search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே இன்று அதிகாலை விபத்து: அடுத்தடுத்து மோதிய 5 வாகனங்கள், 10 பேர் காயம்
    X

    கோவை அருகே இன்று அதிகாலை விபத்து: அடுத்தடுத்து மோதிய 5 வாகனங்கள், 10 பேர் காயம்

    கோவை அருகே இன்று அதிகாலை நடந்த விபத்து 10 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து காரணமாக பைபாஸ் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கோவை:

    பெங்களூரில் இருந்து கோட்டயம் நோக்கி தனியார் டிராவஸ்ஸ் பஸ் ஒன்று நேற்று மாலை புறப்பட்டது.

    பஸ் இன்று அதிகாலை 3 மணி அளவில் கோவை எல் அன்ட் டி பைபாஸ் சாலையில் வடக்கு தோட்டம் அருகே சென்ற போது எதிரே வந்த லாரி மீது மோதியது.

    இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து சிதறியது. லாரியின் முன் பகுதி சேதம் அடைந்தது. இந்த விபத்தில் பஸ் டிரைவர் மற்றும் பயணிகள், லாரி டிரைவர் என 10 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து நடந்த சில நிமிடங்களில் லாரியின் பின்னால் லோடு ஏற்றிக் கொண்டு வந்த மற்றொரு லாரியும் மோதி சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்தது.

    இதேபோல பஸ்சின் பின்னால் வந்த லாரி ஒன்றும் பஸ் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் லாரியை சாலையின் இடது புறமாக இயக்கினார். இதில் லாரி சாலையோரம் சாய்ந்து நின்றது.

    அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக் கொண்ட நிலையில் பைபாஸ் சாலையில் வந்த மற்றொரு லாரி விபத்துக்குள்ளான லாரி மீது மோதியது. எனினும் இதில் லேசான சேதம் மட்டும் ஏற்பட்டதால் அந்த லாரி சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்று விட்டது.

    இந்த விபத்து காரணமாக பைபாஸ் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு செட்டிப்பாளையம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×