என் மலர்
செய்திகள்
நெல்லையில் பெயிண்டர் அடித்துக்கொலை
நெல்லை:
நெல்லை மனக்காவலன் பிள்ளை நகர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் உத்தமசிங். இவரது மகன் ராஜாசிங் டேவிட் (வயது24). பெயிண்டர்.
இந்நிலையில் இன்று காலை பாளை திம்மராஜபுரம் சாலையில் மணிக்கூண்டு அருகே உள்ள குளத்து பகுதியில் ராஜாசிங் டேவிட் பிணமாக கிடந்தார். அவரது முகம் அடித்து சிதைக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்து சரவணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
கொலை செய்யப்பட்டு கிடந்த ராஜாசிங் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ் குமாரும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார்.
அங்கு மோட்டார் சைக்கிள் ஒன்றும், மதுபாட்டில்களும் கிடந்தது. இதனால் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்த போது ஏற்பட்ட பிரச்சினையில் ராஜாசிங் டேவிட் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-
உத்தமசிங் சந்திப்பு பகுதியில் உள்ள காய்கறி கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 4 மகன்கள். இதில் மூத்த மகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீரில் மூழ்கி இறந்து விட்டார்.
2-வது மகன் ராஜாசிங் டேவிட் தற்போது கொலை செய்யப்பட்டுள்ளார். மீதமுள்ள 2 மகன்கள் படித்து வருகின்றனர். ராஜாசிங் டேவிட் கடந்த சில ஆண்டுகளாக பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலை வழக்கில் ராஜாசிங் டேவிட் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், இதனால் அந்த முன்விரோதத்தில் ராஜாசிங் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால் போலீசார் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.