என் மலர்
செய்திகள்
திருப்பத்தூர் கலெக்டரிடம் மூலிகை முக கவசங்கள் ஒப்படைப்பு
திருப்பத்தூர்:
வேலூர் ஸ்ரீ புற்று மகரிஷி அமைப்பின் நிர்வாகி சித்த மருத்துவர் பாஸ்கரன் மூலிகைகளால் செறிவூட்டப்பட்ட முக கவசங்களை திருப்பத்தூர் கலெக்டர் சிவன் அருளிடம் வழங்கினார்.
இதுகுறித்து சித்த மருத்துவர் பாஸ்கரன் கூறியதாவது:- முக கவசங்களை மூலிகைக் கவசங்களாக உருமாற்றலாமா என திருப்பத்தூர் கலெக்டர் சிவன்அருள் ஆலோசனை கேட்டிருந்தார். அதன்படி, கிராம்பு, திருநீற்றுப் பச்சிலை, புதினா உப்பு, கற்பூரவள்ளி, மேலும் சித்த மருத்துவ ஆவி வடித்தல் முறையில் (பாரம்பரிய நுணுக்கங்கள்) தயாரிக்கப்பட்ட மூலிகைச் சாரங்களின் உதவியால் முகக்கவசங்கள் வாசனை கூட்டப்படுகிறது.
முக கவசத்தை அணிந்தவுடன் மூலிகைச் செறிவு நிறைந்த காட்டுக்குள் நுழைவதைப் போன்றதொரு உணர்வு ஏற்படும். தொண்டைப் பகுதியைத் தாண்டி மூச்சுக் குழாய் வரை மூலிகைகளின் நெடி நுழைவதை உணர முடியும்.
இவறறை கலெக்டரிடம் ஒப்படைத்தோம். கலெக்டரின் அலுவலகத்தில் இருந்த அனைத்து அரசு அலுவலர்களும் இக்கவசங்கள் மிகவும் பிடித்திருப்பதாக பாராட்டு தெரிவித்தனர். கலெக்டர் சார்பில் தரப்படும் 3 ஆயிரம் முகக்கவசங்களை மூலிகைக் கவசங்களாக மாற்றி, மாவட்டத்தில் அனைத்து கள பணியாளர்களுக்கும் இன்னும் சில தினங்களில் வழங்கப்படும் என்றார் அவர்.