திமதி, மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.

    விமான நிலையத்தில்  அ.தி.மு.க-வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.  முதலமைச்சரை வரவேற்று அவினாசி சாலையில் அ.தி.மு.க. கொடி கட்டப்பட்டிருந்தது. வரவேற்பு பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன. அருங்காட்சியக திறப்பு விழா முடிந்ததும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊட்டிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு நாளை(வெள்ளிக்கிழமை) மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

    முன்னதாக கோவை விமான நிலையத்தில் அரசு ஆஸ்பத்திரி சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.   #TNCM #EdappadiPalanisamy
    Next Story
    ×