என் மலர்
செய்திகள்
X
மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 4 ஆயிரம் பேர் கைது - போலீஸ் சூப்பிரண்டு அருளரசு பேட்டி
Byமாலை மலர்21 April 2020 10:52 PM IST (Updated: 21 April 2020 11:29 PM IST)
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறினார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி 2 சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களில் வெளியே சுற்றியதாக 3,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் சுமார் 4 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 6 நான்கு சக்கர வாகனங்கள் உள்பட மொத்தம் 2,300 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் 300 இருசக்கர வாகனங்கள் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன.
ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் இருசக்கர வாகனத்தில் வெளியே சுற்றுபவர்களை தடுக்கும் வகையில் மாவட்ட காவல்துறை சார்பில் ‘ஸ்மார்ட் காப்’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து தேவையில்லாமல் சாலைகளில் வாகனங்களில் சுற்றித்திரிவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் இதுவரை சட்ட விரோதமாக மது விற்பனை, சாராயம் காய்ச்சியது தொடர்பாக 183 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் 197 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் சாராயம் காய்ச்சியவர்கள் மட்டும் 20 பேர் ஆவார்கள். அவர்கள் மீது ஜாமீனில் வெளியே வர முடியாதபடி வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
69 லிட்டர் சாராயம், 300 லிட்டர் கள், 3,700 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு உள்ளது. சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த சுமார் 10 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 137 போலீசாருக்கு கொரோனா நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று அவர் கூறினார்.
Next Story
×
X