search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லையில் டெங்கு காய்ச்சலுக்கு ஜவுளிக்கடை பெண் ஊழியர் பலி
    X

    நெல்லையில் டெங்கு காய்ச்சலுக்கு ஜவுளிக்கடை பெண் ஊழியர் பலி

    நெல்லையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த ஜவுளிக்கடை பெண் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பரவலாக டெங்கு காய்ச்சல் பல்வேறு இடங்களில் ஏற்பட்டு வந்ததால் சுகாதாரத்துறை மூலம் தீவிர தடுப்பு நடவடிக்கை எடுத்து வந்தனர். மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியும், டெங்கு புழு கண்டறியப்பட்ட வீடுகள், கடைகளுக்கு அபராதங்களும் விதிக்கப்பட்டன.

    நெல்லை மாவட்டத்தில் இதுவரை சுமார் 15 பேர் வரை டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது. பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு ஏற்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இங்கு டெங்கு காய்ச்சல் காரணமாக பலர் அனுமதிக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். சுமார் 5 பேர் வரை இங்கு டெங்கு காய்ச்சல் காரணமாக பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நெல்லை தச்சநல்லூர் அழகனேரியை சேர்ந்த பிரம்மு என்பவரது மகள் சாந்தி (24) என்பவருக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்பட்டு வந்தது. இவர் நெல்லையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு டெங்கு காய்ச்சல் என்று பரிசோதனையில் தெரியவந்ததால், இவரை பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை சாந்தி பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து சுகாதாரத் துறையினர் அழகனேரி பகுதியில் வேறு யாருக்கும் காய்ச்சல் உள்ளதா என்று தீவிரமாக பரிசோதனை நடத்தினர்.
    Next Story
    ×