என் மலர்
உள்ளூர் செய்திகள்

பேட்டை வாலிபரை கொன்றவருக்கு 15 ஆண்டு ஜெயில் தண்டனை- நெல்லை முதலாவது கூடுதல் அமர்வு நீதிபதி உத்தரவு
- ஆத்திரம் அடைந்த மைதீன் அப்துல்காதர் ஜெய்லானியை கத்தியால் குத்தினார்.
- கொலை வழக்கு பதிவு செய்து மைதீனை பேட்டை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை பேட்டை பகுதியை சேர்ந்தவர் அப்துல்காதர் ஜெய்லானி (வயது 33). இவர் கடந்த 14-6-2015-ம் ஆண்டு தனது மனைவி மற்றும் நண்பரான யாசர்அராபத் ஆகியோருடன் வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது டி.வி.யை அதிக அளவு சத்தம் வைத்து பார்த்தாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பக்கத்து வீட்டை சேர்ந்த மைதீன் என்ற முகமது மைதீன் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த மைதீன் கத்தியால் அப்துல்காதர் ஜெய்லானியை சராமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 17-6-2015-ம் ஆண்டு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக பேட்டை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மைதீனை கைது செய்தனர். இதுகுறித்த விசாரணை நெல்லை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று அந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.
கொலை வழக்கில் கைதான மைதீனுக்கு 15 ஆண்டுகள் 1 மாதம் சிறைதண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி ஜெசிந்தாமார்ட்டின் உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கருணாநிதி ஆஜரானார்.