என் மலர்
செய்திகள்
சின்னாளபட்டி அருகே கட்டிடத் தொழிலாளி மர்ம மரணம்
சின்னாளபட்டி:
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே உள்ள முருகம்பட்டியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 34). இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், 2 பையன்களும் உள்ளனர். கட்டிட சென்ட்ரிங் வேலை செய்து வந்த செல்லப்பாண்டி சின்னாளபட்டி அருகே உள்ள கலிக்கம்பட்டியில் அப்துல்காதர் என்பவர் கட்டிவரும் வீட்டிற்கு கான்கீரிட் போடப் பட்டதை பிரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
மதியம் அந்த வீட்டிற்கு முன் கீழே விழுந்து கிடந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை சென்று பார்த்த போது எந்த ஒரு அசைவும் இன்றி இருந்துள்ளார். ஒரு கையில் சிராய்ப்பு காயம் மட்டும் இருந்துள்ளது. உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆம்புலன்சில் வந்த உதவியாளர்கள் செல்லபாண்டியை பரிசோதனை செய்த போது அவர் இறந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து சின்னாளபட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனிடையே மர்மமான முறையில் இறந்துகிடந்ததது முருகம்பட்டியில் இருந்த உறவினர்களுக்கு தெரியவந்து ஏராளமானவர்கள் கூடினர். அவர்கள் செல்லப்பாண்டி எப்படி இறந்தார் என்ற விபரம் தெரியாமல் உடலை எடுக்க கூடாது என கூறி போராட்டம் செய்தனர். போலீசார் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் செல்லப்பாண்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து சின்னாளபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.