என் மலர்
செய்திகள்
தேர்தல் விதிமீறல் வழக்கில் ஆஜராகாத திருமாவளவன்-நெப்போலியனுக்கு பிடிவாரண்டு
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நடிகர் நெப்போலியன், முன்னாள் காங்கிரஸ் எம்.பி.கே.எஸ்.அழகிரி, சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. சுபவீரபாண்டியன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் மீது பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி கணேஷ் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், முன்னாள் காங்கிரஸ் எம்.பி.கே.எஸ்.அழகிரி, சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் சுபவீரபாண்டியன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இந்த வழக்கு விசாரணையின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நடிகர் நெப்போலியன் ஆகியோர் நேரில் ஆஜராகவில்லை. இவர்களது தரப்பில் அவர்களது வக்கீல்கள் ஆஜராகினர்.
திருமாவளவனும், நெப்போலியனும் கோர்ட்டில் ஆஜராக முடியாதது குறித்து அவரது வக்கீல்கள் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இவர்களது மனுவை நீதிபதி கணேஷ் தள்ளுபடி செய்தார்.
மேலும் கோர்ட்டில் ஆஜராகாத திருமாவளவன் மற்றும் நெப்போலியன் ஆகியோருக்கு பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்தார். வழக்கு விசாரணையை ஜூலை 1-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.