என் மலர்
செய்திகள்
செங்கீரைக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலை
காரமடை:
கோவை மாவட்டம், காரமடை பகுதிகளில் செங்கீரைக்கு போதிய விலை கிடைக்காததால் பயிர் செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இரும்புச்சத்து நிறைந்த செங்கீரையை காரமடை ஒன்றிய பகுதிகளில் பரவலாக விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். செங்கீரை சிவப்புத் தண்டங்கீரை எனவும் அழைக்கப்படுகிறது.
இக்கீரை 30 நாட்களில் அறுவடைக்கு தயாராக வளர்ந்து விடும். கேரள வியாபாரிகள் அதிக அளவில் இந்த கீரையை வாங்கிச் செல்வர். கிலோவிற்கு 13 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைத்து வந்தது. அதனால் காரமடை ஒன்றியத்தில் குறிப்பிட்ட விவசாயிகள் இக்கீரையை தொடர்ந்து பயிர் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் தற்போது கொரோனா காரணமாக கீரையை கேரள வியாபாரிகள் வாங்குவதில்லை. இதனால் கீரையைப் பயிர் செய்துள்ள விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தேரம்பாளையம் விவசாயி ராஜேந்திரன் என்பவர் கூறும்போது:-
செங்கீரை பயிர் செய்த 30 நாட்களில் இருந்து 45 நாட்கள் வரை தொடர்ந்து அறுவடை செய்யலாம். இதில் நல்ல லாபம் கிடைத்து வந்தது. கொரோனாவால் கேரள வியாபாரிகள் செங்கீரையை வாங்குவதை நிறுத்தி விட்டனர்.
இக்கீரையை வாசனைத் திரவியம் தயாரிக்கும் நிறுவனத்துக்கு கிலோ 7 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அவர்களும் தற்போது கீரையை அறுவடை செய்யாமல் விட்டுவிட்டனர்.
அதனால் விதை உற்பத்தி செய்ய கீரைச் செடி பெரியதாக வளர விடப்பட்டுள்ளது. கீரை நன்கு முற்றிய பிறகு அறுவடை செய்து வெயிலில் காயவைத்து விதைகளை தனியாக பிரித்து எடுக்க வேண்டும். இந்த வேலைகளைச் செய்ய அதிக ஆட்கள் தேவைப்படுகின்றனர். கூலி கொடுத்து கட்டுபடியாகாததாலும், கீரைக்கு போதிய விலை கிடைக்காததாலும் காரமடை பகுதியில் உள்ள விவசாயிகள் இதை சாகுபடி செய்யத் தயங்குகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.