என் மலர்
செய்திகள்
குமரியில் கனமழை நீடிப்பு- ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
நாகர்கோவில்:
தெற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
மாவட்டம் முழுவதும் நேற்று இரவும் இடைவிடாது பலத்த மழை பெய்தது. நாகர்கோவிலில் இரவு விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் கோட்டார் சாலை அவ்வை சண்முகம் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது .
மயிலாடி கொட்டாரம் பகுதிகளிலும் கனமழை பெய்தது. மார்த்தாண்டம், திருவட்டாறு, பொன்மனை இரணியல், குளச்சல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இன்று காலையிலும் மழை பெய்து கொண்டே இருந்தது.
தொடர் மழையின் காரணமாக குழித்துறை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. குழித்துறை சப்பாத்துபாலத்தை மூழ்கடித்து வெள்ளம் செல்வதால் அந்த சாலையில் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோதையாறு, பறளியாறு, வள்ளியாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள வயல்வெளிகளிலும் தண்ணீர் புகுந்தது. தென்னந்தோப்புகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு மழை கொட்டியது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் பெய்த மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய தண்ணீரின் அளவு அதிகரித்தது. பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது.
பேச்சிப்பாறை அணை நிரம்பி வருவதையடுத்து அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 43.13 அடியாக இருந்தது. அணைக்கு 2485 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து உபரி நீராக 4242 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று காலை 60.75 அடியை எட்டியது. அணைக்கு 2212 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு 1 அணை நீர்மட்டம் 11.31 அடியாகவும், சிற்றார்2 அணை நீர்மட்டம் 11.42 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 16.80 அடியாகவும், மாம் பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 30.84அடியாக உள்ளது.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
பேச்சிப்பாறை அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்கு ஏற்ப உபரி நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் அணை கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.
தேங்காய்பட்டணம் அருகே ராமன்துறை பகுதியில் சூறைகாற்றுடன் மழை பெய்தது. சூறை காற்றிற்கு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ரெஜினா(வயது2) என்ற பெண் குழந்தை பலியானது.
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். கன்னிப்பூ சாகுபடி பணியை தற்பொழுது தொடங்கியுள்ளனர். சுசீந்திரம், பூதப்பாண்டி, அரும நல்லூர், பொத்தையடி உள்ளிட்ட பகுதிகளில் உழவு மற்றும் விதைப்பு பணிகள் நடந்து வருகிறது. விவசாயத்திற்கு தேவை யான விதைகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.