search icon
என் மலர்tooltip icon

    வணிகம் & தங்கம் விலை

    1,414 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்: ரூ. 9  லட்சம் கோடி இழப்பை சந்தித்த முதலீட்டாளர்கள்
    X

    1,414 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்: ரூ. 9 லட்சம் கோடி இழப்பை சந்தித்த முதலீட்டாளர்கள்

    • மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் கடந்த ஒரு மாதத்தில் 4302.47 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளது.
    • சென்செக்ஸின் 30 நிறுவனங்களில் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி பங்கு மட்டும் உயர்வை சந்தித்தது.

    இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இறங்கு முகமாகவே இருந்து வருகிறது. நேற்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 74,612.43 புள்ளிகளில் நிறைவடைந்திருந்தது.

    நேற்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனாவுக்கு எதிராக 10 சதவீத வரி விதிக்க இருப்பதாக தெரிவித்திருந்தார். இதனால் இன்று காலை வர்த்தகம் சுமார் 200 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் 74,201.77 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதன்பின் தொடர்ந்து இறங்குவதாகவே இருந்தது. இன்று அதிகபட்சமாக 74,282.43 புள்ளிகளில் வர்த்தகமானது. குறைந்தபட்சமாக 73,141.27 புள்ளிகளில் வர்த்தகமானது.

    இறுதியாக வர்த்தகம் முடிவில் சென்செக்ஸ் 1414.33 புள்ளிகளில் சரிந்து மும்பை பங்குச் சந்தை 73198.10 புள்ளிகளில் நிறைவடைந்தது. சுமார் 1.90 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

    மும்பை பங்குச் சந்தையின் மோசமான சரிவால் முதலீட்டார்கள் சுமார் 9 லட்சம் கோடி ரூபாய் இழந்துள்ளனர். மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மூலதனம் இன்று காலை 7.46 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 3.85 லட்சம் கோடி ரூபாயாக சரிந்தது.

    வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 556.56 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தது இந்த சரிவுக்கு முக்கிய காரணமாகும்.

    டெக் மஹிந்திரா, இந்துஸ்இந்த் வங்கி, மாருதி, ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், இன்போசிஸ், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, டைடன் பங்குகள் மிகப்பெரிய சரிவை சந்தித்தது.

    ஹெச்.டி.எஃப்.சி. வங்கி பங்கு மட்டும் இன்று 1.86 சதவீதம் (31.70 ரூபாய்) உயர்ந்துள்ளது. தற்போது இதன் பங்கு 1732.40 ஆக உள்ளது.

    சென்செக்ஸ் கடந்த ஐந்து நாட்களில் 2236.16 புள்ளிகளும், ஒரு மாதத்தில் 4302.47 புள்ளிகளும், 6 மாதத்தில் 9361.74 புள்ளிகளும் சரிந்துள்ளன.

    இதேபோல் இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று கடும் சரிவை எதிர்கொண்டுள்ளது. இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தகத்தில் 22545.05 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை 22433.40 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று அதிகபட்சமாக 22,450.35 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 22,104.85 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது.

    இறுதியாக 420.35 புள்ளிகள் குறைந்து நிஃப்டி 22124.70 புள்ளிகளில் நிறைவடைந்தது.

    Next Story
    ×