என் மலர்
செய்திகள்
போலீசாருடன் கடும் வாக்குவாதம்: ரெயில் மறியலுக்கு முயன்ற 125 பேர் கைது
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை கண்டித்து ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மாநில துணைச் செயலாளர் அன்சாரி தலைமையில் 100–க்கும் மேற்பட்டோர் இன்று திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.
அவர்கள் ரெயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றபோது பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதில் போலீசாருக்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன் பிறகு மறியல் செய்ய முயன்ற 60 பெண்கள் உள்பட 125 பேர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
கைது செய்யப்பட்ட நிர்வாகிகள் தெரிவிக்கையில் காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும். உள்துறை அமைச்சர் தலைமையில் நாடாளுமன்றக்குழு காஷ்மீருக்கு சென்று மக்களின் கருத்து கேட்க வேண்டும்.
அரசு படைகளின் மனித உரிமை மீறல்களும், கொடூர அடக்குமுறைகளும் நிறுத்தப்பட வேண்டும். உயிரிழந்தோர் குடும்பத்துக்கும், காயமடைந்தவர்களுக்கும் நஷ்டஈடு வழங்க வேண்டும். நடந்த கலவரங்கள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து தாங்கள் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.