என் மலர்
செய்திகள்
வள்ளியூர் அருகே விபத்து - புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டையை சேர்ந்தவர் அரிராமர் (வயது25). இவர் அப்பகுதியில் ஒரு சோப்பு கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருடன் அதேபகுதியை சேர்ந்த முத்துராஜ் (28) என்பவரும் வேலை செய்து வந்தார்.
இவர்கள் லோடு ஆட்டோவில் ஊர் ஊராக சென்று கடைகளுக்கு சோப்பு சப்ளை செய்வது வழக்கம். நேற்று வழக்கம்போல லோடு ஆட்டோவில் நாகர்கோவில் பகுதிக்கு சோப்பு சப்ளை செய்ய சென்றனர். பின்னர் இன்று அதிகாலை இருவரும் ஊர்திரும்பினார்கள். ஆட்டோவை அரிராமர் ஓட்டினார். ஆட்டோவில் முத்துராஜும் மற்றும் ராமலிங்கம் ஆகியோர் பயணம் செய்து வந்தனர். ஆட்டோ வள்ளியூர் அருகே ஏர்வாடி பாலம் பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக் குள்ளானது. இதில் ஆட்டோவின் முன்பகுதி நொறுங்கியது.
இடிபாடுகளுக்குள் சிக்கி அரிராமரும், முத்துராஜூம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். உடன் வந்த வாலிபர் காயத்துடன் உயிர்தப்பினார். இதுபற்றி வள்ளியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பலியான அரிராமர், முத்துராஜ் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பலியானவர்களில் முத்துராஜுக்கு திருமணமாகி 4 மாதமே ஆகிறது. விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 2 பேர் பலியான சம்பவம் அவர்களது ஊரான குருவன் கோட்டையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.