என் மலர்
செய்திகள்
ஆம்பூர் அருகே காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை
வேலூர்:
ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் எல்.மாங்குப்பம் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் சரத்குமார் (வயது 25). துத்திப்பட்டு பகுதியில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதே கம்பெனியில், உடன் பணிபுரிந்த ஒரு இளம்பெண் மீது சரத்குமார் மோகம் கொண்டார்.
இதனால் நாளடைவில் பிரகாஷ் ஒருதலை காதலில் விழுந்தார். தன்னுடைய காதலை, இளம்பெண்ணிடம் தெரிவிக்க பலமுறை முயன்று தோற்று போனார். சரத்குமாரின் காதலை ஏற்க மறுத்த அந்த இளம்பெண், அவரை உதாசீனப்படுத்தி உள்ளார்.
இதனால் சரத்குமார் மனமுடைந்து காணப்பட்டார். பெற்றோர், நண்பர்கள், சக ஊழியர்கள் என யாரிடமும் சரிவர பேசாமல் இருந்துள்ளார். எப்போதும், துருதுருவென விளையாட்டாக பேசி சுற்றித்திரியும் சரத்குமாரின் நடவடிக்கையில் மாறுதல் இருந்ததால், குடும்பத்தினர் நடந்ததை கேட்டுள்ளனர்.
அவரும், தனது காதல் தோல்வி பற்றி எடுத்துரைத்தார். குடும்பத்தினர், நண்பர்கள் தைரியம் கூறினர். ஆனால், வெறுப்பின் உச்சத்துக்கு சென்ற சரத்குமார் நேற்று நள்ளிரவு வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலையில் தூங்கி எழுந்த பெற்றோர், மகன் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ந்தனர். கதறி அழுது புரண்டனர். தகவலறிந்த உமராபாத் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சரத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பிட்ட வயதில் ஒருவர் காதல் வயப்படுவது இயல்பு. அதேபோல், தான் விரும்பும் பெண் காதலை ஏற்பதும், ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதும் அவருடைய விருப்பம்.
காதல் தோல்விக்கு தற்கொலை முடிவு கிடையாது. அதுபோன்ற சூழலில் குடும்பத்தினரை நினைத்து பார்க்க வேண்டும். சரத்குமாரின் வாழ்க்கை இன்னும் பல கட்டத்தை எட்ட வேண்டி உள்ளது. அதற்குள் அவர், தற்கொலைக்கு நாடியது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.