search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் அதிமுக ஆட்சியை கலைக்க பா.ஜனதா திட்டம்: திருமாவளவன் பேட்டி
    X

    தமிழகத்தில் அதிமுக ஆட்சியை கலைக்க பா.ஜனதா திட்டம்: திருமாவளவன் பேட்டி

    முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அச்சுறுத்தி அவரை மாற்ற அல்லது தமிழக அரசை கலைக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். #thirumavalavan #admkgovt #incometaxraid

    திருவண்ணாமலை:

    சென்னை - சேலம் 8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருமாவளவன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், 8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

    அதை தொடர்ந்து திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    8 வழி பசுமை சாலைக்காக பல்வேறு எதிர்ப்புகள், போராட்டங்களை விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் நடத்தினாலும் அதனை கண்டு கொள்ளாமல், மக்களின் கோரிக்கைகளை கேட்காமல் மத்திய, மாநில அரசுகள் பிடிவாதமாக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. தமிழகத்தை தொழில் வளமுள்ள மாநிலமாக வலுப்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டுகிறதா? அல்லது மாநில அரசு முனைப்பு காட்டுகிறதா? என்று தெரியவில்லை.

    8 வழி சாலையின் அவசியம் குறித்து மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். 8 வழி சாலைக்காக வளங்கள் அழிக்கப்படுவது என்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடுபவர்களை காவல் துறையினரை கொண்டு கைது செய்வது, சமூக விரோதிகள் என கூறுவது, குண்டர் சட்டத்தில் அடைப்பது என்பது கண்டனத்துக்குரியது. இந்த திட்டம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை கேட்ட பின் இதனை நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும். இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    மத்திய அரசு காவிரி பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும், தேனி பகுதிகளில் நியூட்ரினோ திட்டத்தையும், தற்போது 5 மாவட்டங்களில் 8 வழி சாலை திட்டத்தையும் அமல்படுத்த ஆர்வம் காட்டி வருகிறது. தமிழகத்தின் இயற்கை வளங்கள் அழிக்கப்படும் நிலையில் மத்திய அரசு மாநில அரசின் மீது திட்டங்களை திணிக்கிறது. இதை எதிர்த்து பேச வலுவில்லாத நிலையில் தமிழக அரசு இருப்பது வேதனை அளிக்கிறது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே இடைவெளி ஏற்படுத்தும் நோக்கில் பா.ஜ.க. செயல்படுகிறது என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து கூறுகின்றனர். தமிழக அரசை பலவீனப்படுத்தும் வகையில் குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பா.ஜ.க. அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவது வேதனை அளிக்கிறது.

    வருமான வரித்துறை சோதனை நடத்துவதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. குறிப்பாக தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் தற்போது இணக்கம் இல்லை என்பது வருமான வரித்துறையினர் நடத்துகின்ற சோதனையில் இருந்து தெரிகிறது. தமிழக அரசுக்கு நெருக்கடி தரும் வகையிலும், தமிழக அரசியலில் ஒரு பதற்றத்தை உருவாக்கும் வகையிலும் மத்திய அரசு செயல்படுவது கண்டனத்துக்குரியது.

    இது மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உள்ள கசப்பை வெளிப்படுத்துவதாகும். எடப்பாடி பழனிசாமியை அச்சுறுத்தி அவரை மாற்ற அல்லது தமிழக அரசை கலைக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. அமித்ஷாவின் கருத்தின் அடிப்படையில் அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி கலைக்க முயற்சிக்கலாம். மத்திய அரசு ஏதோ உள்நோக்கத்தோடு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

    8 வழி சாலை குறித்து ரஜினி ஆதரித்து பேசுவது என்பது அதிர்ச்சியான செய்தியல்ல. தி.மு.க.வுடனான கூட்டணி கட்சிகளுடன் இணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி இயங்கும். இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே பயங்கரவாத இயக்கங்கள் ஏதுமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.  #thirumavalavan #admkgovt #incometaxraid

    Next Story
    ×