என் மலர்
செய்திகள்
X
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 3.63 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது
Byமாலை மலர்28 Jun 2021 3:18 PM IST (Updated: 28 Jun 2021 3:18 PM IST)
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 63 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44 ஆயிரத்தை கடந்து உள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கையும் 410-ஐ தாண்டி உள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைய தொடங்கி இருந்தாலும், கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதற்கிடையே கொரோனாவுக்கு நிரந்தர தீர்வு தடுப்பூசி என்பதால் ஆங்காங்கே முகாம்கள் அமைத்தும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 2-ம் அலையில் உயிர்பலி அதிக அளவில் இருந்ததால் பொதுமக்களும் தடுப்பூசி போட்டு கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி போட்டு கொள்வதை பார்க்க முடிகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் நேற்று வரை 3 லட்சத்து 63 ஆயிரத்து 500 பேர் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளனர். 45 வயது முதல் 60 வயது உள்ளவர்களில் இணை நோய் இல்லாதவர்கள் 40,676 பேரும், இணை நோய் உள்ளவர்கள் 54,125 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 57,052 பேரும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1 லட்சத்து 13 ஆயிரத்து 46 பேரும் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளனர்.
2-வது அலையில் இறந்தவர்களில் பெரும்பாலான நபர்கள் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள். எனவே பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் அதிகரித்து உள்ளது. இதனால் ஒதுக்கீடு வரப்பெற்றால் உடனுக்குடன் தடுப்பூசி போட ஏற்பாடு செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story
×
X