என் மலர்
செய்திகள்
X
சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பம் வினியோகம்- கலெக்டர் தகவல்
Byமாலை மலர்23 July 2020 1:51 PM IST (Updated: 23 July 2020 1:51 PM IST)
சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுகிறது என்று கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் பிரிவைச் சேர்ந்த மதவழி சிறுபான்மையினர் இனத்தவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 2020-21-ம் ஆண்டில், கடன் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் மனுதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. அதன்படி, டாம்கோ மூலம் தனி நபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுகடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதில் பயன்பெற விண்ணப்பதாரர் 18 முதல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். சுய உதவிகுழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். மகளிர் திட்டத்தின் திட்ட அலுவலரால் தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ.98 ஆயிரமும், நகர்புறங்களில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் பயன்பெற சாதிச்சான்று, வருமானச் சான்று, பிறப்பிட சான்று நகல்கள், முன்னணியில் உள்ள நிறுவனம் ஒன்றிலிருந்து பெறப்பட்ட விலைப்புள்ளி, திட்ட அறிக்கை (பெரிய திட்டமாக இருந்தால் மட்டும்). குடும்ப அட்டை, ஆதார் அட்டை நகல், வங்கி கோரும் இதர ஆவணங்கள் மற்றும் அடமானத்திற்குரிய ஆவணங்கள் அளிக்க வேண்டும். தனி நபர் கடன் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை வழங்கப்படுகிறது. சுய உதவிகுழுவிற்கு ஒரு நபருக்கு ரூ. 1 லட்சம் வீதம் ஒரு குழுவிற்கு ரூ.10 லட்சம் கடனுதவி வழங்கப்படுகிறது.
எனவே இக்கழகத்தின் மூலம் வழங்கப்படும் கடனுதவி விண்ணப்பங்கள் மற்றும் இதர கடனுதவி விவரங்களை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தர்மபுரி இணைப்பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள் கிருஷ்ணகிரி மற்றும் அனைத்து நகர, மத்திய மற்றும் தொடக்க கூட்டுறவு வங்கி கிளைகள் ஆகியவற்றில் விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுகிறது. தகுதியானவர்கள் நேரில் பெற்று விண்ணப்பத்தை பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
X