என் மலர்
செய்திகள்
மதச்சார்பின்மை- கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட பாடுபடுவேன்: திருச்சி சிவா
திருச்சி:
தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி., உறுப்பினர் பதவிக்கு வருகிற 26-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் தி.மு.க. சார்பில் திருச்சியை சேர்ந்த திருச்சி சிவா எம்.பி., வேலூர் என். ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் ஆகியோரை வேட்பாளர்களாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதில் திருச்சி சிவா எம்.பி., 5-வது முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட உள்ளார். மீண்டும் வாய்ப்பு கிடைத்தது குறித்து அவர் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-
எனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கிய கட்சி தலைமைக்கும், தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தலைமைக்கும் கட்சிக்கும் ஆற்றவேண்டிய கடமைகள் நிறைய உள்ளது . தற்போது மதச்சார்பின்மையும், கூட்டாட்சி தத்துவமும் கேள்விக்குறியாக உள்ளது. ஜனநாயகத்திற்கு ஆபத்தான காலமிது. இந்தநிலையில் எனக்கு மீண்டும் பணியாற்ற கட்சித்தலைமை வாய்ப்பு வழங்கி உள்ளது.
பாராளுமன்ற அவையில் ஆற்ற வேண்டிய பணிகள் அதிகம் உள்ளன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளை பாராளுமன்றத்தில் எதிரொலித்து தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பாடுபடுவேன்.
ஏற்கனவே நான் பணியாற்றியபோது இந்திய அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் 22 மாநில மொழிகளை ஆட்சி மொழியாக்க தனிநபர் மசோதா கொண்டு வந்தேன். மேலும் ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் நியமிக்கக்கூடாது, அவர்களை கல்விப்பணியில் மட்டுமே நியமிக்க வேண்டும், ஜல்லிக்கட்டு போட்டியில் இருந்து நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டும் ஆகிய மசோதாக்களை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு கொண்டு வந்தேன்.
இது மட்டுமின்றி விதவைகளுக்கு மறு வாழ்வு சட்டம், டெல்லி யூனியன் பிரதேசத்தில் கவர்னரின் அதிகாரத்தை குறைக்கும் சட்டம், பெண்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை, திருநங்கைகளுக்கான சட்டம் என நான் கொண்டுவந்த தனிநபர் மசோதா கடந்த 10 ஆண்டுகளில் பாராளுமன்றத்தில் அதிகமான விவாதங்களில் எடுத்துக்கொள்ளப்பட்டது .
தொடர்ந்து பாராளுமன்றத்தில் தமிழகத்தின் பிரதிநிதியாக செயல்பட்டு மதச்சார்பின்மை , கூட்டாட்சித்தத்துவத்தை நிலைநாட்ட பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.