என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
செய்திகள்
![அடுக்கம்பாறையில் ரஞ்சித்தின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம். அடுக்கம்பாறையில் ரஞ்சித்தின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.](https://img.maalaimalar.com/Articles/2020/Nov/202011171954538265_Tamil_News_Tamil-news-Adukkamparai-near-Relatives-road-strike-for_SECVPF.gif)
X
அடுக்கம்பாறையில் ரஞ்சித்தின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக்கூறி வாலிபர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
By
மாலை மலர்17 Nov 2020 7:54 PM IST (Updated: 17 Nov 2020 7:54 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
வேலூர் அருகே வாலிபர் சாவில் சந்தேகம் இருப்பதாகக்கூறி உடலை வாங்கமறுத்து, அடுக்கம்பாறை மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அடுக்கம்பாறை:
வேலூர் அடுக்கம்பாறையை அடுத்த ஆற்காட்டான் குடிசை கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு. இவருடைய மகன் ரஞ்சித் (வயது 26). இவர் நேற்று காலை வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரஞ்சித் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரஞ்சித்துக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர்களுக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக தகராறு நடந்துள்ளது. இந்த நிலையில் ரஞ்சித் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுதொடர்பாக ரஞ்சித்தின் உறவினர்கள் வேலூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தனர். அதில் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர்.
நேற்று காலை 11 மணி அளவில் ரஞ்சித்தின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். ரஞ்சித் சாவில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை ரஞ்சித்தின் உடலை வாங்க மாட்டோம் என கூறி அவர்கள் வேலூர்- திருவண்ணாமலை சாலையில் மறியல் செய்தனர்.
தகவலறிந்த வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் 108 ஆம்புலன்ஸ்கள் செல்வதற்கும் வழியில்லாதபடி வாகனங்கள் வரிசையாக நின்றது. இதனால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
×
X