என் மலர்
செய்திகள்
சங்கரன்கோவிலில் கம்யூனிஸ்ட் நிர்வாகி மர்ம மரணம்
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் ராமசாமியாபுரம் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி (வயது 72) இவர் சி.ஐ.டி.யூ. முன்னாள் மாவட்ட செயலாளர். தற்போது விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளராக உள்ளார். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பல ஆண்டுகளாக தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றி வந்த மாடசாமி சமூக ஆர்வலரும் ஆவார். இவர் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பிரச்சனை உள்ள விஷயங்களை அவ்வப்போது கட்சிக் கூட்டங்கள் வாயிலாகவும் அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தல் வாயிலாகவும் தட்டிக்கேட்டு வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று சங்கரன்கோவில் பேருந்து நிலையத்திலிருந்து ரெயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் மாடசாமி மர்மமாக இறந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் அவரது உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். மேலும் மாடசாமி சில நோய்களால் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததால் இறந்திருக்கலாம் என அவர்கள் உறவினர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் பொதுமக்களுக்கான பிரச்சினையில் பல்வேறு விதமாக போராடி வந்த மாடசாமி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை முடித்து கொண்டு அவரது உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மாடசாமி மரணம் குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் மாடசாமி எப்படி இறந்தார்? என்பது தெரியவரும். இது குறித்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.