search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- டாஸ்மாக் ஊழியர் பலி

    தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் டாஸ்மாக் ஊழியர் பலியானார். மேலும் கணவன்-மனைவி-மகள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    கள்ளப்பெரம்பூர்:

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பூவலாங்குடி பாரத் நகரை சேர்ந்தவர் நெடுஞ்செழியன்(வயது 50). இவர் வல்லம் புறவழிச்சாலை அருகே உள்ள ஒரு மதுக்கடையில் மேற்பார்வையாளராக பணி புரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மதுக்கடையை மூடி விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வல்லத்தில் இருந்து செங்கிப்பட்டி நோக்கி சென்றார்.

    நெடுஞ்செழியன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளுக்கு முன்னால் செங்கிப்பட்டி அருகே உள்ள பழைய கரியப்பட்டியை சேர்ந்த கலைக்கோவன்(40), தனது மனைவி வைஜெயந்தி மாலா, மகள் அபிராமியுடன் மோட்டார் சைக்கிளில் திருமலைசமுத்திரத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு வந்து விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளார். தஞ்சை-திருச்சி சாலையில் செங்கிப்பட்டி அருகே உள்ள பள்ளி வளாகத்திற்கு எதிரில் திடீரென நெடுஞ்செழியன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், கலைக்கோவன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்த நெடுஞ்செழியன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். மேலும் கலைக்கோவன் அவருடைய மனைவி வைஜெயந்திமாலா, மகள் அபிராமி ஆகியோரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தனர்.

    விபத்தை பார்த்த அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கிப்பட்டி போலீசார், விபத்தில் பலியான நெடுஞ்செழியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×