என் மலர்
செய்திகள்
நாமக்கல் நகரில் பழைய டயர் கடை– பஞ்சர் கடைக்காரர்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு
நாமக்கல்:
சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்குமார் உத்தரவின்படி டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை முன்னிட்டு பழைய டயர் கடைக்காரர்கள், பஞ்சர் கடைக்காரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
எர்ணாபுரம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. பருவ மழை தொடங்கும் முன்பு கீழ்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பழைய டயர் கடைக்காரர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.
டெங்கு நோயை பரப்பும் ‘ஏடீஸ்’ கொசுவானது சுத்தமான நீரில் மட்டும் வளரக்கூடியது. டயர்கள் திறந்த வெளியில் கிடக்கும் பொழுது அதில் தேங்கும் மழைநீரில் ‘ஏடீஸ்’ கொசு மிகவும் வேகமாக உற்பத்தி யாகும் இடமாக உள்ளது.
டயர்களில் உள்ள மழை நீரை அகற்றுவது மிகவும் கடினம். எனவே பழைய டயர்களை மழைநீர் புகாதவாறு பாதுகாப்பான இடத்தில் அடுக்கி வைக்க வேண்டும்.திறந்த வெளியில் மழைநீர் படும்படியாக வைக்கக் கூடாது என்று பழைய டயர் வியாபாரிகளுக்கும், பஞ்சர் கடைக்காரர்களுக்கும் எடுத்துக் கூறப்பட்டது. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
இதில் எர்ணாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர்கள் முகம்மதுரபி, ராஜகணபதி, ராஜசேகர், பெரியசாமி ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.