என் மலர்
செய்திகள்
தென்காசி அருகே ஆட்டோ கவிழ்ந்து கல்லூரி மாணவிகள் உட்பட 4 பேர் காயம்
தென்காசி:
தென்காசியை சேர்ந்தவர்கள் புனிதா (வயது20), தனலெட்சுமி (18), ஜெனிபா (19). இவர்கள் தென்காசி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். நேற்று மாலை வழக்கம் போல கல்லூரி முடிந்து 3 பேரும் வீட்டிற்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவில் தென்காசி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அந்த ஆட்டோவை இடைகால் பகுதியை சேர்ந்த சக்திகுமார் (23) என்பவர் ஓட்டி வந்துள்ளார். தென்காசி-ஆய்க்குடி சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் இருந்த புனிதா, தனலெட்சுமி, ஜெனிபா மற்றும் ஆட்டோ டிரைவர் சக்திகுமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
உடனடியாக அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் பலத்த காயம் அடைந்த கல்லூரி மாணவி புனிதா மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews