என் மலர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை மாவட்டத்தில் 9 மாதங்களில் 184 பேர் குண்டர் சட்டத்தில் கைது
- நெல்லை மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட மற்றும் மாநகர போலீஸ் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
- தொடர் வாகன தணிக்கை செய்யப்பட்டதோடு ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கை, குற்றப்பதிவேடு பின்னணி உடையவர்களை கண்காணிக்கும் பணியை தீவிரப் படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், அதனை தடுக்க நெல்லை மாவட்ட மற்றும் மாநகர போலீஸ் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கைது நடவடிக்கை
தொடர் வாகன தணிக்கை செய்யப்பட்டதோடு ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கை, குற்றப்பதிவேடு பின்னணி உடையவர்களை கண்காணிக்கும் பணியை தீவிரப் படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக ரவுடிகள், தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போக்சோ குற்றவாளிகள், தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் ஈடுபட்டு வருபவர்கள், கொலை வழக்குகளில் தொடர்புடை யவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
சைபர் கிரைம்
அதன்படி நெல்லை மாநகர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவித்தல், கொள்ளை, சைபர் கிரைம், போக்சோ உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என 52 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 9 மாதங்களில் நெல்லை மாவட்டத்தில் உள்ள தாழையத்து ரூரல், நாங்குநேரி, வள்ளியூர், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய 5 போலீஸ் உட்கோட்டங்களில் காவல்துறை அதிகாரிகளின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கை யின் கீழ் மொத்தமாக 132 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர் பகுதி முழுவதும் போலீஸ் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையின்படி 184 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.