என் மலர்
செய்திகள்
திருவண்ணாமலை எஸ்.பி. ஆபீசில் காதல் ஜோடி தஞ்சம்
திருவண்ணாமலை:
வேட்டவலத்தை சேர்ந்த காதல் ஜோடி கிறிஸ்டோ இளவேனிர் (வயது 25), கீர்த்தனா (21) ஆகியோர் பாதுகாப்பு வழங்கக்கோரி திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
பின்னர் கீர்த்தனா போலீஸ் சூப்பிரண்டு பொன்னியிடம் அளித்த மனுவில், நான் பி.எஸ்சி படித்து முடித்துள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக கிறிஸ்டோ இளவேனிர் என்பவரை காதலித்து வந்தேன். நாங்கள் இருவரும் வேறு சாதி என்பதால் எனது பெற்றோர் எங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி இருவரும் தேவாலயத்தில் வைத்து நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம். இதையறிந்த எனது பெற்றோர் அடியாட்களுடன் என்னையும், கிறிஸ்டோ இளவேனிரையும் தேடி வருகிறார்கள்.
மேலும் எனது பெற்றோர் வேட்டவலம் போலீசில் என்னை கிறிஸ்டோ இளவேனிர் கடத்தி சென்றுவிட்டதாக புகார் அளித்துள்ளனர். எனது பெற்றோரிடம் இருந்து எனக்கும், எனது கணவர், அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.