என் மலர்
உள்ளூர் செய்திகள்
மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் சுற்றுலா வாகனத்தை வழிமறித்த 2 காட்டுயானைகள்
- யானை வாகனங்களை மறித்ததை பார்த்ததும் அதில் இருந்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
- அரைமணி நேரத்திற்கு பிறகு யானைகள் அங்கிருந்து வனத்திற்குள் சென்றன.
மேட்டுப்பாளையம்,
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான மேட்டுப்பாளையம் பகுதியில் காட்டு யானைகள், கரடி, சிறுத்தை, புள்ளிமான், காட்டெருமை அதிகளவில் வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா காடுகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாக மேட்டுப்பாளையம் வனப்பகுதி அமைந்துள்ளது.
இந்த வனப்பகுதி வழியாக கூட்டம் கூட்டமாக யானைகள் செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் 3-வது கொண்டை ஊசி வளைவில் வாகனங்கள் வழக்கம் போல சென்று கொண்டிருந்தன.
அப்போது 2 காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி, சாலையில் சுற்றி திரிந்தது. மேலும் அந்த வழியாக வந்த 2 சுற்றுலா வாகனங்களையும் யானைகள் வழிமறித்து நின்றன.
யானை வாகனங்களை மறித்ததை பார்த்ததும் அதில் இருந்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். வாகனத்தையும் அப்படியே நிறுத்தி விட்டனர். அரை மணி நேரத்திற்கும் மேலாக காட்டு யானை நகரமால் அங்கேயே நின்றது.
அரை மணி நேரத்திற்கு பிறகு யானைகள் அங்கிருந்து வனத்திற்குள் சென்றன. இதனால் மேட்டுப்பாளையம் -குன்னூர் மலைப்பாதையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.