search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கான மேடை அமைக்கும் பணியை கடம்பூர் ராஜூ பார்வையிட்ட காட்சி.
    X
    எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கான மேடை அமைக்கும் பணியை கடம்பூர் ராஜூ பார்வையிட்ட காட்சி.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை தூத்துக்குடி வருகை

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்துக்காக நாளை (புதன்கிழமை) தூத்துக்குடி வருகை தருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அ.தி.மு.க.வினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
    தூத்துக்குடி:

    தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மாவட்டம் தோறும் தீவிர தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதன்படி ஏற்கனவே தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரசாரத்தை முடித்து உள்ளார்.

    நாளை (புதன்கிழமை) தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் அன்று காலை 10.15 மணிக்கு வாகைகுளம் விமான நிலையத்துக்கு வருகிறார். தொடர்ந்து காலை 11 மணிக்கு ஸ்ரீவைகுண்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    மதியம் 12 மணிக்கு அவர் திருச்செந்தூரில் மகளிர் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். தொடர்ந்து 1 மணிக்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மாப்பிள்ளையூரணியில் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு கூட்டத்தில் பேசுகிறார்.

    மாலை 6 மணிக்கு தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இதையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கடம்பூர் ராஜூ, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். பிரசார பொதுக்கூட்டத்துக்கான மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதேபோன்று பிரசாரம் நடைபெறும் இடங்களில் வரவேற்பு அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

    அந்த இடங்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ, எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×