என் மலர்
செய்திகள்
X
வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி - தஞ்சை உழவர் சந்தை, மீன்மார்க்கெட் மூடல்
Byமாலை மலர்23 July 2020 6:23 PM IST (Updated: 23 July 2020 6:23 PM IST)
வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து தஞ்சை உழவர் சந்தை, மற்றும் மீன்மார்க்கெட் மூடப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அதன்படி கடந்த சிலநாட்களுக்கு முன்பு காமராஜர் மார்க்கெட் வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அந்த மார்க்கெட் மூடப்பட்டது. இதையடுத்து தற்காலிகமாக புதிய பஸ் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதுவும் மூடப்பட்டது.
இந்த நிலையில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உழவர் சந்தை உள்ளது. இந்த சந்தையில் தஞ்சை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து வியாபாரம் செய்து வந்தனர். மேலும் இங்கு காய்கறிகள் குறைவான விலைக்கு கிடைப்பதால் மக்கள் கூட்டமும் அதிகமாக காணப்படும்.
கொரோனா ஊரடங்கு காரணமாக உழவர்சந்தையும் மூடப்பட்டது. பின்னர் காலை 6 மணி முதல் பகல் 9 மணி வரை மட்டும் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் உழவர்சந்தை வியாபாரியான ஒரத்தநாட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து உழவர் சந்தை மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. நேற்று முதல் இந்த உழவர் சந்தை 3 நாட்களுக்கு மூடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பலகையும் உழவர்சந்தை வாசலில் தொங்க விடப்பட்டுள்ளது. உழவர் சந்தை மூடப்பட்டதால் இங்கு கடை நடத்திவந்தவர்கள் அதன் அருகிலே கடைகளை போட்டு விற்பனை செய்து வருகின்றனர்.
தஞ்சை கீழவாசல் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான மீன்மார்க்கெட் உள்ளது. ஊரடங்கு காரணமாக இந்த மீன்மார்க்கெட்டும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. இன்று வரை மீன்மார்க்கெட் திறக்கப்படவில்லை. இதையடுத்து இங்கு மொத்த மீன் வியாபாரம் செய்த வியாபாரிகள் இந்த மார்க்கெட்டிற்கு முன்பு கடைகளை அமைத்து மொத்த வியாபாரம் மட்டும் செய்து வந்தனர்.
இந்த நிலையில் இங்குள்ள வியாபாரி ஒருவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் மேலும் 4 வியாபாரிகளுக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் கொரோன பரவலை தடுக்கும் வகையில் மீன்மார்க்கெட் கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டனர். அதன்படி நேற்று முதல் மீன்மார்க்கெட் கடைகள் மூடப்பட்டன. அங்கிருந்த வியாபாரிகள் தங்களது பொருட்களை வேறு இடங்களுக்கு எடுத்துச்சென்றனர்.
Next Story
×
X